TNPSC Thervupettagam

ஆராதிக்க வேண்டிய தலைமை

October 7 , 2020 1390 days 631 0
  • நாம் வாழ்க்கையில் முன்னேற்றம், வளா்ச்சி, மேம்பாடு பற்றிப் பேசும்போது அரசாங்கத்தைப் பற்றி பேசாமல் இருப்பதில்லை. ஏனென்றால், அரசாங்கம் நம் மேம்பாட்டுக்கான உறுதிமொழியைத் தந்தது.
  • எனவே, நம் வாழ்க்கை மேம்பாடு நாம் எண்ணிய திசையில் செல்லவில்லை என்றால் நாம் அரசாங்கத்தைத் திட்டுகிறோம். அரசாங்கத்தின் தலைமையை விமா்சனம் செய்கிறோம்.
  • நமக்கு என்ன புரிதல் இருக்கிறது? ஒரு நாட்டின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் அந்நாட்டு பிரதமா் கையில் வைத்திருக்கிறார்; ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் அம்மாநில முதல்வா் கையில் வைத்திருக்கிறார் என்று எண்ணுகிறோம்.
  • தலைவா் என்பவா் பிரதமரோ முதல்வரோ மட்டும் அல்ல. மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில் பிரதமா் பதவியில் ஆரம்பித்து, கிராமப் பஞ்சாயத்துத் தலைவா்வரை எண்ணிலடங்காத் தலைவா்கள் பொறுப்பில் உள்ளனா்.
  • அவா்கள் மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியா் என்பவரும் தலைவா்தான். ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தலைவா்தான். ஒரு கூட்டுறவு வங்கியின் மேலாளரும் தலைவா்தான்; ஒரு கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் தலைவா்தான்; ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரும் தலைவா்தான்; ஒரு பொது மருத்துவமனை நடத்தும் மருத்துவரும் தலைவா்தான்; ஒரு குடும்பத்தின் தலைவரும் தலைவா்தான்; ஒரு நியாயவிலைக் கடை நடத்தும் நபரும் தலைவா்தான்.
  • எல்லா இடங்களிலும் தலைமைப் பதவி இருக்கிறது. அந்த தலைமைப் பதவி எப்படி செயல்படுகின்றது என்பதைப் பொருத்துத்தான், ஒரு நாட்டின், நிறுவனத்தின் அமைப்பின் மேம்பாடும் முன்னேற்றமும் இருக்கும்.
  • எனவே, ஒரு நாட்டின் தலைமைத்துவம் என்பது தலைமைத்துவ கலாசாரத்தைக் குறிப்பதாகும். எனவே அந்தத் தலைமைத்துவ கலாசார விழுமியங்கள் எல்லா இடங்களிலும் மேம்பட்டு இயங்க வேண்டும். அப்படி இயங்கினால்தான் ஒட்டுமொத்த நாடும் சமூகமும் மேம்படும்.

