TNPSC Thervupettagam

ஆஸ்துமா விடுக்கும் சவால்!

May 5 , 2020 1716 days 821 0

உலக அளவில் ஆஸ்துமா

  • உலக அளவில் ஒவ்வொரு 10 ஆஸ்துமா நோயாளிகளிலும் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி 3,50,000 குழந்தைகள் உள்பட 1.5 முதல் 2 கோடி வரை ஆஸ்துமா நோயாளிகளைக் கொண்ட இந்தியாவில், குழந்தைப் பருவ ஆஸ்துமாவில் 90%-ம், வயது வந்தோர் ஆஸ்துமாவில் 50%-ம் சுற்றுச்சூழல் ஒவ்வாமை காரணமாக ஏற்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் 1,00,000 குழந்தைகளில் 170 புதிய ஆஸ்துமா நோயாளிகள் போக்குவரத்து தொடர்பான மாசுவினால் உருவாகின்றனர் என்றும் குழந்தைப் பருவ ஆஸ்துமாவில் 13% போக்குவரத்து தொடர்பான மாசுடன் தொடர்புடையது என்றும் லான்செட் ஆய்வு கூறுகிறது.
  • உலகின் அனைத்து நாடுகளிலும் குழந்தைகளிடையே மிகவும் பொதுவான நோயாக ஆஸ்துமா காணப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி 80%-க்கும் அதிகமான ஆஸ்துமா இறப்புகள் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.

இந்தியாவில் ஆஸ்துமா

  • இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 6% குழந்தைகள், 2% பெரியவர்களுக்கு ஆஸ்துமா உள்ளது. பெரும்பாலான இந்திய மக்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. எனவே, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பரந்த இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்துமா.
  • இந்தியாவில் மருத்துவ வளமிக்க மாநிலங்கள், சுகாதார வசதிகள் சிறப்பாக உள்ள நகர்ப்புறங்களில் குறைந்துவரும் ஆஸ்துமா இறப்பு விகிதம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
  • 2015-ஆம் ஆண்டில், சுவாச நோய்களுக்கான இந்திய நெஞ்சக நோய் - சுவாசம் தொடர்பான மருத்துவர்கள் சங்கம் தேசிய ஆஸ்துமா வழிகாட்டுக் கொள்கையை வெளியிட்டது.
  • எனினும், இந்த வழிகாட்டுதல்களை மருத்துவ நிபுணர்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை.

நகர்ப்புறங்களில் ஆஸ்துமா

  • சென்னையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, சுவாச பிரச்னைகளின் பாதிப்பு 18%-மாக, ஆஸ்துமா பாதிப்பு 5%-மாக இருப்பதாகக் கூறுகிறது.
  • கிராமப்புறங்களில் 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 2.6% பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக லூதியானாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
  • நகர்ப்புற, கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் ஆஸ்துமா, நகர்ப்புறங்களில் தொழிற்கூடங்கள், வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உமிழ்வு, மக்கள்தொகை அடர்த்தி மற்றும் நெருக்கமான வீடுகள் காரணமாக இந்த அதிகரிப்பு காணப்படுகிறது. இவை
  • அனைத்தும் காற்றின் தரத்தினைப் பாதிப்பதால் ஏழைகளின் உடல் நலம் மற்றும் வாழ்கைத் தரத்தினை நேரடியாகப் பாதிக்கிறது.
  • ஆஸ்துமா பாதிப்பு ஒருவரின் சமூக, உடல், உளவியல் நல்வாழ்வைப் பாதிக்கிறது.
  • வீடுகளின் தனி அறைகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சுவாச நோய்த்தொற்று, ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் பரமேஷின் ஆய்வு கூறுகிறது.
  • ஒற்றை அறை வீடுகளில் வசிக்கும் குழந்தைகளில் 67% பேருக்கும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட வீடுகளில் வசிக்கும் குழந்தைகளில் 37% பேருக்கும் சுவாச நோய்த்தொற்றுகள் இருந்ததாக இந்த ஆய்வு கூறுகிறது.
  • ஏழைக் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் பணியிடத்திலிருந்து ஆஸ்துமாவைப் பெறுகிறார்கள். இதனால் ஏழைக் குடும்பங்கள் ஆஸ்துமாவைத் தடுக்க முடியாது.

