- தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு மிக வலுவாகவும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் உள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் நமது சுகாதாரத் துறை திறம்படச் செயல்பட்ட விதம் அதை மேலும் உறுதிப்படுத்தியது.
தற்போதைய நிலவரம்
- வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME), ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் (DMS), பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநரகம் (DPH) என மூன்று இயக்குநரகங்களின் கீழ் தனித்துவம் மிக்கதாகச் செயல்பட்டுவருகிறது. 19,866 மருத்துவர்கள், 38,027 செவிலியர்கள், 60,181 இதர மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் இதில் பணியாற்றிவருகிறார்கள்.
- தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையைத் தொடர முடியாதவர்கள், அல்லது பாதிப்பு அதிகமானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைகளுக்குத்தான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பன போன்ற சவாலான அறுவை சிகிச்சைகளும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இத்தகைய சேவைகள் கிடையாது. இவற்றையெல்லாம் வைத்து நம் சுகாதாரத் துறை சர்வதேசத் தரத்தில் உள்ளதாகவும் பெருமிதம் நிலவுகிறது. ஆனால் யதார்த்தம் என்ன?
சர்வதேசத் தர ஒப்பீடு
- வளர்ந்த நாடுகளில் ஒன்றான பிரிட்டனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இது குறித்த தெளிவான பார்வையைத் தரும். பிரிட்டனின் மக்கள்தொகை 6.7 கோடி; தமிழ்நாட்டின் மக்கள்தொகை உத்தேசமாக ஏழேகால் கோடிக்கும் மேல். பிரிட்டனில் ஏறத்தாழ ஒன்றேகால் லட்சம் அரசு மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், அந்நாட்டைவிட அதிக மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில், 20,000க்கும் குறைவான அரசு மருத்துவர்களே உள்ளனர். சராசரியாக ஆறு அல்லது ஏழு பிரிட்டிஷ் மருத்துவர்கள் செய்யும் பணியை, தமிழகத்தில் ஒரே ஒரு மருத்துவர் செய்துவருவதுதான் நிதர்சனம்.
- அது மட்டுமல்ல, பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருந்தாலும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள்கூட சராசரியாக 10 அல்லது 12 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஓர் ஆண்டுக்கும் மேலாக அறுவை சிகிச்சைக்காக அங்கு காத்திருப்பவர்கள் 4 லட்சம் பேர்.
- ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருந்தாலும், ஒரே நாளில் உயர் சிறப்பு மருத்துவர்களிடம்கூட சேவையைப் பெறுவது சாத்தியம். நோயாளிகளின் தரப்பிலிருந்து பார்த்தால், இது ஆரோக்கியமான அம்சம்தான். ஆனால், நம் மருத்துவர்கள் அதிகமான பணிச்சுமையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய முக்கியப் பிரச்சினை.
செய்ய வேண்டிய பணிகள்
- தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துக் கல்லூரிகள், 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தமாக 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கை இது. ஆனால், பிற மாநிலங்களைவிட அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கிவரும் தமிழ்நாடு அரசு, புதிதாக உருவாக்கப்படும் இளம் மருத்துவர்களுக்கு என்ன ஊதியம் தரப் போகிறது என்பது இன்னொரு கேள்வி.
- இருக்கின்ற மருத்துவக் கல்லூரிகளைத் தரம் உயர்த்துவதற்கே, இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும். அனைத்து விதமான பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் வகையில் ஆய்வக வசதிகளை மேம்படுத்த வேண்டும். மருத்துவ உலகில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், அரசு மருத்துவமனைகளிலிருந்து அதிகளவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகும் வகையில் ஒவ்வொரு துறையிலும் இதற்கெனப் பிரத்யேகமாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
அரசின் கவனத்துக்கு
- தமிழ்நாடு சட்டப்பேரவை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலன் மிக முக்கியமான கருத்தை முன்வைத்தார். சுகாதாரத் துறையில் உள்கட்டமைப்பு என்றால் கட்டிடங்களோ, கட்டிட வல்லுநர்களோ, கருவிகளோ இல்லை. மருத்துவர்களும், செவிலியர்களும்தாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
- எனவே தமிழகத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும் என்றால், அனைத்து அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். ஏற்கனவே 2019இல் அரசாணை 4D2இன் மூலம் குறைக்கப்பட்ட 600 அரசு மருத்துவர் பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் மருத்துவர் பணியிடங்கள் என்ற வகையில், குறைந்தது இரண்டு அல்லது மூன்று மடங்கு மருத்துவர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
- அரசு மருத்துவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டால், வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், இங்கேயே அரசுப் பணியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். மருத்துவர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவது மட்டுமன்றி, அரசுப் பணியில் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உரிய அங்கீகாரத்தையும், ஊதியத்தையும் மாநில அரசு வழங்க வேண்டும். மருத்துவர்களுடன் இணைந்து பணி செய்யும் செவிலியர்கள், இதர பணியாளர்களைப் போதுமான எண்ணிக்கையில் நியமனம் செய்தால்தான் மக்களுக்கு முறையாக மருத்துவ சேவை கிடைக்கும்.
- தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சலனங்கள், போராட்டங்கள் போன்றவற்றை அரசு கவனித்துக்கொண்டுதான் இருக்கும். இந்நிலையில், வளர்ந்த நாடுகளுக்கு இணையான தரத்துடன் சேவையாற்றும் தமிழ்நாட்டு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பக்கபலமாக இருந்து ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். மக்கள் நலனும் மருத்துவர் நலனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம். ஆட்சியாளர்கள் இதை உணர்ந்துகொண்டால் சுகாதாரத் துறையில் நிலவும் சுணக்கங்கள் அகலும். அது தமிழ்நாட்டின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் வலிமை சேர்க்கும்! l
- சராசரியாக ஆறு அல்லது ஏழு பிரிட்டிஷ் மருத்துவர்கள் செய்யும் பணியை, தமிழகத்தில் ஒரே ஒரு மருத்துவர் செய்துவருவதுதான் நிதர்சனம்.
நன்றி: தி இந்து (15 – 01 – 2023)