- ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறைக் காலத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைக்காகப் பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது கண்டிக்கத் தக்கது. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
- வாரயிறுதி, தொடர் விடுமுறை, பண்டிகைக் காலம் உள்ளிட்ட நாள்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்கதையாகிவிட்டது. கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பல தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்தாலும், அதற்கு அரசு செவி சாய்ப்பதில்லை. என்றாலும் குறைந்தபட்சம் பண்டிகைக் காலங்களிலாவது அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளில் ஆய்வுசெய்து, அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
- அந்த வகையில் ஆயுத பூஜை விடுமுறையின்போது கூடுதல் கட்டணப் புகார் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ்நாடு முழுவதும் 120 பேருந்துகள் பறிமுதல் செய்யப் பட்டன; இந்தப் பேருந்துகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. உரிய நேரத்தில் வரி செலுத்தாத பேருந்துகளுக்குக் கூடுதல் அபராதமும் விதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது; தேவையானதும்கூட.
- பறிமுதல் செய்யப்பட்ட பேருந்துகள் விடுவிக்கப்படாத நிலையில், பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. ஊருக்குச் சென்றவர்கள் ஊர் திரும்பவிருந்த நிலையில் வெளியான இந்த அறிவிப்பை நடவடிக்கைகள் மேற்கொண்ட அரசுக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டலாகவே கருத வேண்டியிருக்கிறது. குறிப்பாக, கூட்டநெரிசலும் தேவையும் அதிகமுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டது, பயணிகளை நம்பித் தொழில் நடத்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் பொறுப்பற்ற தன்மையையும் காட்டுகிறது.
- அரசு அதிகாரிகள் உடனே பேச்சுவார்த்தை நடத்தி விவகாரத்தைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும், தீராத பிரச்சினையாக உருவெடுத்துள்ள கட்டண உயர்வுக்குத் தீர்வு காணப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.எரிபொருள் விலை உயர்வு, சுங்கச் சாவடிக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் கட்டண உயர்வுக்குக் காரணமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்வைக்கிறார்கள்.
- தற்போதும் சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30% - 50% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் அரசுப் பேருந்துகளை விட ஆம்னி பேருந்துகள் ஓரளவு மேம்பட்ட வசதி உடையவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே,சற்றுக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதிலும் தவறில்லை. ஆனால், அப்படி வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும். விமானக் கட்டணம் அளவுக்குக் கட்டணத்தை உயர்த்துவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
- ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் நிலையில் அரசு இல்லை என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆம்னி பேருந்துகள் தனிப்பட்ட பயணிகளிடமிருந்து கட்டணத்தை நிர்ணயிக்கவோ வசூலிக்கவோ முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 2016இல் தீர்ப்பளித்தது. அது சார்ந்த மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக மக்களின் நலன் சார்ந்து சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 10 – 2023)