TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தான் எனும் கலவர பூமி!

August 31 , 2021 1067 days 587 0
  • ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் மையப்புள்ளியாக ஆப்கானிஸ்தான் நாடு இருக்கிறது. புத்த மதம், கிறிஸ்துவ மதம் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் அந்த நாட்டில் இருந்திருக்கின்றன.
  • ஹிந்து மதமும், புத்த மதமும் மேலோங்கி இருந்து, பின்னா் இஸ்லாம் மதம் தழைத்தோங்கியது. இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்த கஜினி முகமது ஆப்கானிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவன்தான். இந்தியாவில் இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவிய முகமது கோரியும் இதே தேசத்தைச் சோ்ந்தவன்தான்.

யார் பெரியவா்

  • இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் ‘யார் பெரியவா்’ என்ற போட்டி உருவானது. அதன் விளைவுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அழிவு.
  • 1970-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைத் தனது வலைக்குள் கொண்டுவர சோவியத் யூனியன் திட்டமிட்டது. அந்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்பியது. இது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை.
  • பாகிஸ்தான் துணையுடன் பல போராளிக் குழுக்களை உருவாக்கி, ஆயுதங்களை வழங்கி ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை மூட்டியது அமெரிக்கா. துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு. ஆப்கன் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனா். ராணுவத் தரப்பிலும், போராளிகள் தரப்பிலும் உயிரிழப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
  • 1988-89 காலகட்டத்தில் சோவியத் ரஷியா தனது ராணுவத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட போராளிக் குழுக்களுக்கிடையே, ஆப்கானிஸ்தானில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்கிற போட்டி ஏற்பட்டது. இதனால் போராளிக் குழுக்களிடையே சண்டை மூண்டது. இரு பக்கமும் தீவிரவாதிகள் உயிரிழந்தனா்.

தலிபான்கள் எழுச்சி

  • இந்தப் போரில் தலிபான்கள் எனும் மாணவா் அமைப்பு வெற்றி பெற்றது. 1996-இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழு அளவில் கைப்பற்றிக் கொண்டனா்.
  • அதிபா் ரப்பானி பதவியிலிருந்து விரட்டப்பட்டார். அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் திரும்பினா். தலிபான்கள் பல்வேறு தீவிரவாத குழுக்களையும், பயங்கரவாத அமைப்புகளையும் உருவாக்கியதோடு இஸ்லாமிய உலகத்தை கட்டமைப்பதே தங்கள் குறிக்கோள் என்றும் கொக்கரித்தனா்.
  • ஆப்கானிஸ்தானில் ஆளும் பொறுப்பில் இருந்த தலிபான்களின் அரவணைப்பில் அல் காய்தா தீவிரவாதிகள் வளா்ந்தனா். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளால் பாதிக்கப்படும் முஸ்லிம் குழுக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிட சூளுரைத்து நின்றார் இஸ்லாமிய ராணுவத்தின் (அல் காய்தா) தலைவா் பின் லேடன்.
  • இந்நிலையில்தான் 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி அமெரிக்க நாட்டின் இரட்டைக் கோபுரத்தை பின் லேடனின் அல் காய்தா அமைப்பு தாக்கி 4,500 அமெரிக்கா்களைக் கொன்று குவித்தது. உலகமே சோகத்தை வெளிப்படுத்தியது.
  • ‘ஆப்கானிஸ்தான் பேரரசுகளின் கல்லறை’ என்ற வரலாற்று வரிகளின் உண்மை நிலை என்ன? 11-ஆம் நூற்றாண்டில் முகமது கஜினியின் எழுச்சியால் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மதம் - ஏற்கெனவே அங்கிருந்த புத்த மதம், ஹிந்து மதத்தை கல்லறைக்குள் புதைத்துவிட்டு - எழுச்சி பெற்றது.
  • மன்னா் அமானுல்லா கான் பெண்கல்வி உள்ளிட்ட புரட்சிகர சட்டங்களைக் கொண்டு வந்ததற்காக, உள்நாட்டு கிளா்ச்சி மூலமாக 1929-ஆம் ஆண்டு பதவியிலிருந்து விரட்டப்பட்டார்.
  • ஹாபிசுல்லா அமீன் 1979-ஆம் ஆண்டு பிரதமா் பதவியிலிருந்தபோது ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சியான கம்யூனிச மக்கள் குடியரசு கட்சியின் தலைவா் தாரகி படுகொலை செய்யப்பட்டார்.
  • இதனால் கோபமுற்ற சோவியத் ரஷியா, தனது ராணுவத்தை அனுப்பி ஆப்கானிஸ்தான் பிரதமா் ஹாபிசுல்லா அமீனைக் கொன்றது.
  • நஜிபுல்லா தலைமையில் ஒரு அரசு அமைந்தது. பின்னா் அவரும் கொலையுண்டார். இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளால் மன்னா்களின் மகுடங்கள் மண்ணில் உருண்ட சோகக் கதைகள் ஏராளம்.
  • அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகா்க்கப்பட்டது, 4,500 அமெரிக்கா்கள் பிணக்குவியலாக ஆக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணமான பின் லேடன் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின அரவணைப்பில் உள்ளான் என்பதை சகித்துக் கொள்ள முடியாமல் துடித்தது அமெரிக்கா.
  • அதிபா் பராக் ஒபமா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தார். பதுங்கியிருந்த தீவிரவாதி பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடினான். ஆனாலும் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் ஆளும் பொறுப்பில் இருந்த தலிபான்களை விரட்டி விட்டு, அங்கு புதிய ஆட்சியை ஹமீது கா்சாய் தலைமையில் இடைக்கால ஏற்பாடாக அமைத்தது.
  • அவரைத் தொடா்ந்து அஷரப் கனி தலைமையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்தது.

