- கொள்ளைநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு மாதங்களாகி விட்டன.
- சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்பு இப்படியொரு நாடு முழுவதுமான நெருக்கடியைச் சந்தித்த அனுபவங்கள் நமக்கு இல்லை என்பதால் அனுபவங்களிலிருந்தே மத்திய, மாநில அரசுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
- எனினும், கடந்த ஆறு மாதங்களில் அரசுகள் மிக வேகமாக சுதாரித்துக்கொண்டு, சூழலுக்கேற்பத் தங்களது அணுகுமுறைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டுள்ளன.
- இந்த அணுகுமுறை மாற்றங்கள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் இனிவரும் காலங்களில் முக்கியத் தாக்கங்களைச் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
- ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிப்பது எப்படி என்று திட்டமிட்டபோது இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
- அந்தக் குறையானது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளிப்படையாகவே பிரதிபலித்தது. ஆனாலும், இந்தப் பொருளாதாரப் பின்னடைவிலிருந்து வெகுவிரைவில் வெளிவந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியலாளர் நிர்விஹார் சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
- ஆனால், பக்கத்து நாடுகளும் ஏழை நாடுகளுமான பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைவிட, இந்தியாவில் நோய்த்தொற்றின் வேகம் அதிகம் இருப்பது கவலைக்குரிய விஷயம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இறப்பு எண்ணிக்கை குறைவு
- இந்தியாவைவிட அதன் பக்கத்து நாடுகளில் தொற்று பாதிப்பு குறைத்துச் சொல்லப்படுகிறது என்று சொல்லப்படுவதில் உண்மையும் இருக்கலாம்.
- அதே நேரத்தில், தொற்றுப்பரவல் குறித்த நேரடிப் புள்ளிவிவரங்களைத் தவிர்த்துவிட்டு, நோய் எதிர்ப்புத்தன்மையின் அடிப்படையிலான ‘ஆன்டிபாடி’ சோதனைகளைக் கணக்கில் கொண்டால், தொற்று எண்ணிக்கையும் சமூகப் பரவலும் புள்ளிவிவரங்களைவிட மிகவும் அதிகமாகவே இருக்க வேண்டும்.
- அறிகுறிகள் இல்லாமலே நோய்த்தொற்று பரவும்போது முழுமையான புள்ளிவிவரங்களைத் திரட்டுவது இயலாத ஒன்று என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
- எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவுக்கு இருக்கிற ஒரே ஆறுதல், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பவர்களின் விகிதம் உலக சராசரியுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிக்கும் குறைவாகவே இருக்கிறது என்பதுதான்.
- கரோனா மரணங்களின் உலக சராசரி 4%; இந்தியாவில் அது 1.7% மட்டுமே. இதற்கான முக்கியக் காரணங்கள் இந்தியாவின் மக்கள்தொகையில் இளைஞர்களின் அதிக எண்ணிக்கையும், பரிசோதனைகளை அதிகப்படுத்தியதும்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
- ஊரடங்குக் காலத்தின் தொடக்கத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தபோதும், தற்போது தேவையுள்ளவர் எவரும் பரிசோதித்துக்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் எளிதாகியிருக்கிறது.
மருத்துவர்களின் தேவை
- இன்னொரு பக்கம், பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாகச் செயல்படுவதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள் தங்களது பிற நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையும் தொடர்கிறது.
- கொள்ளைநோய்க் காலத்தின் தொடக்கத்திலிருந்தே வளர்ந்த நாடுகளும்கூட இந்தச் சிக்கலைச் சந்தித்தன என்றாலும் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும்.
- அடுத்து வரும் சில மாதங்களில் இந்தியாவில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை மிகவும் அதிகமாவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அப்படி ஒரு நெருக்கடியான சூழலைச் சந்திக்க வேண்டியிருந்தால், வெளிநாடுகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் செவிலியர்களும் இந்தியாவுக்குத் திரும்பி மருத்துவச் சேவையை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தற்போது அரசு மருத்துவமனைகளின் கரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளில், மருத்துவ முதுநிலை மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
- கரோனா சிகிச்சைப் பணிகளுக்காக மருத்துவர்களின் தேவை அதிகமாகும்பட்சத்தில், மருத்துவ இளநிலைப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்களையும் பயன்படுத்திக்கொள்வதைப் பற்றியும் யோசிக்கலாம்.
- அதற்கு மருத்துவ மாணவர்களை முன்கூட்டியே ஆயத்தப்படுத்தும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டியதும் அவசியம்.
சரியான அணுகுமுறை
- ஊரடங்கு நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று இந்திய பொது சுகாதார அமைப்பும் இந்திய தொற்றுநோயியலாளர்கள் அமைப்பும் இணைந்து ஆகஸ்ட் இறுதியில் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன.
- தீவிரமான ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற அரசின் வியூகம் தோல்வியடைந்துவிட்டது என்பதன் பிரதிபலிப்பாகவே இந்த அறிக்கையைப் பார்க்க முடிகிறது. ஊரடங்கு நடைமுறைக்கு மாற்றாகப் புதிய நோய்த்தொற்றுகள் எவ்வழியில் பரவின என்பதைக் கண்டறிந்து, தொடர்பில் இருந்த மற்றவர்களையும் சோதிப்பதுதான் தற்போதைக்குச் சரியான அணுகுமுறை என்பதை நோய்த்தொற்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
- நோய்த்தொற்றுக்கு ஆளான அனைவருக்கும் நோய்ப்பரவல் வரலாற்றைக் கண்டறிந்துவிட முடியாது என்றாலும் குறைந்தபட்சம் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்களிடம் சோதிப்பதையாவது உறுதிப்படுத்த முடியும்.
- கொள்ளைநோய்க் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்று பொது சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள்.
- மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில் இருந்துவந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன என்றபோதும் தொற்றுக்கு ஆளான மருத்துவர்களுக்கான நிவாரணங்கள் பெயரளவுக்கே இருக்கின்றன.
- ஒட்டுமொத்த பொருளாதாரமும் சிக்கலான நிலையில் இருக்கும்போதும், இத்தகைய சவால்களை எப்படியாவது சமாளித்தே ஆக வேண்டும் என்ற தவிர்க்க முடியாத பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
- கடந்த ஆறு மாத கால அனுபவத்தில், அரசைப் பொறுத்தவரை அனைத்துக் கோணங்களையும் உள்ளடக்கியதாக ஒருங்கிணைந்த வகையில் முடிவெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
- அதே நேரத்தில், மக்களைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்த அச்சம் நீங்கி அலட்சியம் விளையாடத் தொடங்கிவிட்டது. முகக்கவசத்தைப் பயன்படுத்தவும் தனி மனித இடைவெளியைப் பின்பற்றவும் அரசு தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்துவந்தபோதும் மக்களிடம் தற்காப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருக்கிறது. நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்பது மிகவும் அபாயகரமானது.
நன்றி: தி இந்து (25-09-2020)