- ‘மனிதர்களை மனிதர்களே நிர்வகிக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்கும்போது, இயல்பிலேயே பெரும் சிக்கல் உருவாகிவிடுகிறது.
- முதலாவதாக, ஆளப்படுகிறவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது, அதற்கு அடுத்தபடியாக அந்த அரசாங்கம் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது’ என்றார் ஜேம்ஸ் மாடிசன்.
- தேவையெனின், சட்ட வரம்புகளையும் மீறுகின்ற நீதித் துறையின் செயல்பாடுகள் மிகவும் அரிதான விதிவிலக்கு என்ற வகையில், சரியானதாகவும்கூட இருக்கலாம். ஆனால், செயல்பாட்டாளர் பணியிலான நீதித் துறை நாட்டுக்கு மட்டுமல்ல, நீதித் துறைக்குமே நன்மையளிக்காது.
- அரசாங்கங்கள் தங்களது கொள்கை முடிவுக்கு இசைந்து நடக்கும் நீதிபதிகளை நியமிக்கும் வழக்கத்தையே அது வளர்த்தெடுக்கும். சில சமயங்களில் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளின் பணியிட மாறுதல் குறித்துத் தற்போது மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு அளிக்கும் பரிந்துரைகளும்கூட ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாறுதல் செய்யும் நிர்வாகத் துறை உத்தரவுகளைப் போலவே இருக்கின்றன.
- ‘மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரம் செயல்படாத நிலை’ குறித்து வாதிப்பதற்குத் தயாராக வருமாறு ஆந்திர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ள அம்மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, நீதித் துறையே அரசமைப்புச் சட்டக் கூறு 356-ஐத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறதோ என்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
- அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துவிட்ட போதிலும்கூட, அது குறித்தும் அரசமைப்புச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய கூறு 356-ஐக் குறித்தும் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது.
- ஏனெனில், அந்தக் கூறானது, உயர் நீதிமன்றம் அப்படியொரு உத்தரவிடுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.
- தீமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் கூறு அது.
கடந்து வந்த பாதை
- அரசமைப்புக்கூறு 356, பெயரளவிலானதாகவும் செயல்படாததாகவுமே இருக்கும் என்று பி.ஆர்.அம்பேத்கர் உறுதியளித்தபோதிலும், அக்கூறானது 125 தடவைக்கும் மேலாக சரியாகவோ தவறாகவோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
- கூறு 356, ஆளுநர் என்று இரண்டின் அனுபவங்களுமே அம்பேத்கரின் வார்த்தைகள் தவறு என்பதை நிரூபித்துவிட்டன.
- ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளுமே அந்தக் கூறானது மாநிலங்களில் அரசமைப்புச் சட்ட இயந்திரம் செயல்படாத நிலை என்பதைக் காட்டிலும் அரசியல் காரணங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
- கே.ஆர்.நாராயணனைத் தவிர்த்து அனைத்துக் குடியரசுத் தலைவர்களுமே தடைகூறாமல் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அறிவித்திருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியோ தப்பித்துவிட்ட கல்யாண் சிங் தலைமையிலான ஆட்சியைக் கலைக்குமாறு அக்டோபர் 22, 1997-ல் மத்திய அமைச்சரவை அளித்த பரிந்துரையை அவர் இரண்டு முறை திருப்பியனுப்பினார்.
- குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் கே.ஆர்.நாராயணன் சுட்டிக்காட்டினார். பிஹாரில் ராப்ரி தேவி தலைமையிலான ஆட்சியின் மீது செப்டம்பர் 25, 1998-ல் மத்திய அமைச்சரவை அளித்த பரிந்துரையையும் அவர் திருப்பியனுப்பினார்.
- வழக்கத்துக்கு மாறாக அவர் எழுதிய விரிவான குறிப்பில், ஆளுநர் சுந்தர் சிங் பண்டாரியால் கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தார்.
வரலாற்றின் தழும்புகள்
- அரசமைப்புச் சட்டக் கூறு 356-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 1951-ல் முதன்முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பஞ்சாபில் கோபி சந்த் பார்கவா தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையைப் பெற்றிருந்தபோதும்கூட ஜவாஹர்லால் நேரு அதை அகற்றினார்.