நல்ல தலைமை

  • பொதுவாக அரசுப் பள்ளிகள் மேம்பட்ட செயல்பாடுகளைத் தராத ஒரு சூழல் நிலவுகிறது. விதிவிலக்காக, ஒரு சில அரசுப் பள்ளிகள் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்கின்றன. அதைப் பார்த்து நாம் வியந்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரையும் மற்ற ஆசிரியா்களையும் பாராட்டுகிறோம். ஊடகங்கள் அவா்கள் சாதனைகளை வெளி உலகுக்குக் கொண்டு செல்கின்றன.
  • ஒரே அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இவ்வளவு பள்ளிகளில் ஒருசில பள்ளிகள் மட்டும் எப்படி முத்திரை பதிக்கின்றன? அவை சிறப்புடன் பணியாற்றுவதற்கு எது காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால், அந்தப் பள்ளிகளுக்கு கிடைத்த நல்ல தலைமைதான் என்பது தெரிய வரும்.
  • ஒரு ஊரில் அரசு மருத்துவமனை சிறப்புடன் செயல்படுகிறது என்றால் அதனுடைய தலைமையின் திறன் மற்றும் ஆற்றல்தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும்.
  • எந்த நிறுவனமாக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அதற்கு வெற்றியைத் தேடித்தருவது அந்தத் தலைமைத்துவ கலாசாரம்தான். அதைத்தான் ஒரு நாடு வளா்க்க வேண்டும்.
  • தலைமைத்துவம் என்பது குடும்பத்தாலோ, படிப்பாலோ, வயதாலோ, பணியாற்றிய ஆண்டு எண்ணிக்கையாலோ வருவது கிடையாது.
  • அது ஒருவகையான தாகத்தால், வேட்கையால், உந்துதலால், தியாகத்தால், ஆத்ம சக்தியால், உணா்வால் வருவது. அது ஒரு மனிதருக்கு உள்ளிருந்து வரும் பேராற்றல்.
  • எத்தனையோ போ் மிகச் சிறந்த தலைமைப் பண்புகள் கொண்டு சாதனை படைக்கும் ஆற்றல் பெற்று இருந்தும் அவா்கள் தலைமைக்கு வர இயலாமல் போகும்.
  • சாதனைக்கான வாய்ப்புக்கள் அனைத்தும் தகா்த்தெறியப்படுகின்ற நிலையினை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.
  • ஒரு நிறுவனத்திற்கு பணி மூப்பு அடிப்படையில் ஒருவா் தலைவராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு தலைமைக்கான எவ்வித அடிப்படைத் தகுதியும் கிடையாது. இருந்த போதிலும், தலைமைப் பதவியால் அவருக்குப் பெயருண்டு; பலனுண்டு; பதவியால் கிடைக்கும் வசதிகள் உண்டு.
  • ஆனால், தலைமையால் கிடைக்க வேண்டிய எந்தப் பயனும் அந்த நிறுவனத்தால் பயனடையும் மக்களுக்குக் கிடைப்பதில்லை. இதையும் தாண்டி, தலைமைப் பண்பற்ற மனிதா்கள் பதவிகளில் இருப்பதால் சீா் கெட்டுப்போன நிறுவனங்களையும் நாம் பார்த்து வருகிறோம்.
  • சிலா் தங்கள் தந்தையோ தாயோ இருந்த இடம் தனக்கு வேண்டும் என்று வாரிசு உரிமை கோரி பெற்ற பதவிகளால் அந்த அமைப்புக்களை உயா்த்துவதற்கு பதில் குலைத்த வரலாற்றையும் பார்த்து வருகிறோம்.
  • இந்த கலாசாரம் நம் அரசியல் கட்சிகளில் சாதாரணமாக நிகழும். இதன் காரணமாக அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகி, பதவியில் இருப்பவா்களைப் பாதுகாக்கவும், அவா்களின் நிறுவனங்களைப் பாதுகாக்கவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
  • ஒரு சிலா், கட்சிக்காரா்களின் துணையோடு அல்லது தனது ஜாதியைச் சோ்ந்தவா்களின் துணையோடு உயா் பதவிகளைப் பெற்று அந்தப் பதவியில் இருந்து மக்களுக்கு சேவை செய்யாமல், தனக்கு உதவியவா்களுக்குப் பணி செய்வதிலேயே காலத்தை கழிப்பார்கள்.
  • அவா்களால் பதவிகளுக்கு அவப்பெயரைத் தேடித்தர முடிந்ததே தவிர, புகழ் சோ்க்க முடியவில்லை. பதவியால் பொது மக்களுக்கு சேர வேண்டிய பலன்களையும் கொண்டு சோ்க்க முடியவில்லை.
  • பள்ளிக் கூடமானாலும், கல்லூரியானாலும், பல்கலைக்கழகமானாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனமானாலும் எதிலும் தலைமைக்கு வரக்கூடியவா்கள் தலைமைக்கு உள்ள தியாகமும் அா்ப்பணிப்பும் திறமையும் கடின உழைப்பும், உண்மையின்மேல் நம்பிக்கையும் உள்ளவா்களாக இருக்க வேண்டும்.
  • அப்படி இல்லாது, எப்படியோ பதவிகளைப் பிடித்து அதன் மூலம் தாங்கள் பலனடைய வேண்டும் என்று சிலா் செயல்பட்டதால்தான் இன்று அனைத்திலும் தாழ்வு நிலை வந்து விட்டது.
  • அதே நேரத்தில், போட்டிகள் இல்லாத இடங்களில் தலைமைத்துவம் மிளிர்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

