TNPSC Thervupettagam

ஆறுகள் இயல்பு மாறினால்...

May 4 , 2024 75 days 109 0
  • சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற பேராறுகள் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். மழையற்ற காலத்தில் இந்த ஆறுகளில் எங்கிருந்து வெள்ளம் வருகிறது? இமாலயத்திலிருந்து புறப்படும் இந்த வற்றா ஆறுகளின் ரகசியம், பனிமலைகளில் அமைந்துள்ள பனிப்பாறை ஏரிகள் (glacier lakes). இந்த ஏரிகள் திடீரென ஒட்டுமொத்தமாக உருகினால் என்னாகும்?
  • அண்மையில் உத்தராகண்டில் நேர்ந்த பனிப்பாறை ஏரி வெடிப்புப் பெருவெள்ளம் (Glacial Lake Outburst Flood- GLOF) காலநிலைப் பிறழ்வின் தீவிரத்தால் நேர்ந்திருக்கிறது. பனிப்பாறை ஏரி வெடிப்பு நிகழ்வுகள், பனிமலையகக் கோளத்தின் (cryosphere) புதிய அடையாளமாக மாறியுள்ளன.
  • கடந்த பதிற்றாண்டில் இமாலயத்தை ஒட்டிய மாநிலங்களில் இது போன்ற வெடிப்புகளால் பேரழிவுகள் நிறைய நேர்ந்திருக்கின்றன. இன்றைக்கு இந்தியாவில் ஒன்றரைக் கோடி மக்கள் பனிப்பாறை வெள்ள அபாயத்தின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பனிப்பாறைக் கழிவடை:

  • இமயமலை போன்ற உயர்ந்த பனிச் சிகரங்களில் அமைந்துள்ள பனிப்பாறை ஏரிகள் திடீரென வெடித்து, உருகி, காலியாகி, அப்பெருவெள்ளம் அப்படியே கீழிறங்கும்போது, அதன் பாதையில் எதிர்ப்படும் அனைத்தையும் அழித்துவிடும். பனிப்பாறைகள் மிகையாக உருகி வழிந்துகொண்டிருப்பதன் விளைவாக பனிப்பாறைக் கழிவடைகள் (moraines) நிறைய உருவாகத் தொடங்கின.
  • பனிப்பாறைக் கழிவடை என்பது பனியாறுகள் அடித்து வரும் கற்களும் வண்டலுமான சிதைவுகள் ஆகும். இச்சிதைவுகளைக் கரைகளாகக் கொண்ட 5,000த்துக்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உருவாகியிருக்கின்றன. இவை பனிமலையக, பள்ளத்தாக்கு மக்களின் கொடுங்கனவு!

18,000 கனமீட்டர் வெள்ளம்:

  • மிகவும் பலவீனமான இம்மாதிரியான கரைகள் பனிப்பாறை ஏரி வெடிப்பினால் உடைந்து சிதறும்போது உருவாகும் பெருவெள்ளத்தின் தன்மையைக் கற்பனை செய்துபார்க்க முடியாது. அடிவாரம் வரை பேரிடரை நிகழ்த்திச் செல்லும் ஆற்றல் கொண்ட, பிரம்மாண்ட அளவு வெள்ளம்! சில நேரம் பருவமழைக்காலப் பெருவெள்ளத்தைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும்! சமூகரீதியாகவும் நிலவியல்ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • இப்படிப்பட்ட வெடிப்பு வெள்ளப் பேரிடர் மீண்டும் நிகழும் கால அவகாசத்தைப் பொறுத்து, வெள்ள வரத்தின் சராசரி அளவைக் கணிக்கிறார்கள். உதாரணமாக, நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் பெருவெடிப்பானது, நொடிக்கு 18,000 கனமீட்டர் அளவு வெள்ளத்தைக் கீழே கொண்டுவரும்.
  • வளிமண்டல வெப்பநிலை ஏறிக்கொண்டே போகும் இப்போதைய வேகத்தில் எத்தனை பனிக்கழிவடை ஏரிகள் எப்போது வெடிக்கும், எவ்வளவு வெள்ளத்தை அடிவாரத்துக்குத் தள்ளிவிடும் என்று அறுதியிட்டுச் சொல்வதற்கில்லை.
  • வானிலைக் கணிப்புகளுடன் இவற்றைப் பொருத்திப் பார்க்க முடியாது. கடந்த காலத்தில் ஆவணப்படுத்தியுள்ள வெடிப்புகள், பனிக்கழிவடை ஏரிகளின் எண்ணிக்கை- இரண்டையும் கணக்கிட்டுப் பார்த்தால், கிழக்கு இமாலயப் பகுதிகளில் அபாயம் மூன்று மடங்கு அதிகம் என்று ஆய்வுகள் கணித்துள்ளன.

