TNPSC Thervupettagam

ஆளுநர் இஷ்டப்படி தாமதிக்க அனுமதிக்கிறதா அரசமைப்பு

December 29 , 2022 674 days 388 0
  • அரசமைப்புச் சட்டத்தை வகுத்த முன்னோடிகள் வேண்டும் என்றே சில இடங்களில் இடைவெளியை ஏற்படுத்தினார்கள்; எதிர்காலத்தில் ஏற்படும் சூழல்களுக்கேற்பவும் மக்களுடைய விருப்பங்களையொட்டியும் உரிய திருத்தங்களை நாடாளுமன்றம் செய்துகொள்ளட்டும் என்றே அப்படிச் செய்தார்கள். இதனால்தான் அரசமைப்புச் சட்டத்தில் கண்ணில் சட்டென்று புலப்படும் வகையில் சில வெற்றிடங்கள் விடப்பட்டன.
  • அப்படி விடப்பட்ட இடைவெளியில் ஒன்றுதான் அரசமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு. சட்டமன்றங்கள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர, கால வரம்பு எதையும் அது விதிக்கவில்லை. இதை இப்போது எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் ஆளுநர்களில் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்; ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசின் முடிவுகளைக் குழப்பும் வகையில், ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார்கள்.
  • இணையதளம் மூலம் நடைபெறும் சூதாட்டங்களைத் தடைசெய்யவும், ஒழுங்குபடுத்தவும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 2022ஆம் ஆண்டு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இன்னமும் ஒப்புதல் தரவில்லை; கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய கேரள லோக் ஆயுக்த (திருத்த) மசோதா-2022க்கு கேரள ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 20  மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. தெலங்கானா, வங்க மாநிலங்களிலும் இதே நிலைமைதான். சரிசட்டமன்றங்கள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர்கள் காலவரம்பின்றி முடிவெடுக்காமலேயே இருந்துவிட முடியுமா?

அரசமைப்புச் சட்ட அவையில்

  • அரசமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு தொடர்பான விவாதம் நடந்தபோது, “ஆளுநர்கள் முடிவெடுக்கக் கால வரம்பு ஏதும் நிர்ணயிக்காமல் இருப்பது ஏன்” என்று பேராசிரியர் ஷிப்பன் லால் கேள்வி எழுப்பினார்.
  • புருஷோத்தமன் நம்பூதிரி எதிர் கேரள மாநில அரசு வழக்கில் (1962), மசோதாக்களுக்கு குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கால வரம்பு எதையும் விதித்துவிடவில்லை என்று உச்ச நீதிமன்ற அமர்வு விளக்கம் அளித்தது. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆளுநர் தாமதம் செய்யலாமா என்ற கேள்வி இந்த வழக்கின்போது எழுவில்லை என்பது சுவாரஸ்யமானது; நீதிமன்றமும் இதற்கும் விடையளிப்பதைப் போல திட்டவட்டமாக கருத்து தெரிவிக்க சந்தர்ப்பமும் வரவில்லை. இருந்தும், மாநில ஆளுநர், சட்டமன்றத்தின் முடிவை மதிக்க வேண்டும், குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவையின் முடிவுகளை சுமுகமாக ஏற்று ஒப்புதல் தர வேண்டும் என்றே நீதிமன்றம் கூறியது.
  • மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார் என்றால், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வழியில் – சட்டமன்றத்தின் முடிவை மாற்றப் பார்க்கிறார் என்றே பொருள்; இதன் மூலம் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவம் மீதே அவர் தாக்குதல் தொடுக்கிறார். சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதைத் தாமதப்படுத்துவது எதேச்சாதிகாரமான நடவடிக்கை, அப்படி நடப்பது அரசமைப்புச் சட்டத்தால் விரும்பப்படாத அருவருப்பான செயல்.
  • மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் – அதேசமயம் அதுபற்றிய குறிப்புடன் தனக்கு அனுப்பும் மசோதாக்கள் மீது, குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதும் பிரச்சினைதான் என்பதை மறந்துவிடக் கூடாது. ‘நீட்’ பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி 2022 மே மாதம் நிறைவேறிய மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார் ஆளுநர். அந்த மசோதா மீது குடியரசுத் தலைவர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 201வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவருக்கும் இப்படி முடிவெடுக்க கால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை; ஆனால், மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவர் அதை சம்பந்தபட்ட மாநில சட்டமன்றத்துக்கே திருப்பி அனுப்பிவிட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதை மாநில சட்டமன்றம் மறுபரிசீலனை செய்தாக வேண்டும் என்று காலவரம்பு இருக்கிறது.