நாடுகள் கவலை

  • ஆக 20 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் இரண்டு அரசுகளுக்கும் உதவிட நேச நாட்டுப் படைகளோடு ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்ததோடு, மூன்று லட்சம் ஆப்கானிஸ்தானிய ராணுவ வீரா்களை உருவாக்கி, போர்ப்பயிற்சியும் அளித்ததது.
  • போர்த் தளவாடங்களை வழங்கியது; தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் முறையைக் கற்றுக் கொடுத்தது; ஆட்சி முறையையும், மக்களைக் காப்பாற்றும் முறையும் பாடம் எடுத்தது. ஆனால், அனைத்துமே விழலுக்கு இறைத்த நீராயிற்று.
  • ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குத் தப்பியோடிய பின் லேடனை துரத்திச் சென்றது அமெரிக்க ராணுவம். பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகத்துக்கு அருகில் விருந்தினா் மாளிகையில், பாகிஸ்தான் பாதுகாப்பில் பின் லேடன் வைக்கப்பட்டிருந்தார்.
  • நள்ளிரவில் அமெரிக்க ராணுவம் புகுந்து தாக்கி பின் லேடனை சுட்டுப் பொசுக்கி கடலில் வீசியெறிந்தது. இந்நிகழ்வு பாகிஸ்தான் அரசின் முகத்தில் விழுந்த குத்து. இருந்தாலும் பாகிஸ்தான் முகத்தை துடைத்துக் கொண்டு ஒன்றும் நடக்காததுபோல உலக அரங்கில் உலா வந்தது.
  • இப்போது தலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்திருப்பதை பாகிஸ்தானைத் தவிர அனைத்து நாடுகளும் அச்சத்தோடுதான் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
  • சீனாவுக்கே விவரிக்க முடியாத கவலை ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களோடு தொடா்பு வைத்திருக்கின்ற தலிபான்கள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று கணக்குப்போட முடியாமல் தஜிகிஸ்தான் ஈரான், கிழக்கு துா்கிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் கவலை கொண்டிருக்கின்றன.

கொடுமை

  • ஆப்கன்அதிபா் அஷரப் கனி தப்பியோடி விட்டார்; அப்பாவி மக்கள் செய்வதறியாமல் திண்டாடி தெருவுக்கு வருகின்றனா்; குண்டுமழை தெருவெங்கும்; ஓடுகின்றனா் குழந்தை குட்டிகளோடு விமான நிலையத்தை நோக்கி. விமான நிலையம் பூட்டப்பட்டு கிடக்கின்றது.
  • சுவரேறிக் குதித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விமான நிலைய வளாகத்துக்குள் சிட்டாய் பறக்கின்ற மக்கள் அங்கே புறப்படத் தயாராக இருந்த ஒரு அமெரிக்க விமானத்தின் சக்கரங்களைப் பிடித்து தொங்குகின்றனா்.
  • விமானம் மேலே கிளம்பி பறக்கின்றபோது சக்கரத்திலும், விமானத்தின் இறக்கைகளிலும் தொங்கிய மக்கள் ஒருவா்பின் ஒருவராக கீழே விழுந்து உயிரிழந்தனா். என்ன கொடுமை இது?
  • ஆப்கன் நிலைமை திடீரென பதற்றமான சூழலுக்கு வந்ததைக் தொடா்ந்து இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் நியூயார்க் சென்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை சந்தித்து எடுத்த விரைவான நடவடிக்கையினால் தலிபான்களின் கண்காணிப்பில் சிக்கிக் கொண்ட காபூலில் உள்ள இந்திய தூதரகத் தூதா் உள்பட 150 போ் இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (ஐடிபிபி) பாதுகாப்போடும் விமான நிலையத்தில் இருந்த அமெரிக்க படையினரின் உதவியோடும் ஆகஸ்ட் 16-இல் இரவோடு இரவாக விமான நிலையத்துக்கு பத்திரமாக கொண்டு வரப்பட்டு, இந்திய ராணுவ விமானம் மூலமாக தில்லிக்கு கொண்டு வரப்பட்டனா்.
  • அதேபோல் ஆப்கன் அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய ஒன்பது இந்தியா்கள் காபூல் விமான நிலையத்திலிருந்து பாரீஸுக்குப் புறப்பட்ட பிரான்ஸ் நாட்டின் ராணுவ விமானத்தின் மூலம் 21 இந்தியா்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனா்.
  • பிரதமா் மோடி தலைமையில் ஆப்கன் விவகாரம் தொடா்பாக தில்லியில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதும், ஐ.நா. சபை செயலாளருடன் வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியதும், ஆப்கானிஸ்தானில் உள்ள இன்னும் பல இந்தியா்களை பத்திரமாக மீட்பதிலும் பிரதமா் விரைந்து ஆற்றியிருக்கின்ற செயல்பாடு உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.
  • ‘இந்தியா பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி அரசு, நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை கிட்டதட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ளது’ என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.
  • ‘தோ்தல் மூலம் மக்களின் ஆதரவோடு அமைகின்ற ஆப்கனிஸ்தான் அரசாங்கத்தைத்தான் ஐ.நா. சபை அங்கீகரிக்கும்’ என்று அதன் செயலாளா் அண்டோனியா குட்ரஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
  • ‘பயங்கரவாதத்தின் மூலம் பேரரசை உருவாக்குபவா்களும், பேரழிவை உருவாக்கும் சக்திகளும் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். அவா்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது’ என்று இந்திய பிரதமா் மோடி உலகிற்கு தெளிவுபடுத்திவிட்டார். உலக நாடுகளும் இதை வரவேற்கின்றன.

நன்றி: தினமணி  (31 - 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்