நிலவியல் மாற்றங்கள்:

  • 2015 கோர்கா நிலநடுக்கத்திற்குப் பிறகு, மத்திய நேபாளத்தில் போட்கோஷி, சுன்கோஷி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் ஏற்பட்ட பனி ஏரி வெடிப்பு வெள்ளத்தின்போது பெரிய அளவில் அரிமானம் ஏற்பட்டது. முன்பு குறிப்பிட்டதுபோல, இது போன்ற வெடிப்புகள் பிரதேச நிலப்பரப்புகளின் பரிணாமவியலுக்கும் முக்கியக் காரணியாக உள்ளன.
  • இமாலயப் பகுதியில் உள்ள அபாயகரமான ஐந்து பனிப்பாறை ஏரிகளால் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தை மதிப்பிடுவதற்கு உத்தராகண்ட் அரசு இரண்டு நிபுணர் குழுக்களை அமைத்திருக்கிறது. பனிப்பாறை ஏரி, நிலச்சரிவு தேக்கங்களின் சிதைவினால் அடிக்கடி ஏற்படும் பெருவெள்ளப் பேரிடர், இமாலய ஆறுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. முக்கியமான செய்தி என்னவென்றால், இவ்வகைப் பேரிடரின் காரணிகளும் தாக்கங்களும் நிலவியல், காலநிலை மாற்றங்களோடு நெருங்கிய தொடர்புடையவை என்பதுதான்.

துருவக்கடல் பனிப்பாறைகள்:

  • கடலிலும் நிலத்திலும் புழங்கும் பென்குவின், ஒரு துருவப் பறவையினம். இறக்கையைக் குறுக்கிக்கொண்டு, பறத்தலை விட்டொழிந்த பறவை பென்குவின். ஆண்டுக்கு ஒரேயொரு முட்டையிடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக உறைபனிக் காலத்தின் பிறழ்வு காரணமாக பென்குவின்கள் முட்டையிடுவதை நிறுத்திக் கொண்டன. அவை வழக்கமாக முட்டையிடும் உறைபனிப் பரப்புகள் காணாமலாகிவிட்டதே அதற்குக் காரணம் எனப்படுகிறது.
  • துருவக் கடல் பகுதிகளில் வாழும் பாலூட்டியான கடல் சிங்கங்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. இரைதேடும் நேரம் ஒழிய, மற்ற பொழுதுகளைக்கடல் சிங்கம் பனிப்பாறைகளின் மீது கழிக்கிறது. திமிங்கிலங்கள் அவற்றை வேட்டையாடுவதற்குப் பல உத்திகளைத் கையாளும்.
  • மூன்று, நான்கு திமிங்கிலங்கள் ஒன்றுசேர்ந்து வேகமாக வந்து, ஒரே நேரத்தில் பனிப்பாளங்களை மோதி உடைத்து, அதில் ஓய்வெடுக்கும் இரையைக் கைப்பற்றுவது அதில் ஓர் உத்தி. சிறிய பனிப்பாறைகளை இப்படி நொறுக்குவது எளிது. புவிவெப்ப உயர்வினால் துருவப் பனிப்பாறைகளின் பரப்பும் பரிமாணமும் தேய்ந்துவருகின்றன. அதனால் கடல் சிங்கங்கள் எளிதில் வேட்டையாடப்படுகின்றன.

