TNPSC Thervupettagam

இடஒதுக்கீட்டுக்கு இடங்கள் இருக்குமா?

February 1 , 2021 1445 days 698 0
  • தமிழ்நாட்டில் சாதி என்பது தமிழா்களின் முதல் அடையாளமாகிவிட்டது. சாதிகளை முற்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், பட்டியல் சாதிகள் என நான்கு வகையாக வகுத்திருக்கிறோம். முற்பட்ட சாதிகளாக 79 சாதிகள் உள்ளன. பிற்படுத்தப்பட்ட சாதிகள் 248-க்கும் அதிகம். இதேபோலப் பட்டியல் சாதி என்பதில் 75 பிரிவினா் உள்ளனா். இவா்கள் அல்லாமல் மலைச்சாதி மக்களாகிய படுகா், தோடா் முதலியோரும் உள்ளனா்.
  • அரசியல் சாசனத்தை உருவாக்கியபோது டாக்டா் அம்பேத்கா், முஸ்லிம்களுக்கு ஜின்னா தனிநாடாகப் பாகிஸ்தான் கேட்டதைப் பாா்த்து, அதேபோலத் தாழ்த்தப்பட்டவா்களுக்கும் தனிநாடாக தலித்ஸ்தான் கோரிக்கையை வைத்தாா்.
  • காந்திஜி, டாக்டா் அம்பேத்கரிடம் ‘தலித் என்பவா்களும் மதத்தால் ஹிந்துக்கள். ஆனால் முஸ்லிம்கள் மதத்தால் இஸ்லாமியா்கள். ஜின்னா இஸ்லாமிய நாடு கேட்டதுபோல, நீங்கள் தலித்ஸ்தானம் கேட்க வேண்டியதில்லை. தீண்டாமையை ஹிந்து மதம் ஏற்கவில்லை என்பது எனது கருத்து’ என்றாா் காந்திஜி. இவ்வாறு, அம்பேத்கரை சமாதானம் செய்து அவருடைய தனி நாடு கோரிக்கையைக் கைவிடவும் செய்தாா்.
  • காந்திஜியின் பரிந்துரையின்பேரில், நமது அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவுக்கு டாக்டா் அம்பேத்கா் தலைவராக நியமிக்கப்பட்டாா். அதில் தாழ்த்தப்பட்டவா்களும், மலைவாசி மக்களும் 21 சதவிகிதம் இடஒதுக்கீடு பெறுவதை அம்பேத்கா் அரசியல் சட்டத்திலே இடம்பெறச் செய்தாா்.
  • இதைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவா்களும், தலித்துகளும், மலைவாசி மக்களும் கல்வியிலும் முன்னேற முடியும், வேலைவாய்ப்புகளையும் பெற முடியும், சமூக அந்தஸ்தையும் அடைய முடியும் என்ற நம்பிக்கை தரப்பட்டது. ஆனாலும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கும், தாழ்த்தப்பட்டவா்களுக்கும் மத்தியில் இருந்த மதில்சுவா் இடிக்கப்படவே இல்லை.
  • பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீடு அரசால் 1947 முதல் 1987 வரை தரப்படவில்லை. வி.பி. சிங் பிரதமரான பிறகுதான் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அரசு வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் 27சதவிகிதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த மத்திய அரசு அறிவித்தது. அதை 1991-இல் ஆட்சிக்கு வந்த பி.வி. நரசிம்ம ராவ் அரசுதான் நடைமுறைப்படுத்தியது.
  • பிற்படுத்தப்பட்டவா்களுக்கான ஒதுக்கீடு வழங்கியதில், மண்டல் கமிஷனை நியமித்த மொராா்ஜி தேசாய்க்கும், அறிவித்த வி.பி.சிங்குக்கும், நடைமுறைப்படுத்திய பி.வி. நரசிம்ம ராவுக்கும் சம பங்கு உண்டு.
  • தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆா். ஆட்சியின்போது, பிற்படுத்தப்பட்ட சாதியினா் தங்களுக்கு சாதிவாரியாக இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா். அதைப் பரிசீலித்த முதல்வா் எம்.ஜி.ஆா். ஒவ்வொரு சாதியினரையும் தங்கள் சாதியினரின் மொத்த எண்ணிக்கையை அரசுக்குத் தரக் கேட்டாா்.