சட்டத் சீர்திருத்தம் அவசியம்

  • அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநர்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையில், நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையிலான குழு இதுகுறித்து ஆய்வுசெய்து பதிவிட்டுள்ளது: “ஒரு மசோதாவுக்கு காலவரம்பின்றி ஆளுநர் தனது ஒப்புதலை வழங்காமல் தாமதம் செய்வது அரசமைப்புச் சட்டப்படியான நிர்வாகத்துக்கு, மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநர் செய்யும் செயல் - உகந்ததாக இருக்காது” என்கிறது.
  • அரசமைப்புச் சட்டச் செயல்பாட்டை ஆராய வாஜ்பாய் தலைமையிலான அரசு நியமித்த தேசிய ஆணையம், ‘ஆளுநர்கள் முடிவெடுக்க ஒரு காலவரம்பு – அதாவது அதிகபட்சம் ஆறு மாதங்கள் என்பதாக – நிர்ணயிக்கப்பட வேண்டும்’ என்று பரிந்துரைத்தது. அந்த ஆறு மாதத்துக்குள் ஆளுநர் தனது ஒப்புதலைத் தர வேண்டும் அல்லது குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பது பரிந்துரை.
  • மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்ற அரசமைப்புச் சட்ட 200வது கூறு, மாநிலங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் தவறும்பட்சத்தில் கடிவாளம் போடவும்தான்; மத்திய அரசின் சட்டங்களுக்குப் பொருத்தம் இல்லாத வகையில் மாநிலங்கள் சட்டமியற்றிவிடக் கூடாது என்பதற்காக, சுதந்திரமாகச் செயல்படும் ஆளுநர் அவசியம் என்று கருதப்பட்டது.
  • மத்திய – மாநில அரசுகளின் உறவுகளை ஆராய நியமிக்கப்பட்ட ரஞ்சித் சிங் சர்க்காரியா ஆணையத்திடம் கருத்து தெரிவித்த சில மாநிலங்கள், ‘ஆளுநர் பதவி அவசியம்தான், மாநில சட்டமன்றங்கள் அவசர கதியில் சில சட்ட வரைவுகளை மசோதாக்களாக நிறைவேற்றிவிட்டாலும், அதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை எண்ணி அதை உடனடியாக அமலுக்கு வந்துவிடாமல் தடுக்க ஆளுநர் பதவி அவசியம்தான்’ என்று கூறின. (உலையில் நீர் கொதித்து ஆவி அதிகமாகி பாத்திரமே வெடிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டால், அதன் மேல்பகுதியில் உள்ள சிறு திறப்பு ஆவியை வெளியேற்றி பாத்திரம் வெடிக்காமல் காப்பதைப் போல ஆளுநர் பதவி அவசியம் என்றன).
  • நம்முடைய கூட்டாட்சி முறையை ஆரம்ப காலம் தொட்டே பீடித்துள்ள இந்த நோயைத் தீர்க்க சர்க்காரியா ஆணையம் ஒரு வழியையும் கூறியிருக்கிறது. மசோதாவை நிறைவேற்றிய பிறகு ஆளுநர் அதற்கு ஒப்புதல் தராமல் போகும் நிலைமையைத் தவிர்க்க, மசோதாவைத் தயாரிக்கும்போதே ஆளுநருடன் ஆலோசனை நடத்த வேண்டும், அதன் பிறகு மசோதாவுக்கு ஒப்புதல் தர கால வரம்பும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிறது.