- 1959-ல் கேரளத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அமைச்சரவைக்கு எதிராக மீண்டும் கூறு 356 பயன்படுத்தப்பட்டது. ஆளுநர் பி.ராமகிருஷ்ண ராவ் தனது அறிக்கையில் ‘மாநில அரசாங்கமானது மக்களில் மிகவும் பெரும்பான்மையினரின் ஆதரவை’ இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
- அந்த அமைச்சரவையானது சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது என்பதை ஏனோ அவர் கருத்தில் கொள்ளவில்லை. அரசாங்கம் பொறுப்பேற்கும்போதுதான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமேயொழிய, தொடர்ந்து அதை நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. உண்மையாகவே, அவரது விளக்கம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்தது.
- இந்திரா காந்தி தனது ஆட்சியில் 356-வது கூறினை 27 தடவைகள் பயன்படுத்தித் தனிப்பெருமையைத் தேடிக்கொண்டார். பெரும்பாலான சமயங்களில், அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையிலும் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு உரிய அதிகாரம் அளிக்காமலும் அவர்களுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டும் பெரும்பான்மை கொண்ட அரசாங்கங்கள் அகற்றப்பட்டன.
- அவரது கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்களைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஆனால், ஜனதா ஆட்சியானது இந்திரா காந்தியைக் காட்டிலும் மோசமாக நடந்துகொண்டது. ஏப்ரல் 30, 1977-ல் ஒன்பது மாநிலங்களில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியை ஒரே வீச்சில் கலைத்துவிட்டது.
- அந்த முடிவை ராஜஸ்தான் அரசு எதிர். ஒன்றிய அரசு (1977) வழக்கில் உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அதே பாணியில் 1980-ல் ஒன்பது மாநிலங்களில் எதிர்க் கட்சிகளின் பெரும்பான்மை அரசாங்கங்களைக் கலைத்துப் பதிலடி கொடுத்தார்.
- அடுத்து வந்த ஒன்றிய அரசுகளும் அதே பாணியைத்தான் தொடர்கின்றன. நரேந்திர மோடியின் தலைமையிலான அரசும்கூட அருணாச்சல பிரதேசத்தில் 2016-ல் குடியரசு தினத்தன்று 356-வது கூறினை நடைமுறைப்படுத்தியது.
- 356-வது கூறினைப் பயன்படுத்தாமைக்கு மிகச் சிறந்த உதாரணம் என்றால் அது டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னதாக உத்தர பிரதேச ஆட்சியைக் கலைக்க பி.வி.நரசிம்ம ராவ் மறுத்ததாகும். ‘சிறுபான்மையினரின் சட்டபூர்வமான உரிமைக’ளைப் பாதுகாப்பதற்காக நெருக்கடி நிலைக் கால அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று அரசமைப்புச் சட்ட வரைவில் குறிப்பிட்டிருந்தாலும் உத்தர பிரதேசத்தில் அரசமைப்பு இயந்திரம் செயல்படாத நிலை குறித்து ஒன்றிய அரசு முழுமையாக அறிந்திருந்தபோதிலும், 356-வது கூறு பயன்படுத்தப்படவில்லை.
- ஆனால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையிலான ஆட்சிகள் கலைக்கப்பட்டன. எஸ்.ஆர்.பொம்மை எதிர் ஒன்றிய அரசு (1994) வழக்கிலும் அது உறுதிசெய்யப்பட்டது.
- இந்த மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்த குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.
- இன்றைக்குப் பெரும்பாலாலான அரசமைப்புச் சட்ட நிபுணர்களின் கருத்து என்னவென்றால், நீதித் துறையானது நிர்வாகத் துறையைக் காட்டிலும், நிர்வாகத் துறையின் மனவியல்புகளை அதிகமாக சுவீகரித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது என்பதுதான்.
- அந்த வகையில், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் கருத்தானது மிகவும் கவலையளிக்கக்கூடிய அறிகுறியாகும்.
- அரசமைப்புச் சட்டக் கூறு 356-லிருந்து ‘பிறவாறு’ (otherwise) என்ற சொல்லானது நீக்கப்பட வேண்டும். ‘பிறவாறு’ என்ற சொல்லுக்குள் மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரத்தின் செயல்பாடின்மை குறித்து ஆளுநரின் அறிக்கையையும் தாண்டி குடியரசுத் தலைவரின் எந்தவொரு கற்பனைக்கும் விருப்பத்துக்கும் இடமளிக்க முடியும்.
- நேரிய பொருளில் மட்டுமே அந்தக் கூறு பயன்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மை பெற்ற ஆட்சியானது ஒருபோதும் அகற்றப்படக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (07 -01 -2021)