TNPSC Thervupettagam

இக்கரைக்கு அக்கரை பச்சை

June 6 , 2024 25 days 79 0
  • அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவை இருநூறு வருடங்களுக்கு மேலாக ஜனநாயகத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்நாடுகளில் தனி மனித சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சட்ட திட்டங்கள் இருக்கின்றன, ஆனால் அவை எந்தவிதத்திலும் ஒருவருடைய சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று வாழ்க்கையை நடத்துவது ஒருவிதத்தில் நல்லது. நமது நாட்டிலோ மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தொழிலாகக் கொண்டு அலைபவர்கள், வம்பு பேசுபவர்கள் அதிகம்!
  • அமெரிக்க மக்கள் தனிமனித சுதந்திரத்தைக் கடைப்பிடித்தாலும் அமெரிக்க நாடு அவ்வாறில்லை. சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் அதிகாரம் கோலோச்ச வேண்டும் என்பது அமெரிக்க வெளியுறவு சித்தாந்தமாக தொடர்ந்து வருகிறது. உலகெங்கிலும் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்ற போர்வையில் பல நாடுகளின் உள்ளூர் பிரச்னையில் அது தலையிடுகிறது.
  • உலகில் எங்கெல்லாம் சர்வாதிகாரம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் ஜனநாயகத்தை நிலைநிறுத்த கங்கணம் கட்டிக் கொண்டு சர்வதேச போலீஸ்போல் அமெரிக்கா இயங்கி வருகிறது. ஆனால், அமெரிக்காவில் என்ன நடக்கிறது? உள் நாட்டில் சில பிரச்னைகள் மக்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
  • பிரிட்டனின் காலனியாக இருந்த அமெரிக்கா, 1776-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி அந்த நாட்டின் ஆளுகையிலிருந்து தன்னை விடுவித்து சுதந்திர நாடாக கால் பதித்தது. ஒவ்வொரு வருடமும் ஜூலை நான்காம் தேதியை அமெரிக்கர்கள் ஒரு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். நாட்டிற்கு உழைத்தவர்களை நினைவுகூரல், அமெரிக்க அரசியல் சாசனத்தை பற்றிய விழிப்புணர்வு, மக்கள் கூடும் பொதுஇடங்களில் வாண வேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அதே நன்னாளில் பல துப்பாக்கிச்சூடு பயங்கரங்களும் நடைபெறுகின்றன என்பது வேதனைக்குரியது.
  • அமெரிக்க அரசியல் சாசனத்தின் இரண்டாவது திருத்தத்தின்படி அந்நாட்டு குடிமக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமையுண்டு. அதில் கட்டுப்பாடு இல்லை. கடையில் வாங்கிக் கொள்ளலாம். தற்காப்பிற்கு ஆயுதம் தேவை என்ற நிலை, நாட்டில் நிலவும் உள்நாட்டு பாதுகாப்பின்மையை உணர்த்துகிறது என்பதை மறுக்கலாகாது.
  • நிதானமிழந்த பல மக்கள் துப்பாக்கியை தங்களது பிள்ளைகளிடம் கொடுத்து சிறு வயதிலிருந்தே துப்பாக்கி கலாசாரத்தை வளர்க்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், அமெரிக்காவில் மருந்து வாங்குவதில் அதிக கட்டுப்பாடு. மருத்துவர் சீட்டு இல்லாமல் ஒரு மருந்து வாங்க முடியாது. ஆனால், ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் துப்பாக்கி வாங்கலாம்! ஏன், வெடிகுண்டு தயாரிக்க வேண்டிய ரசாயனப் பொருள்களை சுலபமாக வாங்கலாம்!
  • பொது இடங்களில் துப்பாக்கி ஏந்திய தனி நபரால் கண்மூடித்தனமாக நடத்தப்படும் "மாஸ் ஷூட்டிங்' கடந்த பத்து வருடங்களில் மூன்று மடங்கு அதிகரித்து விட்டது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2023-இல் 656 சம்பவங்களில் 712 நபர்கள் உயிரிழந்தனர். சுமார் 2,650 அப்பாவி மக்கள் காயமுற்றனர். பள்ளிகள், கல்லூரிகளில் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சகட்டுமேனிக்கு துப்பாக்கியால் சுடும் நிகழ்வுகளும் இதில் அடங்கும்.
