- கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தார்கள். அதனால், எப்படி நேரத்தைப் போக்குவது என்று தெரியாமல் இணையவழியில் படம் பார்ப்பது அல்லது கைபேசி, கணினி ஆகியவற்றில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவது என்று நேரத்தைச் செலவழித்தனர்.
- வெறும் பொழுதுபோக்குக்காகக் குறைந்த நேரம் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அதே விளையாட்டுக்காகப் பந்தயம் வைத்துப் பணம் கட்டி விளையாடும்போது அது சூதாட்டமாக மாறுகிறது. அதுதான் பிரச்சினை.
- ஒரு கட்டத்துக்குப் பின் பலரும் இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள். போதைப் பழக்கம்போல் விளையாட்டு மாறிவிட்டதால், பல விபரீதங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்கு எது உந்துசக்தியாக இருக்கிறது? அதாவது, ஒரு முறை பணம் கட்டி விளையாடும்போது எப்படியாவது வென்றுவிடலாம் என்ற ஆசை உந்தித் தள்ளுகிறது. ஒருமுறை அல்லது இரண்டு முறை வென்றும் விடுவார்கள்.
- அது இன்னும் கூடுதலாக இந்த விளையாட்டை விளையாடுவதற்கு ஊக்கமளிக்கிறது. இரண்டு முறை வென்றால், நான்கு முறை தோற்றுவிடுகிறார்கள். இப்படித் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கிறோமே என்று சுதாரித்துக்கொண்டு வெளியே வந்துவிடுவதுதான் நல்லது.
- ஆனால், அடுத்த முறை வென்றுவிடலாம், இன்னொருமுறை விளையாடிப் பார்க்கலாம் என்கிற விபரீதமான ஆசைதான் பணத்தையும் நிம்மதியையும் சில நேரத்தில் உயிரையும் இழக்க வழிவகுக்கிறது. மீண்டு வர முடியாத பள்ளத்தில் விழப்போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் தொடர்ந்து விளையாடும்போது, அதிகமான பணத்தை இழந்து, அதனால் மனச்சுமை ஏற்படுவதோடு கடன் சுமைக்கும் ஆளாக்கப்பட்டுப் பலரும் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
- இந்தியாவில் போக்கர், ஷீட்டிங் பைட்டர்ஸ், ஃப்ரீ பயர் போன்ற பல பெயர்களில் 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் செயலிகளும் இருக்கின்றன. இவற்றை டிஜிட்டல் ஜங்கிலி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஜங்கிலி கேம்ஸ், கே.பி.எம்.ஜி, ஆர்.ஜி.எம். போன்ற சர்வதேச நிறுவனங்கள் நடத்துகின்றன. இவை இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் மூலமாக ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன.
- பொதுவாக ஆன்லைன் விளையாட்டுகளை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று, ஆன்லைன் திறன் விளையாட்டு (Games of Skill); இரண்டு, வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டு (Games of Chance). தன்னுடைய திறமையைத் தெளிவாக வெளிப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளால் எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னிடம் திறமை இருக்கிறது அதைச் சரியாகப் பயன்படுத்துகிறேன் என்பதோடு முடிந்துவிடும்.
- அதில் ஒரு வெகுமதியும் வெற்றியுணர்வும் சேர்த்துக் கிடைக்கிறது. ஆனால், வாய்ப்பு அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டு சூதாட்டத்துக்கு இட்டுச்செல்கிறது. ஆன்லைன் விளையாட்டை விளையாடும்போது, முதலில் ஒரு சிறிய தொகையை வைத்து விளையாட்டு ஆரம்பிக்கிறது.
- பின்பு அதுவே சூதாட்டமாக மாறிவிடுகிறது. இந்தச் சூதாட்டத்தில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது, தோல்வி அடைவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. விளையாடும்போது வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை மட்டுமே மனதில் நிறுத்தி அதில் பலர் ஈடுபடுகிறார்கள். வெற்றி இலக்கை எப்படியாவது எட்டிப்பிடித்துவிடுவேன் என்கிற வைராக்கியம், பிடிவாதம் எல்லாம் அவரை உந்தித் தள்ளுகின்றன. பிறகு கடன் சுமை என்ற பள்ளத்தில் விழ வைக்கின்றன.
