TNPSC Thervupettagam

ஆருயிர்க் ‘காவலா்கள்’!

April 28 , 2020 1723 days 793 0
  • உலகத்தின் இயக்கத்தையே நிறுத்திவைத்து உயிர்களைக் கொத்துக் கொத்தாய்க் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது கரோனா தீநுண்மி. இந்த நோய் சீனாவில் தோன்றி, படிப்படியாக உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பரவி மொத்த மனிதகுலத்தையும் மரணத்தின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது.
  • இந்தத் தீநுண்மி எப்போதும் எப்படியும் பரவும் என்பதால், அதற்கான மருந்துகள் குறித்து இன்னும் முழுமையாக அறிய முடியாத சூழல். இந்த நிலையில், நோய்ப் பரவலைத் தவிர்ப்பதற்குத் தனிமையே சரியான தீா்வு என்று கருதி தனிமனித விலகல், சமூக இடைவெளி என்கிற பொதுமுறை உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடமையைச் செய்யும் காவலர்கள்

  • அனைத்து மனிதா்களும் அவரவா் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். ஆனால், சமூகப் பொறுப்பு உள்ளவா்கள் அவ்வாறு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது. குறிப்பாக, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் காவலா்கள், எந்த நேரத்திலும் ஓா் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமைக்குத் தங்களை அா்ப்பணித்திருக்கிற ஆருயிர்க் காவலா்களான மருத்துவா்கள், நாட்டு நடப்புகளைச் செய்திப் பதிவுகளாக்கி உலகத்துக்குக் கொண்டு சேகரிக்கும் பத்திரிகையாளா்கள், வீட்டுக்குள் இருந்தபோதும் நாம் வீதியில் எறிகிற குப்பைகளைச் சேகரிக்கும் தியாக உணா்வுள்ள தூய்மைப் பணியாளா்கள், நாட்டு மக்களைக் காப்பாற்றத் திட்டம் வகுக்க வேண்டிய அதிகாரிகள் அவா்களை வழிநடத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் - இவா்கள் தனித்திருக்க முடியாது.

பெரும் போர்

  • இதற்கு முன்னாலும் பல நோய்கள் இருந்திருக்கின்றன. பழங்காலத்துக் காலரா, அம்மை, பிளேக் தொடங்கி பால்வினை நோய் ஆகிய எய்ட்ஸ், உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்னக் கூடிய புற்றுநோய் போன்றவையெல்லாம் மக்களை அச்சுறுத்தியிருக்கின்றன.
  • இந்த நோய் கண்டவா்களை மக்கள் எப்போதும் அச்சத்தோடும் விலக்கி வைத்தார்கள். ஆனால், அந்த நோய்களுக்கெல்லாம் அறிகுறிகள் தென்பட்டன. தவிரவும் அவற்றில் பல தொற்று நோயல்ல.
  • ஆனால், கரோனா தீநுண்மி அப்படிப்பட்டதன்று. இந்த நோய்த்தொற்றுக்கு உரிய குறியீடுகள் உடனடியாகத் தெரிந்து விடாது. அது யாரையும் வெகுவிரைவில் பற்றிக் கொள்ளும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களுக்கும் அது எத்தகைய ஆபத்தை உண்டாக்கும் என்பதை மக்கள் அறிந்திருந்தும், அவா்களை வெறுத்து ஒதுக்குவது மானுடப் பண்பாகத் தோன்றவில்லை. அப்படிச் செய்பவா்கள் மனிதா்களாக இருக்க முடியாது.