  • அந்நாட்டின் 27 மாகாணங்களில் உரிமம் இல்லாமலே துப்பாக்கி வைத்திருக்கலாம். மீதம் 23 மாகாணங்களில் மட்டும் உரிமம் பெற வேண்டும். அதுவும் எளிதாக கிடைத்துவிடும். 2023-இல் 1.4 கோடி துப்பாக்கிகளை அமெரிக்க மக்கள் வாங்கினர். துப்பாக்கிச்சூட்டால் கடந்த ஆண்டு 18,874 பேர் மாண்டனர். இதில் தற்கொலைகள் அடங்காது. தற்கொலைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவது எளிதாக கிடைக்கும் துப்பாக்கிதான் என்பது வருத்தமளிக்கும் தகவல்.
  • அமெரிக்காவில் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். திருமண வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லை, ஏனெனில் அதோடு வரக் கூடிய பொறுப்பு, கடமைகளைக் கண்டால் எங்கே தனது தனி சுதந்திரம் பாதிக்கப்படுமோ என்ற பயம்! துணைக்கு பூனை, நாய் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறார்கள். அவசர உலகில் முகம் கொடுத்து பேசக்கூட நேரம் இல்லை, மனமும் லயிக்காது. பிரசித்தி பெற்ற சான்பிரான்சிஸ்கோ நகரில் பசிபிக் கடல் முகத்துவாரத்தில் அமைந்துள்ள கோல்டன் கேட் பிரிட்ஜிலிருந்து மன உளைச்சல் காரணமாக தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர் எண்ணிக்கை அதிகம்.
  • அமெரிக்க சமுதாயத்தை உலுக்கும் இன்னொரு பிரச்னை, பெண்கள் தங்கள் விருப்பப்படி கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான உரிமை. உச்சநீதிமன்ற வழக்கு "ரோ எதிர் வேட்' மூலம் "கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை' என்று வழங்கப்பட்ட தீர்ப்பு பெண்களுக்கு கருக்கலைப்பு சுதந்திரமும் பாதுகாப்பும் அளித்தது. இது 1973-லிருந்து தொடர்ந்து வந்தது. ஆனால் 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் "டாப்ஸ் எதிர் ஜாக்சன்' என்ற வழக்கில் ரத்து செய்துவிட்டது. அந்தந்த மாநிலம் இதைப் பற்றி சட்டம் இயற்றி முடிவு செய்யலாம் என்ற தீர்ப்பு பெண் உரிமைக்கு மிகப் பெரிய பின்னடைவானது.
  • அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் இருபது மாநிலங்களில்தான் கருக்கலைப்பதற்கான சட்டம் உள்ளது. பிறக்கப் போகும் குழந்தையை வறுமையின் காரணமாக பராமரிக்க முடியாத காரணத்தால் கருக்கலைக்க நேரிடும். தகாத உறவினால் ஏற்படும் கர்ப்பத்தை சட்டப்படி கலைப்பதற்கு பல மாநிலங்களில் வழியில்லை. வசதி படைத்தவர்கள் வேறு மாகாணங்கள் சென்று கருவைக் கலைத்துக் கொள்ளலாம். ஆனால், ஏழைகள் என்ன செய்வார்கள்? மருத்துவக் காப்பீடு அந்தந்த மாகாணத்துக்கு மட்டுமே பொருந்தும்.
  • சட்டப் பாதுகாப்பு உள்ள வேறு மாகாணங்களுக்கு சென்று சிகிச்சை பெற வசதியிருக்காது. முடிவில், குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கருக்கலைப்பு செய்யக் கூடாது என்று சொல்லும் அரசு பிறந்த குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதில்லை. அது பெற்றோர்களின் பொறுப்பு என்று விட்டு விடுகிறார்கள். தாயின் மடியில்தான் சுமை விழும்.