தாமதப்படுத்துவதே சட்ட விரோதம்

  • நிர்வாகத் துறையில், ‘நிர்வாக ஒப்புதலுக்கு நியாயமற்ற வகையில் செய்யப்படும் காலதாமதத்தை, சட்டத்தை மீறும் செயலாகவே கருத வேண்டும்’ என்பார்கள். ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரலாம் அல்லது ஒப்புதல் தராமல் மறுக்கலாம்; எதைச் செய்வதாக இருந்தாலும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் செய்துவிட வேண்டும். இந்த ‘குறிப்பிட்ட காலவரம்பு’ என்பது ‘நியாயமான’ கால அளவாக இருப்பது அவசியம். குறிப்பிட்ட விஷயத்தில், நியாயமான கால வரம்புக்குள் முடிவெடுத்தால்தான் மசோதாவின் நோக்கமும் நிறைவேறும்.
  • கெய்ஷாம் மேகசந்திர சிங் எதிர் மணிப்பூர் சட்டப்பேரவைத் தலைவர் வழக்கில் (2020), கட்சித்தாவல் தடைச் சட்டம் தொடர்பான விவகாரம் முக்கிய இடம்பிடித்தது. கட்சி மாறிய பேரவை உறுப்பினர்கள் தொடர்பாக, நியாயமான காலத்துக்குள் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. நியாயமான காலம் என்பது, கட்சி மாறியவர்களைத் தகுதி நீக்கம் செய்யும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக - மூன்று மாதங்களுக்குள் முடிவெடுத்தாக வேண்டும் - என்றது.
  • “(பிரிட்டனை) மகாராணிதான் ஆள்கிறார், ஆனால் உண்மையில் ஆள்வது அமைச்சரவை” என்பது ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ மாதிரி ஜனநாயக நடைமுறையாகும். மாநில ஆளுநரின் கடமை என்பது, அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள வரம்புக்குள் மாநில அரசும், சட்டமன்றமும் செயல்படுகிறதா என்பதைப் பார்ப்பதுதான். மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு ஏதும் அரசமைப்புச் சட்டத்தில் விதிக்கப்படவில்லை என்பதால், கால வரம்பின்றி முடிவெடுக்காமல் இருந்துவிட முடியாது.
  • அரசமைப்புச் சட்டத்தை அதன் முழுப் பின்னணியில் வாசிக்க வேண்டும். நியாயமான காலவரம்பு என்றால் மூன்று மாதங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம், அதற்குள் ஆளுநர் முடிவுசெய்ய வேண்டும். அரசமைப்புச் சட்டமே மவுனம் சாதிக்கிறது என்பதற்காக, அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக செயல்படாமல் இருந்துவிடக் கூடாது. அப்படிச் செய்வது சட்டப்படியான ஆட்சி என்பதற்கு எதிராகத் திரும்பி, அராஜகத்தில் கொண்டுபோய்விடும்.
  • சம்ஷேர் சிங், ஏஎன்ஆர் எதிர் பஞ்சாப் மாநில அரசு வழக்கில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறிய கருத்து சிறப்பானது; “வக்கிரம் பிடித்தவர்களும் சட்ட வாசகங்களுக்குக் குதர்க்கமாக பொருள் கொள்பவர்களும் எதிர்காலத்தில் பொறுப்புக்கு வருவார்கள் என்று பார்க்கும் அரசியல் ஞானதிருஷ்டி நம்முடைய அரசமைப்புச் சட்டத் தந்தைகளுக்கு இல்லாமல் போயிருக்கலாம்” என்று ரத்தினச் சுருக்கமாக – ஆனால், உறைக்கும்படியாக கூறியிருக்கிறார்!

நன்றி: அருஞ்சொல் (29 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்