- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் புதன்கிழமை தொடங்கிவிட்டது. மக்களவையில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்களவையிலோ வெகு எளிதாக பெரும்பான்மையைப் பெற்றுவிட முடிகிறது. இருந்தும் நான் கூறும் ஆறு அம்சங்களைச் செய்ய அவர்களுக்குத் துணிவு இருக்கிறதா? இந்த ஆறில் இரண்டு அல்லது மூன்றைச் செய்தால்கூட போதும். அவ்வளவு வேண்டாம், முதல் இரண்டு வாரங்களுக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றட்டும்.
மகளிர் இடஒதுக்கீடு
- மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா. மக்களவையிலும் அனைத்து சட்டப்பேரவைகளிலும் மூன்றில் ஒரு பங்கு இடத்தைப் பெண்களுக்கு ஒதுக்குவதுதான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா. 1996 முதல் இது சில முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும் சட்டமாவதற்கு உதவியாக இன்னமும் நிறைவேறாமலேயே இருக்கிறது.
- 1998, 1999, 2008 ஆகிய ஆண்டுகளில் வெவ்வேறு வடிவங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. 2010இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது, மக்களவையில் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகவிடப்பட்டது. பாஜக தனது 2014 மக்களவை தேர்தல் அறிக்கையில், ‘நாட்டை உருவாக்குபவர்கள் பெண்கள்’ என்று புகழ்ந்ததுடன், ‘நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவோம்’ என்று உறுதியளித்தது. சொன்னதைச் செய்துகாட்டுங்கள் பார்க்கலாம்; மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 2022 டிசம்பரில் மீண்டும் கொண்டுவாருங்கள். (இடஒதுக்கீடு மசோதா இல்லாமலேயே, திரிணமூல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 36% பெண்கள்).
மக்களவைக்குத் துணை சபாநாயகர் எங்கே?
- மக்களவைக்குத் துணைத் தலைவரை (துணை சபாநாயகர்) நியமியுங்கள். மக்களவை புதிதாக உருவான உடனேயே மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 15வது மக்களவையில் எம்.தம்பிதுரை துணைத் தலைவராக 71வது நாளில் தேர்வானார். இப்போது 1,273 நாள்கள் (3.5 ஆண்டுகள்) ஓடிவிட்டன, துணைத் தலைவர் என்று யாரும் இல்லை.
- மக்களவைத் தலைவர் பதவி விலகத் தீர்மானித்தால், தனது விலகல் கடிதத்தைத் துணைத் தலைவரிடம்தான் தந்தாக வேண்டும் என்பது விதி. மக்களவைத் துணைத் தலைவர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பாபா சாஹேப் அம்பேத்கர் வலியுறுத்தியிருக்கிறார். அரசின் நிர்வாகத் துறையிடமிருந்து விலகி மக்களவைத் தலைவர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மக்களவைத் தலைவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் விலகல் கடிதத்தை அவர் துணைத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும். எனவே, துணைத் தலைவர் பதவியை நிரப்புவது மிகவும் முக்கியம்.
அவை விதி எண் 267 அமலாக்கம்
- மக்களை மிகவும் பாதிக்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை விதி எண் 267இன் கீழ் கோரிக்கை விடுத்தால் (நோட்டீஸ் அளித்தால்), ஏற்கெனவே தீர்மானித்த அவை நடவடிக்கைகளை நிறுத்திவைத்துவிட்டு அந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். மாநிலங்களவைத் தலைவராக ஹமீத் அன்சாரி பதவி வகித்தபோது 2016 நவம்பரில் கடைசியாக இந்த விதிப்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகளாக ஒரு முறைகூட இந்த விதிப்படி விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதை நம்ப முடிகிறதா?
- விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம், பெகாசஸ் உளவு விவகாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவை விதி எண் 267இன் கீழ் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டும் பயன் இல்லை.
எங்கே பிரதமர்?
- நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்காவது பிரதமர் நரேந்திர மோடி அவையில் இருந்து நேரடியாக பதில் அளிக்க வேண்டும். 2014 முதல் பிரதமர் ஒரு கேள்விக்குக்கூட அவையில் பதில் அளிக்கவே இல்லை. மாநிலங்களவையில் பிரதமர் அலுவலகத்தால் கடைசியாக பதில் அளித்தது 2016இல். 2014க்குப் பிறகு மாநிலங்களவையில் பிரதமர் அலுவலகம், ஏழு கேள்விகளுக்குத்தான் பதில் அளித்திருக்கிறது. 2004 முதல் 2014 வரையில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது 85 கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டது.
- நம்முடைய பிரதமர் மிகச் சிறந்த பேச்சாளர்; தங்களுடைய கேள்விகளுக்குப் பிரதமரே நேரில் வந்து பதில் அளித்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புளகாங்கிதம் அடைவார்கள். இப்போதெல்லாம் அவர் வியாழக்கிழமை காலையில், மொத்தமாக 15 நிமிஷங்கள் மட்டும் அவைக்கு வந்திருந்து தலைகாட்டுகிறார்.
