- அரசால் நடத்தப்படும் சுகாதார மற்றும் மருத்துவ நிலையங்கள் மிகவும் அதிகமான வேலைப்பளுவைச் சுமந்துகொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில், நம்முடைய பொது சுகாதாரக் கட்டமைப்பின் அடிப்படை அம்சங்களை மறுபரிசீலிப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
- ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு (primary health care) எனும் மையப்புள்ளியைச் சுற்றித்தான் நம் ஒட்டுமொத்த சுகாதார அமைப்பும் இயங்குகிறது. இந்தியாவில் ஆரம்ப சுகாதாரம், மருத்துவ வசதிகளை வழங்கும் பொறுப்பின் பெரும் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் துணைநிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- மார்ச் 2018 நிலவரப்படி, தேசிய அளவில் ஒவ்வொரு 10,000 மக்கள்தொகைக்கும் 1.39 சுகாதார நிலையங்களே இருந்தன. தேவையைவிட, 32,900 துணைநிலையங்களும் 6,430 ஆரம்ப சுகாதார நிலையங்களும் குறைவாகவே உள்ளன.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை 46% என்பது ஒருபுறம் இருக்க, பட்டம் பெற்று தற்போது மருத்துவம் பயில்பவர்களில் 74% பேர் நகரங்களில்தான் வாழ்கின்றனர்.
- இதனால், ஊரகப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்குத் தேவையான அளவில் மருத்துவ சேவைகள் கிடைக்காமல்போகின்றன.
- நாடு முழுவதும் உள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களில், நிரப்பப்படாமல் இருக்கும் மருத்துவர்களுக்கான இடங்களின் பங்கு 24.9%.
தனிநபர் ஆரோக்கியச் செலவு
- நாட்டின் மூலைமுடுக்குகளில் இருக்கும் பகுதிகள் உட்பட, பொதுமக்களுக்கும் சுகாதார அமைப்புக்கும் பாலமாக இருப்பவர்கள் 10,47,324 அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரப் பணியாளர்கள் (ஆஷா).
- இவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் இல்லாததால் அவர்களுடைய செயலூக்கம் பாதிக்கப்படுகிறது.
- 2017 நிலவரப்படி, இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் ஆரோக்கியத்துக்கும் ஆண்டுதோறும் அரசு செய்யும் செலவு ரூ.1,420.
- இது ‘பிரிக்ஸ்’ (BRICS) குழுமத்தின் மற்ற நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா செய்யும் செலவோடு ஒப்பிடும்போதும் சரி, இந்தியாவைவிட அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவோடு ஒப்பிடும்போதும் சரி, மிகக் குறைவானது. சீன அரசு ஆண்டுதோறும் அரசு ரூ.18,860 செலவழிக்கிறது.
- ‘பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்ச்’ ஆய்வின்படி, 2008-09 – 2019-20 காலத்தில் சுகாதாரத்துக்காக மத்திய, அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து செய்த செலவு, இந்திய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் சராசரியாக 1.2-1.6% மட்டுமே.
- சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்கிறது அரசியல் சாசனம். ஆனால், மாநில அரசுகளுக்கு வழங்குவதற்கென மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கு மத்திய பட்ஜெட்டிலிருந்து ஒதுக்கப்படும் தொகையின் பங்கு கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 0.3%-ஆக மட்டுமே இருந்துள்ளது.
- சுகாதாரம், மருத்துவத்துக்கான மத்திய அரசின் செலவு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.5%-ஆக இருக்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பட்ஜெட் வழியாக சுகாதாரத்துக்குச் செய்யும் செலவு 8%-ஐத் தாண்ட வேண்டும் என்றும் ‘தேசிய சுகாதாரக் கொள்கை’ (2017) பரிந்துரைக்கிறது.
- சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டில் 70% ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசின் ‘அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரத்துக்கான உயர்மட்ட நிபுணர் குழு’ (2019) பரிந்துரைத்துள்ளது.
தீர்வுகளை நோக்கி...
- பொது சுகாதாரம் என்பது பொருளாதார அறிஞர் பால் சாமுவேல்சன் சொன்னதுபோல் யாரும் விடுபட்டுப்போகாமல், ஒவ்வொருவருக்கும் தேவையான அளவில் கிடைக்கும் ஒரு ‘பொதுப்பண்டமாக’ (public good) இருக்க வேண்டும்.
- சுகாதாரம் எனும் உரிமையானது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு உறுதியளிக்கும் வாழ்வதற்கான உரிமையின் முக்கியமான அங்கம் எனும் புரிதலை உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் எடுத்துரைத்துள்ளது.
- ஆரம்ப சுகாதாரம் என்பது ஒவ்வொரு குடிநபரின் அடிப்படை உரிமை என்பதை வெளிப்படையாக அங்கீகரிக்கும் அரசியல் சாசனத் திருத்தம், காலத்தின் கட்டளை ஆகும்.
- சுகாதாரச் சீர்திருத்தத்துக்கு, பொதுத் துறை முதலீடு மிக முக்கியம். நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அரசு செய்ய வேண்டிய சுகாதாரச் செலவுகளுக்காக நிர்ணயிக்கும் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும்.
- இதற்கு உகந்த சட்டங்களை மாநில அரசுகளும் பிறப்பிக்க வேண்டும். ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை விரிவுபடுத்தும் முயற்சிக்கு ஆதரவளித்துப் பேசும் அதே நேரத்தில், ஊரக சுகாதார நிலையங்களில் மருத்துவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது முரண்பாடான நிதர்சனம்.
- ராஜஸ்தான், வங்கம் உட்பட 12 மாநிலங்கள் மருத்துவப் படிப்பு முடிந்த பின், கிராமப்புறங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கியுள்ளன. இதை ஆதரிக்கும் விதமாக 2019-ல் உச்ச நீதிமன்றம், நாடு தழுவிய சீரான கொள்கையை மத்திய அரசும் இந்திய மருத்துவ கவுன்சிலும் சேர்ந்து வடிவமைக்க வலியுறுத்தியுள்ளது.
மையப்படுத்தப்பட்ட மருந்து கொள்முதல்
- இலங்கையைப் போல மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்பச் சுழற்சி முறையில் இடமாற்றமும், சொந்தமாக மருத்துவ சேவை புரிய அனுமதியும் கிராமப்புறங்களில் அவர்களை சேவை புரிய ஊக்குவிக்கும். ஆஷா பணியாளர்களை அரசாங்க ஊழியர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கும் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பலன்களை வழங்கலாம்.
- 2011-12-ல் 3.8 கோடிப் பேர் தங்கள் கைகளிலிருந்து பணம் செலவழித்து மருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். மக்களை இந்த அவலத்திலிருந்து காப்பாற்ற, தமிழகம் மற்றும் கேரளம் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் மையப்படுத்தப்பட்ட மருந்து கொள்முதல் முறையை முன்மாதிரியாக மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தலாம்.
- மக்களுக்கு மருந்துகள் சுலபமாகவும் மலிவான விலையிலும் கிடைக்க இது வழிவகுக்கும்.
- பொது சுகாதாரத்தில் அரசு முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் எனும் வாதத்துக்கு கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பல உலக நாடுகளின் அனுபவங்கள் வலுசேர்த்துள்ளன.
- ஆரம்ப சுகாதாரம் என்பது இயன்றவரை பிரத்யேகமான முறையில் அரசாங்கத்தால் மட்டுமே வழங்கப்படுவது இன்றியமையாதது.
நன்றி: தி இந்து (16-06-2020)