- அறிவியல்-தொழில்நுட்ப ஆராய்ச்சிகளிலும் மேம்பாட்டுப் பணிகளிலும் இந்தியா அதிகம் முதலீடு செய்வதில்லை என்ற குற்றசாட்டு நீண்ட காலமாகவே தொடர்ந்துவருகிறது. அதில் இன்னொரு முக்கிய அம்சம், தனியார்த் துறையின் பங்களிப்பு மிகவும் குறைவு என்பதாகும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
- இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அரசுத் துறை நிறுவனங்கள்தான் அதிகம் செலவிடுகின்றன. ஆராய்ச்சிகளுக்காகத் தனியார்த் துறை 2004-05-ல் 28%-ம், 2016-17-ல் 40%-ம் செலவிட்டன. வளர்ந்த நாடுகளிலெல்லாம் அரசு செலவழிப்பதைவிட தனியார் நிறுவனங்கள் அதிகம் செலவிடுகின்றன. ஆனால், இந்தியாவிலோ தனியார் தொழில் நிறுவனங்கள் ஒருசிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஒதுங்கியே நிற்கின்றன.
- அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வித் திட்டத்துக்குப் போதிய நிதி திரட்ட முடியாத சூழ்நிலையில்கூட இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் தயாரிப்பு, அணு சக்தி ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு நிதி வழங்கி முன்னுரிமை அளிக்கப்பட்டது. அறிவியல்-தொழில்நுட்பம் வளர்வதற்காக இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) நிறுவப்பட்டன.
- அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளியியல், வேளாண்மை தொடர்பாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நவீன சோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. தனியார்த் துறையின் பங்களிப்பு என்பதோ, பொதுப் பணத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் ஆராய்ந்து கண்டுபிடித்தவற்றில் சில மாற்றங்களைச் செய்வதாக மட்டுமே இருந்துவருகிறது.
தனியார் துறை
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தனியார்த் துறை எவ்வளவு நிதியை ஒதுக்குகிறதோ அதற்கு இணையான தொகையை ஒதுக்கி இத்துறையை வளர்ச்சிபெறச் செய்ய அறிவியல், தொழில்நுட்பத் துறை ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறது. இந்திய நிறுவனங்களும், இந்தியத் துணை நிறுவனங்களைப் பெற்றுள்ள வெளிநாட்டு நிறுவனங்களும் இணைந்து இந்தியக் கல்விக்கூடங்களில் அறிவியலாளர்களின் ஆய்வுகளுக்கு ரூ.40 கோடி அளிக்க வேண்டும் என்பது அந்த யோசனை. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார்த் துறையையும் ஈடுபடவைக்கும் முதல் முயற்சி இதுவல்ல; ‘இந்தியாவில் தொழில் தொடங்குவோம்’, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோதே அரசுத் துறைகளும், துணிகர முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களும் தங்களுடைய நிதிகளை ஒன்றுதிரட்டி ‘தொழில் தொடங்கும்’ திட்டங்களில் முதலீடுசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்த்தபடி இது அறிவுசார் சொத்துரிமைக்கான முதலீடாகத் திரளவில்லை.
எதிர்காலத் தொழில்நுட்பம்
- இந்திய ஆராய்ச்சிகளின் பெரும் பகுதி வரம்புக்குட்பட்ட நிறுவனங்களில் சிறு குழுக்களான அறிவியலாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அறிவியலாளர்களை ஆராய்ச்சிப் பிரிவில் ஏற்கும் ஆற்றல் தனியார் நிறுவனங்களில் மிகச் சிலவற்றுக்கு மட்டுமே இருக்கிறது. எதிர்காலத் தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சிகளில் அதிகம் முதலீடுசெய்யத் தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கு ஆர்வம் இல்லை.
- தனியார் நிறுவனங்கள் அப்படியே ஆராய்ச்சிக்குச் செலவிட்டாலும் கூட்டாகச் சேர்ந்து செய்கின்றனவே தவிர மத்திய அரசின் ஆய்வுத் திட்டங்களில் சேர்வதில்லை.
- தனியார் நிறுவனங்களும் அரசும் அதிக அளவில் நெருங்கிச் செயல்படாவிட்டால் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களால் மட்டும் அதிகப் பலன்கள் கிடைக்காது. தனியார்த் துறையினர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தங்களுக்கான பொறுப்பை இனிமேலும் தட்டிக்கழிக்கக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (06-03-2020)