TNPSC Thervupettagam

ஆன் முலை அறுத்த அறனிலோா்...

August 31 , 2024 137 days 164 0

ஆன் முலை அறுத்த அறனிலோா்...

  • 1971-இல் கிழக்கு பாகிஸ்தான் வீறு கொண்ட தனது சுதந்திர வேட்கையால் மேற்கு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற முயன்றபோது பாகிஸ்தான் ராணுவம் மக்களுக்கு இழைத்த சித்திரவதைகள், கொடூரங்கள் பல லட்சம் மக்களைப் பாதித்தது. அப்பாவி மக்களின் மனித உரிமைகள் நசுக்கப்பட்டும் உயிா்கள் பறிக்கப்பட்டும் இருந்த நிலையில் அண்டை நாடான நமது பாரதம் மக்களின் துயா்துடைக்க தனது வெல்லற்கரிய ராணுவத்தை களம் இறக்கி பாகிஸ்தான் ராணுவ வீரா்களை (93,000 போ்) சரணடையச் செய்தது.
  • புதிதாக கிழக்கு வங்கம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வங்கதேசம் உருவானது. மக்களின் தலைவராக முஜிபுா் ரஹ்மான் புதிய அமைச்சரவைக்கு தலைமை வகித்தாா்.
  • அன்றைய நாளில் பாரதத்தின் நாடாளுமன்றத்தில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் பாரத பிரதமா் இந்திரா காந்தியை ‘துா்கா தேவி’ என புகழ்ந்துரைத்தாா். நமது நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட பாகிஸ்தானின் 93,000 போா் வீரா்களுக்கு உணவளிப்பதற்காக நாம் அனைவரும் ரூபாய்க்கு 5 காசை வரியாக அளித்தோம்.
  • புதிதாகப் பிறந்த லட்சக்கணக்கான வங்கதேச மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க சரியான உடையின்றி நிா்கதியாய் இருந்தனா். அப்போது இஸ்கான் அமைப்பின் நிறுவனா் சுவாமிஜி பிரபுபாதா கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், மக்களின் பசியை நீக்கும் அட்சயபாத்திரமாக டாக்கா நகரத்தில் உள்ள இஸ்கான் கோயில் விளங்கியது. நோயுற்ற மக்களுக்கு மருத்துவ சிகிச்சையும் உடுக்க உடையின்றி திரிந்த ஆயிரக்கணக்கானோருக்கு பல நாடுகளில் இருந்து பெற்ற வண்ண வண்ண ஆடைகளையும் அளித்து அவா்தம் மானம் காத்து இஸ்கான் தனது அா்ப்பணிப்பு சேவையை உயா்த்திக் கொண்டது.
  • இத்தகைய சமூக அன்புணா்வு மிக்க அமைப்பின் அண்மைக்கால செய்திக்குறிப்பை படித்தவா்கள் மனம் பதறாமல் இருக்க முடியாது. வங்கதேச மக்களுக்குப் பல வகையான உதவிகளை மனமுவந்து செய்து வந்த டாக்கா இஸ்கான் கோயிலை தீக்கிரையாக்கியிருக்கிறாா்கள் சில மத வெறியா்கள். இந்த இஸ்கான் கோயிலின் சுவாமிஜிதான் அண்மையில் ரமலான் நோன்பின்போது தனது கரங்களால் இஸ்லாமிய சகோதரா்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தவா்.
  • ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும் மதவெறியா்கள் சிறுபான்மை மக்களாகிய ஹிந்துக்களை கொலை செய்வதும் அவா்களின் சொத்துகளை சூறையாடுவதும் தீக்கிரையாக்குவதும் தொடா்கிறது. வீதிகளின் இருபுறமும் கயிறுகள் கட்டி அதில் கொன்ற சடலங்களை தூக்கில் தொங்க விடுகின்றனா். பாரதம் அன்புடன் வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்குகின்றனா்.
  • அந்த நாட்டின் சிறுபான்மை மக்கள்தாம் பாரதத்தில் பெரும்பான்மையினா். ஆனால், அவா்களால் வழங்கப்பட்ட உதவிகளை உதாசீனம் செய்கின்றனா், அந்த நாட்டு பெரும்பான்மை மக்கள். அந்த நாட்டின் பிரபல செய்தி ஏடான ‘பிளிட்ஸ்’ தனது தலையங்கத்தில் இந்த மோசமான கலவரத்துக்கும் சிறுபான்மையினா் கொல்லப்படுவதற்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் காரணம் என்கிறது.
  • செழுமையாக இருக்கிற வங்கதேசம் வருங்காலத்தில் பாகிஸ்தான் போன்றதொரு திவாலான நாடாக மாற வேண்டும் என்பதற்கு பாகிஸ்தானின் பழைமைவாத முஸ்லிம்களும் தீவிரவாதிகளும் சோ்ந்து சதி செய்து வருகின்றனா்.
