TNPSC Thervupettagam

இ-சிகரெட் தடை: உறுதி அவசியம்

September 23 , 2019 1892 days 879 0
  • புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க உதவுகிறது என்று விளம்பரம்செய்து அறிமுகப்படுத்தப்பட்ட ‘இ-சிகரெட்’, அதற்கு மாறாக உயிராபத்தை ஏற்படுத்திவருவதால், இந்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து தடைவிதித்துள்ளது. இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களில் கணிசமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கமுள்ளவர்களே.

புள்ளிவிவரம்

  • 2016 முதல் 2019 வரையில் இந்தியாவுக்குள் ரூ.1.35 கோடி மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் இறக்குமதியான தரவு அரசுக்குக் கிடைத்திருக்கிறது. உயிராபத்தை ஏற்படுத்தும் இந்த சிகரெட், இந்தியாவில் பரவிவருகிறது என்று தெரிந்தவுடன் அரசு தடை நடவடிக்கையை எடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

தீங்குகள்

  • பீடி, சிகரெட் போன்றவற்றை நீண்டகாலம் பயன்படுத்தி, அதற்கு அடிமையானவர்கள் புகைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான மாற்று வழிகளில் ஒன்று என்று இ-சிகரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிக ஆபத்தில்லாதவை என்று முதலில் கூறப்பட்ட இந்த வகை சிகரெட்டுகள், அசல் சிகரெட்டுக்கு நிகரான தீங்குகளை உடலுக்கு விளைவிப்பவை என்பது பிறகு நடந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் இ-சிகரெட் பிடிப்பவர்கள் அதிகம். அங்கு பலரும் இதற்கு அடிமையாகி, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில்கூட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நியூயார்க் இந்த வகை சிகரெட்டுகளுக்குத் தடைவிதித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
  • புகைபிடிப்பவர்கள் சிறிது காலம் இ-சிகரெட்டைப் பிடித்துவிட்டு, பிறகு அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இ-சிகரெட் தயாரிப்பாளர்கள் இதிலும் நிகோடினைச் சேர்த்து, நறுமணங்களையூட்டி அசல் சிகரெட்டைப் போலவே இதையும் மாற்றி, தங்களுடைய விற்பனை உத்தியைக் கடைப்பிடித்தனர்.
  • விளைவாக, புகைபிடிப்பவர்களின் சிகரெட் ரகம்தான் மாறியதே தவிர, பழக்கம் போகவில்லை. ‘இ-சிகரெட்டுகள் மற்ற சிகரெட்டுகளைப் போலத் தீங்கானவை அல்ல’ என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இ-சிகரெட்டில் உள்ள நிகோடின் அளவும் தீங்குதரக்கூடிய விதத்திலேயே இருக்கிறது என்பது மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
  • இ-சிகரெட் பிடிப்பவர்களுக்கும் சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், நரம்புக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளன.

அவசரச் சட்டம்

  • இ-சிகரெட் தடை அவசரச் சட்டம் 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. இனி, இவ்வகை சிகரெட்டை இந்தியாவில் தயாரிப்பது, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்வது, இங்கிருந்து ஏற்றுமதி செய்வது, விற்பது, விநியோகிப்பது, இருப்பில் வைத்திருப்பது, விளம்பரப்படுத்துவது என்பது சட்ட விரோதக் குற்றம்;
  • இக்குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை அல்லது ரொக்க அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இ-சிகரெட் தொடர்பாகக் குற்றமிழைப்பவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே காவல் துறை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கலாம்.
  • மிக முக்கியமான இந்த இ-சிகரெட் தடை நடவடிக்கையைப் பொறுத்தவரை தடுமாற்றத்துடன் அரசு செயல்படக் கூடாது; முற்றாக ஒழிப்பதற்கான ஆயத்தங்களில் இறங்க வேண்டும். காவல் துறை இதில் முழு அக்கறை காட்ட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்