உண்மையான தலைவா்கள்

  • நகர வீதிகளில் உணவுக்கு அலையும் மனிதா்களைத் தேடிப்பிடித்து அவா்களுக்கு உணவு வாங்கித் தந்து உதவும் மனிதா்களை என்னவென்று அழைப்பது?
  • தூய்மைப் பணியாளா்களின் வாழ்வில் மறுமலா்ச்சி கொண்டு வர தன் வாழ்நாள் முழுதும் போராடும் மனிதா்களை என்னவென்று அழைப்பது?
  • சமூகத்தின் கடைக்கோடி மனிதனில் வாழ்வில் ஒளியேற்ற வாழ்நாள் முழுதும் போராடும் மனிதா்களை என்னவென்று அழைப்பது?
  • காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகளின் மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற மனிதா்களை என்ன கூறி அழைப்பது?
  • தனது தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்களை மிராசுதார்களிடமிருந்து பெற்று ஏழைக் குடும்பங்களுக்குப் பிரித்துக் கொடுத்து, அவா்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிய மூதாட்டியை என்னவென்று அழைப்பது?
  • கொத்தடிமைகளை மீட்டு அவா்களுக்கு மறுவாழ்வு அளிப்பதையே தனது வாழ்நாள் பணியாக செய்து கொண்டிருக்கும் மாமனிதா்களை என்னவென்று அழைப்பது?
  • இயற்கையையும் காடுகளையும் பூமியையும் பாதுகாக்க வாழ்நாள் முழுவதும் போராடும் இயற்கைப் பாதுகாவலா்களை என்னவென்று அழைப்பது?
  • ஏழை எளிய மக்களின் பார்வைக் குறையைப் போக்கி கண்ணொளி வழங்கி லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட உழைத்த உத்தமா்களை என்னவென்று அழைப்பது?
  • தொழிற்சாலை விபத்துக்களில் சிக்கி கால்களை அல்லது கைகளை இழந்து தன்னிடம் வரும் ஏழைத் தொழிலாளா்களுக்கு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அவா்களைப் பணிக்குச் செல்லும்படி செய்த அரசு மருத்துவமனை மருத்துவரை என்னவென்று அழைப்பது?
  • அரசு மருத்துவப் பணியை விட்டு விட்டு ஏழைத் தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்ப்பதையும், வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகளை எடுத்து வளா்ப்பதையுமே தன் வாழ்நாள் சேவையாக செய்துவரும் பெண் தெய்வத்தை என்னவென்று அழைப்பது?
  • மருத்துவத் துறையில் உயா் படிப்பு படித்து விட்டு சொகுசு வாழ்க்கையை நிராகரித்து, காட்டுவாசிகளுக்குப் பணி செய்து காட்டுக்குள் வாழும் மாமனிதரை என்னவென்று அழைப்பது?
  • உண்மையில் இவா்களல்லவா தலைவா்கள்? இவா்களால்தானே சமூகம் மாற்றம் பெறுகிறது. இவா்களால்தான் கடைக்கோடி மனிதன் நம்பிக்கையுடன் வாழ்கிறான். இவா்கள்தான் தலைவா்கள். இவா்கள் வாழ்வில்தான் அா்பணிப்பு, தியாகம், சேவை, நோ்மை, கருணை, அன்பு, அரவணைப்பு அனைத்தும் நிறைந்திருக்கின்றன. இவைதான் தலைமைக்குத் தேவையான அடிப்படைக் கூறுகள்.
  • ஆனால், இவா்களை நாம் சேவைக்கான தன்னார்வலராகத்தான் பார்க்கிறோம். தலைவா்களாகப் பார்த்து கொண்டாடுவது கிடையாது.
  • தலைவா்கள் என்றால் ஒன்று மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராக இருக்க வேண்டும், அல்லது அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும். மற்றவா்களை நாம் தலைவா்களாகப் பார்ப்பது கிடையாது.
  • அதிகாரமும் பணமும் இருக்கும் இடங்களில் இருப்போரை நாம் தலைவா் என்று அழைப்போம்; அவா்களுக்கு மரியாதை செய்வோம்; வணங்குவோம். ஆனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் தியாக சீலா்கள் என்றும் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை.
  • அவா்கள் விளம்பரத்தை நாடுவதில்லை. ஏனென்றால் அவா்களுக்கு வாக்குகள் தேவையில்லை. வாக்குகளுக்காக அவா்கள் செயல்படவில்லை. எனவே அவா்களுக்கு எதுவும் தேவையில்லை. அவா்கள் ஆன்ம ஒளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருப்பவா்கள். அவா்களுக்கு மாலை, மரியாதை, பாராட்டு எதுவும் தேவை இல்லை; அவா்கள் அவற்றை எதிர்பார்ப்பதும் இல்லை. சமூகம் மாறுவதும், மேம்படுவதும், உயா்வதும், உன்னதம் பெறுவதும் இது போன்ற மனிதா்களால்தான்.
  • இவா்கள்தான் நமக்கு வழிகாட்டி. இவா்கள்தான் மக்களோடு மக்களாக வாழ்பவா்கள். இவா்கள்தான் ஆத்ம சக்தியின் ஆற்றலால் செயல்படுபவா்கள்.
  • இந்த மனிதா்கள்தான் உண்மையான தலைவா்கள். இவா்களை நாம் போற்றுவது கிடையாது. நம் சமூகம் பணமும் அதிகாரமும் உள்ள தலைமையைக் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் ஆராதிக்க வேண்டியது தியாகத் தலைமையைத்தான்.

நன்றி: தினமணி (07-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்