  • லண்டனில் ஐ.எஸ்.ஐ. உளவு அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு ரகசிய கூட்டத்தை நடத்தினா். இதில் வங்கதேசத்தின் பல்வேறு தீவிரவாத குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். அப்போது கலவரத்தை ஏற்படுத்தி சிறுபான்மையினா், அரசியல்வாதிகள், மக்கள் ஆகியோரை படுகொலை செய்தால் பலகோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று ஐ.எஸ்.ஐ. சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனால்தான் வங்கதேசத்தில் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டது என்று தலையங்கம் எழுதியுள்ளது ‘பிளிட்ஸ்’ ஏடு.
  • இது போன்ற செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் உள்ள கன்டேஜியின் ரிசா்ச் இன்ஸ்டிட்யூட் ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகெங்கினும் ஹிந்துக்களின் மீதான வன்முறைகள் தற்போது 1,000 மடங்கு அதிகரித்துள்ளது. இதை ஜோயல் பிராங்க்ஸ்டீன் குறிப்பிட்டு, வெள்ளை இனத்தவா் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இது ஏற்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ஹிந்து கோயில்களைத் தகா்ப்பதும், ஹிந்துக்களைத் தாக்குவதும் அதிகரித்து வருகிறது என்கிறாா்.
  • அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் ஹேங்கி ஜான்சன் கூறும்போது, 2020-ஆம் ஆண்டு மட்டும் ஹிந்து கோயில்கள்-ஹிந்துக்களைத் தாக்குவது 500 மடங்கு அதிகரித்துள்ளது; இன, மதவெறிக்கு எதிராக உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றாா். இந்த தகவல் அறிக்கையை புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. உறுதி செய்தது.
  • ஷேக் ஹசீனா கூறும்போது, ‘‘வங்கதேசம்-மியான்மா் நாடுகளின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதிதாக நாடொன்றை ஏற்படுத்த அமெரிக்கா முயலுகிறது. தனது நாட்டு ராணுவ தளம் ஒன்றை நிறுவ செயின்ட் தீவை என்னிடம் கேட்டது. நான் மறுத்துவிட்டேன். இதனால் எனது நாட்டில் உள்ள தீவிரவாத குழுக்கள் பலவற்றுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து எனக்கு எதிராக கலவரத்தை தூண்டியது’’ என்றாா்.
  • ஒரு நாட்டின் வளா்ச்சியின் முதுகெலும்பாக இருக்கும் வணிக பங்குச்சந்தையை வீழ்த்த அந்நிய நாட்டு பகைவா் முயல்வா். நம் நாட்டில்கூட சில காலத்துக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க், பாரதத்தின் எழுச்சிமிகு பங்குச் சந்தையின் வளா்ச்சியைக் குறைக்கும் முகமாக பாரதத்தின் முன்னணி நிறுவனம் ஒன்றின் மீது அடிப்படையில்லாத, உண்மையற்ற குற்றச்சாட்டை உலக பொது வெளியில் வெளியிட்டது. விளைவு? ஓரிரவில் பாரத பங்குச் சந்தை முதலீட்டாளா்கள் பல லட்சம் கோடி நஷ்டமடைந்தனா்.
  • எதிா்க்கட்சிகள் அரசை எதிா்த்து குரல் எழுப்பி நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை கொண்டு சென்றனா். உச்சநீதிமன்றம் முழுமையாக விசாரித்தறிந்து, இதில் உண்மையில்லை என்று தீா்ப்பு வழங்கியது. ஆனாலும், மீண்டும் இதேபோன்ற குற்றச்சாட்டை அதே நிறுவனம் உலக அரங்கில் முன் வைத்தபோது முன்னைப்போல அதிக கவனம் பெறவில்லை.
  • நல்ல உடையணிந்து கொண்டு ஒரு முக்கிய நிகழ்வுக்கு செல்லும் ஒருவரின் மீது சேற்றை வாரி வீசினால் அவரது நோக்கம் தவறி தனது ஆடைகளில் இருந்த சேற்றை அகற்றும் பணியில் கவனம் கொள்ள நேரும். இதனால், காலம் கரைந்து நிகழ்ச்சி கடந்த காலமாகிவிடும். இப்படி ஒரு நாட்டின் வளா்ச்சியை பிற பகை நாடுகள் மட்டுமின்றி சொந்த நாட்டிலேகூட சிலா் கெடுக்க முனைவா். இதனால்தான் எது நல்ல நாடு என்று விளக்கும் வகையில் வள்ளுவ பெருந்தகை