பூச்சிகளால் ஆஸ்துமா

  • இந்தியாவில் தூசு, கரப்பான் பூச்சி, மகரந்த ஒவ்வாமை முதலானவை ஆஸ்துமாவுக்கான மிகப் பெரிய காரணங்களாக ஒரு நோயறிதல் மையத்தின் பகுப்பாய்வு கூறுகிறது.
  • 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரை சேகரிக்கப்பட்ட 63,000 நோயாளி தரவுகளின் பகுப்பாய்வின்படி, கரப்பான் பூச்சிகளால் பரப்பப்படும் தூசு காரணமாக உண்டாகும் ஒவ்வாமை 60% நோயாளிகளுக்கு ஆஸ்துமா உருவாக முக்கியக் காரணமாக உள்ளது.
  • தூசு, மகரந்தம், பூச்சி, வளர்ப்புப் பிராணிகள் உண்டாக்கும் சுற்றுச்சூழல் ஒவ்வாமை 90% குழந்தைப் பருவ ஆஸ்துமாவுக்கும் 50% வயது வந்தோர் ஆஸ்துமாவுக்கும் காரணமாக அமைகிறது.
  • குழந்தைகள், வயதான நோயாளிகள் பயன்படுத்துவதற்கு கடினமான ஸ்பைரோமெட்ரி, ஆஸ்துமாவைக் கண்டறிய நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள முறையாகும்.
  • கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவத் துறையின் ஆராய்ச்சியாளர்கள் எளிய ரத்த பரிசோதனை மூலம் ஆஸ்துமாவைக் கண்டறிய ஓர் உயிரி குறிப்பானை (பயோமார்க்கர்) கண்டுபிடித்துள்ளனர்.
  • சுவாசக் குழாயில் ஒவ்வாமை உயிரணுக்களை செலுத்தி அதன் வாழும் காலத்தைக் கொண்டு ஆஸ்துமாவைக் கண்டறியும் முறை இது.

ஆஸ்துமா ஏற்படுத்தும் செலவு

  • உலக பொருளாதாரத்தில் காச நோய், எய்ட்ஸ் ஆகிய இரண்டு நோய்களுக்கும் ஆகும் செலவைவிட ஆஸ்துமா ஏற்படுத்தும் செலவு அதிகம்.
  • அமெரிக்கா 600 கோடி டாலரையும் (ரூ.45,414 கோடி), பிரிட்டன் சுமார் 180 கோடி அமெரிக்க டாலரையும் (ரூ.13,624 கோடி) ஆஸ்துமா நோயாளிகள் பராமரிப்பிற்காகச் செலவிடுகின்றன. ஆஸ்திரேலியாவில் ஆஸ்துமாவுடன் தொடர்புடைய ஆண்டு நேரடி - மறைமுக மருத்துவச் செலவுகள் சுமார் 46 கோடி அமெரிக்க டாலர் (ரூ.3,481 கோடி).
  • மலேசியாவில், குழந்தைகளுக்கு ஆஸ்துமா சிகிச்சை அளிப்பதற்கான சராசரி மாத செலவு 15.56 அமெரிக்க டாலர் (ரூ.1,177 கோடி). அங்கு ஆஸ்துமா சிகிச்சைக்காக 2015-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.13,945 கோடி செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நாடுகளுக்கிடையே மாறுபடும் ஆஸ்துமாவுக்கான பொருளாதாரச் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொது சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு, புவியியல் அமைப்பு, தரவுகள், சுகாதார அமைப்பில் பொதுத் துறை, தனியார் அமைப்புகளின் பங்கு, சுகாதார சேவைகளின் பராமரிப்பு நிலை, ஆரம்ப சுகாதார அமைப்பின் நிலை, கல்வி, மருந்துத் துறை இணைப்பு, ஆஸ்துமா நோயாளிகளின் மறுவாழ்வு, மருந்து தொடர்பான அரசு, மருந்துத் தொழில் உறவு போன்ற காரணிகளால் மாறுபடுகிறது.
  • சுற்றுச்சூழல் காப்போம். அதன் மூலம், ஆஸ்துமாவின் தாக்கம் குறைப்போம்!
  • (இன்று உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்)

நன்றி: தினமணி (05-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்