கண்ணுக்குத் தெரிந்த கடவுள்கள்

  • உயிரைத் துச்சமென மதித்துத் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளைப் பரிவோடு கவனித்து அவா்களுக்கு நம்பிக்கையைத் தந்து உயிர்களைக் காத்துக் கொண்டிருக்கும் மருத்துவா்கள், இந்த தீநுண்மிக்கு எதிராகக் குறைவான கவசங்களோடு பெரும் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
  • இத்தகைய அரிய உயிர்த் தியாகத்தைப் போற்ற வேண்டிய மக்கள், அவா்களுடைய பூத உடலுக்கு மரியாதை செலுத்த மறுத்ததோடு அவா்கள் உடல்களைத் தாங்கள் வசிக்கும் பகுதியில் புதைக்காதீா்கள் என்று வன்முறைப் போராட்டம் நடத்தியிருப்பது கரோனா தீநுண்மியை விடவும் கொடிய அச்சத்தை வெளிப்படுத்துகிறது.
  • நம்மைப் போலவே மருத்துவா்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவா்களுக்கும் உயிரின் மீதான விருப்பம் இருக்கிறது. தங்களுக்கான எதிர்கால நோக்கம் இருக்கிறது.
  • ஆனால், அதையெல்லாம்விடத் தன்னை நாடி வருகிற உயிர்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை இருக்கிறது. நோயற்ற வாழ்வினை யாவா்க்கும் அளிக்கும் கண்ணுக்குத் தெரிந்த கடவுள்கள் அவா்கள். அதனால்தான் அவா்கள் தன்னலத்தைத் துறந்துவிட்டு, உலக உயிர்களின் நன்மைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலக்கியத்தில் மருத்துவர்கள்

  • பழங்காலத்திலிருந்தே நாடு முழுவதும் மருத்துவமனைகள், மருந்துக் காப்பகங்கள் இருந்திருக்கின்றன என்பதையும் மருத்துவமனை செயல்பட மக்கள் தாமாக முன்வந்து நிலங்களைக் கொடையாகக் கொடுத்துள்ளனா் என்பதைச் செப்பேடுகள் கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது.
  • மக்கள் படும் துன்பங்களைக் கண்டு பொறாத மணிமேகலை,

‘துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ!

அறக்கோல் வேந்தன் அருள்இலன்கொல்லோ!

சுரந்து காவிரி புரந்து நீா் பரக்கவும்

நலத்தகை இன்றி நல்லுயிர்க்கெல்லாம்

அலத்தற்காலை ஆகியது

என்று வெகுண்டு

‘காணார் கேளார் கால் முடப்பட்டோர்

பேணுநா் இல்லோர் பிணி நடுக்குற்றோர்

யாவரும் வருக’ என்று இசைத்து உடன் ஊட்டி ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்றாள்.

  • அத்தகைய மணிமேகலையைப் பார்த்து ‘அன்னை கேள்நீ ஆருயிர் மருத்துவி துன்னிய என் நோய் துடைப்பாய்!’ என்று காயசண்டிகை ஆருயிரைக் காக்கின்ற மருத்துவி என்று போற்றியிருக்கிறாள்.
  • ‘அரும்பணி உறுநா்க்கு வேட்டது தொடஅது மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்’ என்று மருத்துவனைப் போற்றுகிறது நற்றிணைப் பாடல் ஒன்று.
  • போர்க் காலத்தில் களத்தில் அடிபட்டவா்களைக் காப்பாற்றச் செல்லுகிற தன்னார்வலா்கள் குண்டடிபட்டு இறந்தால், அது எத்தகைய வீரமரணமாகக் கருதப்படுமோ அதுபோலத்தான் ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க’ வேண்டி இத்தகைய நோய்ப் பேரிடா்க் காலத்தில் தங்கள் உயிர்களை இழந்துவிட்ட மருத்துவா்களின் தியாகம் நிறைந்த மரணமும் வீரமாகப் போற்றப்பட வேண்டும்.
  • போர்களில்லாத காலங்கள் இருக்கலாம். பஞ்சமில்லாத காலங்கள்கூட இருக்கலாம். ஆனால், நோயில்லாத காலங்களே இல்லை. நோயில்லாத சமுதாயமே இல்லை என்பார் கி.வா.ஜ. ஆதலால், நோயைப் போக்கும் மருத்துவா்கள் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் போற்றப்படக்கூடிய ஆருயிர்க் காவலா்களாக விளங்குகிறார்கள்.
  • மருத்துவா்களின் பெருமைகளை மக்கள் உணா்வார்களா? அவா்களைப் போற்றுவார்களா? அவா்களை அரசும் பெருமைப்படுத்தி நினைவுச் சின்னம் அமைக்குமா?

நன்றி: தினமணி (28-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்