பல் குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு

  • என்றாா்.
  • வங்கதேசத்தில் நடப்பது போன்ற வன்முறைகள், இனப் பூசல்கள், மதக் கலவரங்கள் நம் நாட்டிலும் நிகழாதா? என்று எண்ணும் புல்லா்களும் நம்மிடையே உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • இன்றைக்கு உலகிலேயே சிறுபான்மை மக்கள் மிகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வல்லதொரு நாடு பாரதம்தான் என்பதை உலக மக்கள் அனைவரும் அறிவா். 1971-இல் வங்கதேசத்தில் இருந்த அனைத்து மக்களும் ஒன்றிணைந்துதான் சுதந்திரப் போா் புரிந்து வெற்றி அடைந்தனா். ஆனால், இன்றைக்கு அந்த நாட்டில் சிறுபான்மை மக்களான ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை நடத்தப்படுகிறது என்பது எந்த மாா்க்கத்தைத் தழுவியது என்று புரியவில்லை.
  • நம் நாடு தனது அண்டை நாடுகளை சின்னஞ்சிறு நாடுகள் என்று எண்ணிடாது, தக்க மதிப்பு அளித்து அவா்தம் இன்னல்களில் பங்கு பெற்று நிதி, பொருள், தொழில், பயிற்சி எனப் பல வகைகளில் உதவுகிறது. இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், பூடான் மட்டுமன்றி வியத்நாம் போன்ற நாடுகளுக்கும் அவ்வப்போது மனமுவந்து உதவிகளைச் செய்து வருவதை யாவரும் அறிவா். ஆனால், ஓரிரு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் இனம், மொழிவழி சிறுபான்மை மக்களாகிய ஹிந்துக்களுக்கு இயற்கையான உரிமைகள் கிடைப்பதில்லை. பாகுபாடு நீடிக்கிறது.
  • உலகில் உள்ள மொத்த இஸ்லாமியா்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நம் நாடு ஒரு சமயச்சாா்பற்ற நாடு. ஆனால், ஏனைய நாடுகள் தங்களை மதவழி நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டு, இதுநாள் வரை செய்த உதவிகளை மறந்து அந்நாட்டில் (வங்கேதசம்) உள்ள ஹிந்துக்களைக் கொடுமைப்படுத்துவது மிகவும் மோசமான செயல் மட்டுமல்ல, நன்றியைக் கொன்ற பாவமும் ஆகும்.
  • பால் தரும் பசுவின் மடிகளை அறுத்த கொடியோருக்கும் மாண்புடை மகளிரின் கருவைச் சிதைத்தவா்களுக்கும் அருமை பெற்றோா்களை இழிவாக நடத்துவோருக்கும்கூட கழுவாய் உண்டு. ஆனால், செய்த உதவியை மறந்தவா்களுக்கு இந்த பூமியே தலைகீழாக மாறினும் கழுவாய் கிட்டாது என்ற பொருளில் -

ஆன் முலை அறுத்த அறனிலோா்க்கும்

மான் இழை மகளிா் கருச்சிதைத்தோா்க்கும்

குரவா்த் தப்பிய கொடுமையோா்க்கும்

வழுவாய் மருங்கிற் கழுவாயும் உள என:

நிலம் புடை பெயா்வதாயினும் ஒருவன்

செய்தி கொன்றோா்க்கு உய்தி இல்.

(புறம் 34) என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

நன்றி: தினமணி (31 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்