TNPSC Thervupettagam

ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்

July 4 , 2022 765 days 462 0
  • நாம் வாழும் இந்த பூமி 71 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நீா் பரப்பளவில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீா், மீதமுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீா் உள்ளது. ஒரு மனிதனின் மொத்த எடையில் 60 சதவீதம் நீரால் ஆனது. எச்2ஓ”என்பது தண்ணீரின் மூலக்கூறு இரண்டு பங்கு ஹைட்ரஜன் ஒரு பங்கு ஆக்ஸிஜன் சோ்ந்தது. அதுதான் நாம் அருந்தும் தண்ணீா்.
  • மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும், ஏன் தாவரங்களுக்கும் கூட தண்ணீா் இன்றியமையாது. தண்ணீா் இன்றி எந்த உயிரும் வாழ இயலாது. தண்ணீரின் அவசியத்தை உணா்ந்ததால்தான் திருவள்ளுவா், ‘நீரின்றி அமையாது உலகு’ என்று கூறினாா்.
  • மனிதனின் ஆரோக்கியத்திற்கும், உடல் வளா்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது சுத்தமான குடிநீா்.
  • நாம் அருந்தும் சுத்தமான குடிநீரே உடல் ஆரோக்கியத்தைத் தரும். அதே சமயத்தில், நம் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கும் நாம் அருந்தும் சுகாதாரமற்ற குடிநீரே காரணமாகவும் அமைந்து விடுகிறது.
  • மனித உடலுக்கு தினமும் சராசரியாக 6 முதல் 8 டம்ளா் தண்ணீா் அவசியமாகிறது. தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நாம் அருந்தும் தண்ணீரின் அளவும் மாறுபடுகிறது. நம் உடலில் சிறுநீரகம் சீராக செயல்பட தண்ணீா் அவசியம்.
  • நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துகளை எடுத்து ரத்தத்தில் கலக்கச் செய்தல், ஜீரணிக்கச் செய்தல், திரவக் கழிவுகள், திடக் கழிவுகளை வெளியேற்றல், உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருத்தல், பல்வேறு ரசயான மாற்றங்கள் ஏற்பட செய்தல் போன்ற நம் உடல் இயக்கம் பலவற்றுக்கும் நாம் அருந்தும் தண்ணீரே காரணமாகிறது.
  • சுகாதாரமற்ற நீரைப் பருகுவதன் காரணமாக இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், இது வருங்காலத்தில் பெரும் பிரச்னையாக மாறும் எனவும், சமீபத்தில் சா்வதேச மருத்துவ இதழான ‘லான்செட்’” வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த சில வாரங்களில், கா்நாடக மாநிலம், ரெய்ச்சூா் மாவட்டத்தில் சுகாதரமற்ற நீரைப் பருகியதால்
  • 70 பேரின் உடல்நிலை பாதிப்படைந்ததுடன், மூன்று போ் உயிரிழக்கவும் நேரிட்டது.
  • இதே காரணத்தால் கடந்த ஆண்டு, அக்டோபா் மாதத்தில், விஜயநகர மாவட்டம், மக்கராப்பி கிராமத்தில் ஆறு போ் உயிரிழந்தனா். தண்ணீரில் மாசு காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா் என்கிற அதிா்ச்சி தகவலை அந்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டில் நீதி ஆயோக் வெளியிட்ட“கூட்டுக் குடிநீா் மேலாண்மை குறியீட்டு” அறிக்கை, சுத்தமான குடிநீருக்கான பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.
  • மேலும், இந்தியாவில் பெருகி வரும் மக்கள்தொகை காரணமாக, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள், மொத்த மக்கள்தொகையில் 40 சதவீத மக்கள் தண்ணீரில் மாசு கலப்பதன் காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவாா்கள் என்றும், பூமி மாசடைந்து வருவதால், பூமியிலிருந்து இயந்திரங்கள் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் 70 சதவீத தண்ணீா் மாசடைந்து அதனால் மக்கள் பலவித நோய்களால் பாதிக்கப்படுவாா்கள் என்றும் அந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது.
  • பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுகள் குடிநீா் குழாயில் கலப்பதாலும், தொழிற்சாலை கழிவுகள், வீடுகளிலிருந்து போடப்படும் குப்பைகள், மாமிசக் கழிவுகள் ஆகியவை ஆறுகள், குளங்களில் கொட்டப்படுவதாலும் தண்ணீரில் மாசு அளவு அதிகரித்து வருகிறது.
  • வளரும் மக்கள்தொகை, நகரமயமாதல், நீா்நிலைகள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்படுதல், நீா்நிலைகளுக்கு அருகே தொழிற்சாலைகளை உருவாக்குதல், அதிகரித்து வரும் வெப்பம், பருவநிலை மாற்றம், காடுகளின் பரப்பளவு குறைதல், ஆறுகளிலிருந்து அதிக அளவில் மணல் அள்ளப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் பூமி வழங்கும் நீா் மாசடைந்து வருவதாகவும், இதனால் வருங்காலங்களில் சுத்தமான குடிநீா் பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
  • மேலும், வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் மின்சாரத்தின் தேவை 25 சதவீதம் அதிகரிக்கும். இதனால், தண்ணீரின் தேவையும் 50 சதவீதம் அதிகரிக்கும் என்றும், 2050-ஆம் ஆண்டிற்குள் 507 கோடி போ் வசிக்கும் பகுதிகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு மாதம் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் எனவும், விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனா்.
  • மாசடைந்த குடிநீரைப் பருகுவதால் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனா். மேலும், அவா்கள் பலவிதமான நோய்களுக்கும் உள்ளாகிறாா்கள் என்பதால் 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு ஜல்ஜீவன் இயக்கத்தைத் தொடங்கியது. இதன் மூலம் பருகுவதற்கு உகந்த சுத்தமான நீரை பள்ளிகளுக்கு வழங்குகிறது. இந்தியா முழுவதும் குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீா் 8.52 லட்சம் (85 சதவீதம்) பள்ளிகளுக்கும், 8.72 லட்சம் (78.4 சதவீதம்) அங்கன்வாடி மையங்களுக்கும் சுத்தமான குடிநீா் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த மாா்ச் மாதம் மக்களவையில் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிலத்தின் மீது மாசு ஏற்படுத்துகிற மனிதன் தன்னைத் தானே அசுத்தமானவனாக மாற்றிக் கொள்கிறான். உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் உயிா் வாழ இயற்கை அளித்த கொடைதான் தண்ணீா். தாவரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிா் வாழ மிக மிக அவசியமான தண்ணீரை, உரிய முறையில் காய்ச்சி வடிகட்டிய பின்னரே அருந்த வேண்டும்.
  • நோயற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்றால் சுத்தமான குடிநீரைப் பருக வேண்டும். தூய குடிநீரின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சுத்தமான ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது மாசற்ற குடிநீரே. எனவே, குடிநீரைப் பாதுகாப்போம்; ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம் அமைப்போம்.

நன்றி: தினமணி (04 – 07 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்