பிறழ் வலசைகள்:

  • கூடிழப்பின் வலி குறித்து முதல் அத்தியாயத்தில் உரையாடினோம். இரை தேட ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவகாலத்தில் வலசை போகும் பறவையினங்கள், தம் வழக்கமான வாழிடங்களுக்குத் திரும்பி வருகின்றன. காலநிலைப் பிறழ்வு பருவகாலப் போக்குகளை மாற்றிவிட்டது; வலசைப் பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு அவை சாதகமாக இல்லை. வலசையிடங்களில் கனிமரங்கள் காலத்தே காய்த்துக் கனியவில்லை; ஊனுண்ணிப் பறவைகளுக்கான இரைமீன்களின் இனப்பெருக்கம் சீராக நிகழவில்லை.
  • வெப்பமண்டலப் பகுதிகளில் வாழும் உயிரினங்கள் பலவும் புவிவெப்ப உயர்வின் காரணமாக மிதவெப்ப மண்டலத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. சூழலியல் கட்டமைவு ஒவ்வொன்றிலும் இரைகொல்லிகள் உள்பட, உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியும் முக்கியமானது. ஒரு விலங்கின் இரையாகவும் மற்றொரு விலங்கின் இரைகொல்லியாகவும் அமைந்திருந்த ஓர் உயிரினம் அழிந்துவிட்டாலோ, அல்லது அதன் இயல்பான வாழிடத்திலிருந்து நகர்ந்துவிட்டாலோ உணவுச் சங்கிலியில் சமன்குலைவு ஏற்படுகிறது.
  • காலநிலைப் பிறழ்வு கடலிலும் நிலத்திலும் சூழலியல் சமன்குலைவை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் முக்கியச் செய்தி. வெகுவிரைவில் நாம் சந்திக்கப்போகும் சூழலியல் பேரிடரின் முத்தாய்ப்பான செய்தியும்கூட.

பனிமலைகள் இனி இல்லை:

  • குளிர்ப் பிரதேசப் பயிரான ஆப்பிள் மரங்கள் காய்ப்பதற்குக் குளிர்காலத்தில் குறைந்தபட்சம் 1,000 முதல் 1,600 மணிநேரக் கடுங்குளிர் வேண்டும். கடந்த குளிர் காலத்தில் (2024 முதல் வாரத்தில்) இமாலயத்தில் பனிப்பொழிவு அற்றுப்போனது. இமாசலப் பிரதேசம், குல்மார்க் (காஷ்மீர்), உத்தராகண்ட் பனிமலைகள் துரிதமாக உருகிக் கரைகின்றன.

இனி என்னாகும்?

  • மலைகள் நிலச்சரிவையும் வறட்சியையும் சந்திக்கும். வற்றாத ஆறுகளான சிந்து, கங்கை இரண்டும் வறட்சி – வெள்ளப் பெருக்குச் சுழலில் சிக்கிக்கொள்ளும். அதன் நீண்ட காலத் தாக்கங்கள் கற்பனைசெய்து பார்க்க முடியாத அளவுக்குப் பெரிதாக இருக்கும்.

வற்றும் ஆறுகள்:

  • கடல்மட்ட உயர்வினால் சிறு தீவுகள் பலவும் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. கண்டங்களின் கடற்கரைப் பகுதிகள் சிறிது சிறிதாகக் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. இந்தியக் கடற்கரைகளில் ஏற்கெனவேவாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கும் மக்கள் அகதிகளாவார்கள். கங்கைச் சமவெளிப் பகுதியிலிருந்து பயிர்த் தொழிலைக் கைவிட்டு பொ.ஆ. (கி.பி.) 2040இல் 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறுவார்கள் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டிருந்தது.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்