TNPSC Thervupettagam

இங்கிலாந்திலிருந்து 200 டன் தங்கத்தை எடுத்து வந்தது ஏன்?

December 16 , 2024 9 days 31 0

இங்கிலாந்திலிருந்து 200 டன் தங்கத்தை எடுத்து வந்தது ஏன்?

  • உலக நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்காக, ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளையும் தங்கத்தையும் அந்நியச் செலாவணி கையிருப்பாக வைத்திருப்பது வழக்கம். தங்கம் கிடைப்பது அரிதாகி வருவது உட்பட பல காரணங்களால் அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் தங்கத்தை தொடர்ந்து வாங்கி குவித்து வருகின்றன.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மொத்த அந்நியச் செலவானி கையிருப்பில் தங்கத்தின் பங்கு கடந்த ஆண்டு 7.75% ஆக இருந்தது. இது தற்போது 9.32% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டது.
  • இப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) 200 டன்கள் தங்கத்தை வாங்கியது. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக தங்கம் வாங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 100 டன்கள் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கி உள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் 854 டன்கள் தங்கம்:

  • கடந்த மார்ச் மாத நிலவரப்படி ரிசர்வ் வங்கியிடம் 822.10 டன்கள் தங்கம் கையிருப்பாக இருந்தது. கடந்த 6 மாதங்களில் 32 டன்கள் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 854.73 டன்கள் தங்கம் கையிருப்பில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலவாணி கையிருப்பு மேலாண்மை அறிக்கை கூறுகிறது. இதில் ஒரு பகுதி வெளிநாட்டு வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வேலி:

  • கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடிக்கு பின்பு உலக நாடுகளின் பாதுகாப்பான சொத்தாக தங்கம் கருதப்படுகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பத்திரங்கள் மற்றும் கரன்சிகளின் மதிப்பு குறையும்போது தங்கம் மிகச்சிறந்த, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக உலக வர்த்தகத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் டாலரின் மதிப்பு குறையும்போது அதிக அளவில் டாலரை இருப்பு வைத்திருக்கும் நாடுகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
  • சமீப காலமாக டாலர் மீதான மத்திய வங்கிகளின் நம்பிக்கை குறைந்து வருகிறது. அமெரிக்க கருவூல துறையின் தரவுகளின்படி அமெரிக்க கருவூல பத்திரங்களில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் செய்துள்ள முதலீடுகளின் பங்கு ஜனவரி 2023-ல் 50.1 சதவீதத்திலிருந்து ஜனவரி 2024-ல் 47.2 சதவீதமாக குறைந்துள்ளது. டாலர் உள்ளிட்ட எந்த ஒரு கரன்சியுடனும் தங்கம் இணைக்கப்படாததால் கரன்சிகளின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு எதிரான ஹெட்ஜ் (பாதுகாப்பு வேலி) ஆக தங்கம் விளங்குகிறது.
  • தங்களுக்கு இடையே உள்ள வர்த்தக நிலுவைகளை செலுத்திக் கொள்வதற்கும் சர்வதேச கடன்களை அடைப்பதற்கும் அத்தியாவசிய இறக்குமதிகளை மேற்கொள்வதற்கும் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் கரன்சிகளாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது தங்கத்தையே பயன்படுத்தலாம். அதிக அளவில் தங்கம் வைத்திருப்பது மத்திய வங்கிகளின் நிதி வலிமை மற்றும் நம்பகத் தன்மையை அதிகரிப்பதோடு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. எனவேதான் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.

உலக நாடுகளிடம் 36,700 டன்:

  • உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கையிருப்பில் சுமார் 36,700 டன் தங்கம் உள்ளது. இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் இது 17% ஆகும். இதில் பாதி அளவு தங்கம் 2010-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய வங்கிகளால் வாங்கப்பட்டுள்ளன. மற்றவை பொதுமக்களிடம் உள்ளன. பெரும்பாலான நாடுகள் தங்க இருப்புகளை உலக அளவில் வர்த்தகத்தை மேற்கொள்ளவும் பாதுகாப்பு கருதியும் வெளிநாடுகளின் வங்கிகளில் சேமித்து வைத்துள்ளன. 1697-ல் நிறுவப்பட்ட பேங்க் ஆப் இங்கிலாந்து அதன் விரிவான தங்க சேமிப்பு வசதிகளுக்காக புகழ் பெற்றது.
  • நியூயார்க் பெடரல்ரிசர்வுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய தங்கப் பாதுகாப்பு கிடங்காக அதுவிளங்குகிறது. அதிக அளவில் தங்கத்தை பாதுகாப்புடன் சேமித்து வைப்பதற்குண்டான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது.