  • டாப்ஸ் தீர்ப்பிற்கு பிறகு நிகழ்ந்த ஒரு மனதை உலுக்கும் சம்பவம். தகாத வன்புணர்ச்சிக்கு பலியான 10 வயது இளம் பெண் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தைச் சேர்ந்தவள். அங்கு கருக்கலைப்பு சட்டம் இல்லாததால் அருகில் இண்டியானா மாகாணத்திற்குச் சென்று கருக்கலைப்பு சிகிச்சை பெற்றாள். சிகிச்சை அளித்த மருத்துவர் பெர்னார்டு மீது அந்த மாகாண மருத்துவக் கவுன்சில் விசாரணை நடத்தி அபராதம் விதித்தது! அந்த அளவிற்கு கருக்கலைப்பு கட்டுப்பாடு உள்ளது.
  • கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் 2012-இல் சவிதா என்ற இந்திய வம்சாவளிப் பெண் 17 வாரக் கர்ப்ப நிலையில் கருவைக் கலைத்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்றிருந்தும் அந்நாட்டில் கருக்கலைப்பு சட்டம் இல்லாததால் கருவோடு உயிர் இழந்தாள். இந்தச் சம்பவத்திற்கு பல நாடுகளிலிருந்து கண்டனம் எழுந்தது. அதன் பிறகு சட்டம் மாற்றப்பட்டு மருத்துவ ஆலோசனை அடிப்படையில் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது.
  • நம் நாட்டில் கருக்கலைப்பு சட்டம் 1971-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தங்களது உடல் சம்பந்தமாக முடிவு எடுக்க பெண்களுக்கு உள்ள பூரண சுதந்திரத்தை இந்த சட்டம் உறுதி செய்தது. அதன்படி கர்ப்பப் பையில் வளரும் கருவை 20 வாரத்திற்குள் பதிவு பெற்ற மருத்துவர் ஆலோசனையின்படி கலைத்துக் கொள்ள உரிமை தரப்பட்டுள்ளது. 2021-இல் பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தில் கருக்கலைப்பு காலம் 22 வாரம் வரை நீட்டிக்கப்பட்டது. அதற்கு மேல் நீதிமன்றம் மூலமாக தகுந்த காரணங்கள் அடிப்படையில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
  • பாலியல் கொடுமை, வன்புணர்ச்சி உள்ளிட்டவை மூலம் ஏற்படும் கருவை தகுந்த மருத்துவ வசதியுடன் கலைக்க சட்டம் உதவுகிறது.
  • இந்தியாவில் 1971-லேயே முற்போக்கான கருக்கலைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது மட்டும் அல்லாது, குழந்தைகளுக்குப் போதுமான போஷாக்கும் வளர்ப்பும் அளிக்க நாடெங்கிலும் 13.9 லட்சம் அங்கன்வாடிகள் என்ற குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் மட்டும் 54,442 காப்பகங்கள் செயல்படுகின்றன. பெண் சிசு கொலைகளைத் தடுக்க தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்டு அரசே பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் முற்போக்குத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
  • ஒவ்வொரு நாட்டிலும் பல பிரச்னைகள். கரோனா நோய்த்தொற்று 2020-21-இல் உலகைத் தாக்கியபோது அதன் பொருளாதார, பொது சுகாதார பாதிப்பால் துவண்டு மீள முடியாத நிலையில் தவிக்கும் நாடுகள் அதிகம். அவற்றை எல்லாம் ஒப்பிடுகையில் நமது நாடு எவ்வளவோ பிரச்னைகளுக்கு இடையில் நிமிர்ந்து நிற்கிறது. இயற்கை வளம், நீர்நிலைகள் நிறைந்த நாடு. மிகப் பெரிய ஜனநாயக தேர்தலுக்குப் பிறகு வலிமையான தலைமையில் பிரகாசமான வளர்ச்சியை நாடு எட்டப் போகிறது.
  • அக்கரை பச்சை என்று பிற நாடுகளை உயர்த்தி, நமது நாட்டைப் பழிப்பவர்கள் வலையில் விழாது பாரத நாட்டை மேலும் மேம்படுத்த உறுதி எடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (06 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்