விவாதம் இல்லாத மசோதா கலாச்சாரம்
- ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆலோசனை கலக்கும் கொள்கையைக் கடைப்பிடியுங்கள். இந்த ஆட்சியில் 2021 வரையில் 75% மசோதாக்கள், பிற கட்சிகளுடன் எந்தவித ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமலேயே நேரடியாக அவையில் தாக்கல் செய்யப்படுகின்றன. அப்படியே ஆலோசனைக்கு முன்வைக்கப்படும் மசோதாக்களில் 54%, ஆலோசனைக்கு 30 நாள்கள் அவகாசம் தருவதாக இருப்பதில்லை. இது 2014இல் ஏற்படுத்தப்பட்ட, சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு ஆலோசனை கலப்பது தொடர்பான கொள்கையாகும்.
- தகவல் அறியும் உரிமை (திருத்த) சட்டம் 2019, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு (திருத்த) சட்டம் 2019, நொடிப்பு - பொருளறு நிலை (திவால் சட்ட இரண்டாவது திருத்த) மசோதா, 2021, விவசாய சீர்திருத்தம் என்ற பெயரில் 2020இல் கொண்டுவரப்பட்ட மூன்று கொடூர சீர்திருத்த மசோதாக்கள் என்று முக்கியமான பல சட்ட முன்வடிவுகள் பிற அரசியல் கட்சிகளுடன் முன் ஆலோசனை எதுவும் நடத்தாமல் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதாலேயே பொதுவான ஆய்வுக்கு உட்படுத்தாமல் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் விருப்பப்படி நிறைவேற்றிக்கொள்ளும் உரிமை அரசுக்கு தரப்படவில்லை. இந்தத் தொடரிலாவது அறிமுகப்படுத்தவுள்ள மசோதாக்களைப் படித்துப் பார்க்க, ஆலோசனைகளைக் கூற 30 நாள்கள் அவகாசம் தரப்படுமா?
அவை ஒத்திவைப்பு விவகாரம்
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் எத்தனை நாள்களுக்கு நடைபெற வேண்டும் என்று அவை அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவுசெய்து அறிவிக்கப்படுகிறதோ, அத்தனை நாள்களுக்காவது அவையை முழுதாக நடத்துங்கள். கடந்த ஏழு தொடர்களாகவே, அறிவிக்கப்பட்ட நாள்களுக்கு சராசரியாக ஐந்து நாள்கள் முன்னதாகவே, நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டு கூட்டத் தொடர் முடிக்கப்படுகிறது. 2020 டிசம்பரில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கூட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உண்மையான காரணம், விவசாயிகளின் உறுதியான தொடர் போராட்டம் காரணமாக வேறு வழியின்றி மூன்று வேளாண் சீர்திருத்த மசோதாக்களை விலக்கிக்கொள்வதாக அறிவித்த அரசு அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்தைச் சந்திக்க அஞ்சியே அந்த நடவடிக்கையை எடுத்தது.
- ஓராண்டில் மொத்தமாகவே நூறு நாள்களுக்கும் குறைவாகத்தான் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. 1974க்குப் பிறகு மாநிலங்களவை கடந்த முறைதான் அதிக நாள்களுக்கு கூடியிருக்கிறது! மக்களவை 1952-1970 காலங்களில் ஆண்டுக்கு 121 நாள்கள் நடந்திருக்கிறது, 2,000 முதல் அந்த சராசரி 68 நாள்களாகக் குறைந்துவிட்டது.
- நாடாளுமன்றத்தின் மூன்று கூட்டத் தொடர்களுக்கும் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் கட்டாயம் கூட்டம் நடக்க வேண்டும்; ‘ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள்களுக்காவது நாடாளுமன்றம் கூட வேண்டும்’ என்று அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய தனிநபர் மசோதாவை 2019இல் கொண்டுவந்தேன். பாஜக இதை ஏற்று, ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்ட நாள்களில் கூட்டம் நடத்த, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள்கள் அல்லது அதற்கும் மேல் அவைகூட நடவடிக்கை எடுக்குமா?
- பாரதிய ஜனதாவுக்கு என்னுடைய சவால்களைச் சுருக்கமாக இப்படித் தொகுக்கிறேன், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவாருங்கள், மக்களவைக்குத் துணைத் தலைவரை நியமியுங்கள், மாநிலங்களவையில் விதி எண் 267இன் கீழ் விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதி கோரினால் ஏற்றுக்கொள்ளுங்கள், மசோதாக்களை சட்டமாக்குவதற்கு முன்னால் போதிய அவகாசம் தந்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துங்கள், ஆண்டு தோறும் இன்னின்ன நாள்களில் நாடாளுமன்றம் கூடியாக வேண்டும், குறைந்தபட்சம் 100 நாள்களுக்கு அவை நடந்தாக வேண்டும் என்று அறுதியிட்டு ஆணையிடுங்கள்.
நன்றி: அருஞ்சொல் (16 – 12 – 2022)