67 டன் தங்கம் அடமானம்:

  • இந்தியாவில் 1990-91-ம் ஆண்டில் ஏற்பட்ட அந்நியச் செலவாணி நெருக்கடி ஏற்பட்டது. அப்போது 234 மில்லியன் டாலர் (ரூ.1,984 கோடி) கடன் பெற முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அரசின் வசமிருந்த தங்கத்தில் 20 டன்களை, திருப்பி வாங்கிக் கொள்ளும் உத்தரவாதத்தோடு 1991 மே மாதத்தில் பாரத ஸ்டேட் வங்கியால் வெளிநாட்டு வங்கிகளிடம் அடமானம் வைக்கப்பட்டது. மேலும் ஜூலை மாதத்தில் 405 மில்லியன் டாலர் (ரூ.3,435 கோடி) கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கி 46.91 டன்கள் தங்கத்தை பேங்க் ஆப் இங்கிலாந்திலும் பேங்க் ஆப் ஜப்பானிலும் அடமானமாக வைத்தது.
  • பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைமை சீரான பிறகு அதே வருடத்தில் நவம்பர் மாதம் கடன் முழுவதும் திருப்பிச் செலுத்தப்பட்டது. ஆனால் மீட்கப்பட்ட தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவில்லை. போக்குவரத்து பாதுகாப்பு, வணிக லாபம் போன்ற காரணங்களுக்காக அந்தத் தங்கம் இங்கிலாந்து வங்கியிலேயே இருப்பு வைக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியால் மீட்கப்பட்ட தங்கமும் ரிசர்வ் வங்கிக்கு விற்கப்பட்டு இங்கிலாந்து வங்கியிலேயே இருப்பு வைக்கப்பட்டது.
  • இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்ததால் தங்கள் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் தங்கத்தை அமெரிக்காவும் இங்கிலாந்தும் முடக்கின. மேலும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் மீண்டது.
  • இதுபோன்ற புவிசார் அரசியல் பதற்றங்களால் தங்களுடைய தங்கமும் முடக்கப்படும் அபாயம் இருப்பதால், தனது மொத்த கையிருப்பில் பாதி தங்கத்தை இங்கிலாந்தில் இருப்பு வைத்திருந்த இந்தியா, அதை திருப்பி எடுத்து வர முடிவு செய்தது. இதன்படி, இங்கிலாந்து வங்கியில் இருந்து கடந்த மே மாதத்தில் 106.8 டன்களும் அக்டோபரில் 102.2 டன்களும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • சமீபத்திய நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த தங்க கையிருப்பில் 510.5 டன்கள் மும்பையின் மின்ட் சாலையிலும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலக பெட்டகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 314 டன் பேங்க் ஆப் இங்கிலாந்திலும் 10 டன்கள் ஸ்விட்சர்லாந்தின் பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் மற்றும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 20.3 டன்கள் தங்கம் டெபாசிட்டுகளாக வைக்கப்பட்டுள்ளது.

லாக்கர், காப்பீடு செலவு குறையும்:

  • தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவதால், அவற்றை சேமித்து வைப்பதற்காக வெளிநாட்டு வங்கிகளுக்கு செலுத்தப்படும் லாக்கர் வாடகை மற்றும் காப்பீடு கட்டணங்கள் குறையும். இதுதவிர, தனது நேரடி கட்டுப்பாட்டில் அதிக அளவு தங்கத்தை வைத்திருப்பதன் மூலம் நாட்டின் நிதி நிலைமை மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது.
  • மேலும், வர்த்தகத்தில் டாலரின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிக்கும் இது உதவியாக அமையும். இதனால் ரூபாய் மதிப்பும் வலுவடையும். பரிவர்த்தனைகளில் ரூபாயை ஏற்காத நாடுகளிடம் தங்கத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கருதுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்