- ஆன்லைன் விளையாட்டின் ஆபத்தை உணர்ந்ததால்தான், மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்கள் பலரும் கடிதம் எழுதினார்கள். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் சமூகத்துக்கு ஆபத்தானவை; அதற்கு அடிமையாகிப் பலரும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்; பல இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது; எனவே, ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகக் கொடிய சமூக அரக்கனை விரைவில் ஒழிக்க வேண்டும் என்றும், இந்தியாவில் உள்ள 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் செயலிகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
- தமிழகத்திலும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வலியுறுத்தினார்கள். மனிதநேய ஆர்வலர்களும் இதைத் தடைசெய்வதற்கு வேண்டுகோள் விடுத்தார்கள். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்வது தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் பரிசீலித்து, தடை செய்யும் வழிமுறைகளை ஆராயக் கேட்டுக்கொண்டது.
- இதைத் தொடர்ந்து, பணத்தை வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டைத் தடைசெய்யும் நோக்கில் 2020, நவம்பர் 21 அன்று தமிழக அரசு ஒரு அவசரத் தடைச் சட்டத்தை உருவாக்கியது. அந்த அவசரச் சட்டத்தின்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். பணம் வைத்து விளையாடும் நபர்களின் கணினி, கைபேசி, மற்றும் அது தொடர்பான பிற உபகரணங்கள் பறிமுதல்செய்யப்படும். தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபதாரம் விதிக்கவும், 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கவும் அந்தச் சட்டம் வழிவகைசெய்தது.
- இந்த ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் சர்வதேச நிறுவனங்கள், தமிழக அரசு கொண்டுவந்த தடைச் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அவர்கள் வாதத்தின்படி இது திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு; சூதாட்டம் அல்ல என்று நீதிமன்றத்திலேயே கூறினர்.
- அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘ஆன்லைன் விளையாட்டுத் தடைச் சட்டம் அரசமைப்புக்கு விரோதமானது. மேலும், போதுமான காரணங்களின் அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்படவில்லை; உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைவிதிக்க முடியாது. ஆகவே, உரிய விதிமுறைகளுடன் கூடிய புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்று கூறித் தமிழக அரசின் சட்டத்தை ரத்துசெய்தது.
- நாகாலாந்து, சிக்கிம், கோவா போன்ற மாநிலங்கள் தெளிவான சட்டங்களையும் விதிமுறைகளையும் இயற்றி, எந்த ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதிப்பது, எந்த விளையாட்டுகளைத் தடைசெய்வது என்று தெளிவுபடுத்தியுள்ளன. இதுபோன்று ஒவ்வொரு மாநிலமும் ஆன்லைன் விளையாட்டு குறித்த சட்டங்களை இயற்ற வேண்டும்.
- தற்போது தமிழக அரசு, இது குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு கொடுக்கும் அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருக்கிறது. இந்தச் சமயத்தில் மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு குறித்த எந்த விளம்பரத்தையும் வெளியிடக் கூடாது என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
- எண்ணற்ற இளைஞர்களைச் சிக்க வைத்து, கடன் சுமைக்குள் தள்ளிவிட்டு, கடைசியில் அவர்களின் உயிரை மாய்த்துக்கொள்ள வைக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முற்றிலுமாகத் தடைசெய்வதற்கு ஏன் ஒரு சரியான சட்டம் இதுவரை கொண்டு வரப் படவில்லை? பணத்தாசை காட்டி மோசடி செய்யும் சர்வதேச முதலாளிகள் லாபம் பெறுவதற்காக நம் ஊர் இளைஞர்கள் ஏன் பலிகடா ஆக வேண்டும்?
நன்றி: தி இந்து (21 – 06 – 2022)