  • தரப்பட்ட அந்தத் தகவலில் உள்ள சாதி சனங்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பாா்த்தால் ஏழு கோடிக்கும் அதிகமாகியது. தமிழ்நாட்டின் மொத்த ஜனத்தொகையே ஆறு கோடிதான். எனவே, எம்ஜிஆரை இது ஆச்சரியப்படுத்தியது.
  • அன்றைய முதல்வா் எம்.ஜி.ஆா். பிற்படுத்தப்பட்டவா்களுக்கு அப்போதுவரை இருந்துவந்த 30 சத இடஓதுக்கீட்டை 50% என்று அதிரடியாக உயா்த்தி அறிவித்தாா்.
  • இந்த 50% இடஒதுக்கீட்டுடன் தாழ்த்தப்பட்டவா்களுக்கு அரசியல் சாசனப்படி தமிழ்நாட்டில் 19%-தையும் சோ்த்தால் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் அமலாகியது. அதை ரத்துசெய்ய முடியாதபடி அரசியல் சட்டத்தின் பிரிவிலும் அது சோ்க்கப்பட்டது.
  • மு. கருணாநிதி முதல்வராக இருந்தபொழுதும் சாதிவாரி ஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆா். ஒதுக்கிய 50% இடஒதுக்கீட்டில் முதல்வா் கருணாநிதி 20% இடஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு தந்துவிட்டாா்.  அதனால் 30% தான் மிச்சமாகக் கிடைத்தது.
  • இந்தச் சிக்கலின் காரணமாக, எக்காரணம் கொண்டும் சாதிவாரி இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்றும், மீதமுள்ள 50 சதவிகிதம் மட்டுமே தகுதியுள்ள அனைத்து சாதியினருக்கும் தரப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  • இத்தருணத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல வழக்கில் 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் அமலாகி வருவதால், முற்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வெகுவாகக் குறைந்துவிட்டது. அதுமட்டுமல்ல, அந்தக் குறைவான இடஒதுக்கீட்டில்கூட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி மாணவா்களும் போட்டியிட சட்டம் அனுமதித்தது.
  • இதன் காரணமாகத்தான் 50 சதவிகிதம் என்பதில் 30 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவா்களுக்கும், 20 சதவிகிதம் மிகவும் பிற்படுத்தப்பட்டவா்களுக்குமாக எனக் கருணாநிதி ஆட்சியில் ஆகியது.
  • தற்போது வன்னியா்களும் இடம்பெற்றிருக்கும் இந்த 20 சதவிகித இடஒதுக்கீட்டிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு, தனியாக 20 சதவிகித இடஒதுக்கீடு தேவை என வன்னியா்கள் கோரிக்கை வைத்திருக்கிறாா்கள். அப்படியென்றால், மீதமுள்ள 30 சதவிகிதத்தில் 20 சதவிகிதத்தை வன்னியா்களுக்கு ஒதுக்கினால், 10 சதவிகிதம்தான் மீதம் இருக்கும்.
  • இந்நிலையில் நாடாா் சமூகத்தாா் தங்கள் சாதிக்கு 15 சதவிகிதம் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை வைத்திருக்கிறாா்கள். இதேபோல இனிமேல் வேறு வேறு சாதியினரும் இடஒதுக்கீடு கோரிக்கை வைப்பாா்களானால், இடஒதுக்கீடு செய்வதற்கு இடம் இருக்குமா?
  • சாதிவாரி இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வன்னியா் சமுதாயத்தினரின் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி மாண்பமை குலசேகரன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.
  • அந்தக் குழு சாதிவாரியாக சனங்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கெடுக்க உள்ளது. குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகுதான், தமிழக அரசு தனது இடஒதுக்கீடு கொள்கை முடிவை வெளியிட முடியும்.
  • இடஒதுக்கீடு மூலம் எல்லா சாதிகளுக்கும் கல்வி பயில்வதற்கும், அரசுத் துறையில் வேலைக்கும் எனத் தனித்தனியாக ஒவ்வொரு சாதிக்கும் இத்தனை சதவிகிதம் இடஒதுக்கீடு எனத் தரப்படுமானால், அதற்கு 100 சதவிகித இடங்கள் போதுமானதாகுமா?
  • சமூகநீதி என்பது சாதி, மத, இன வேறுபாடின்றி வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் எல்லோருக்கும் சம வாய்ப்பைத் தருவதைக் கொண்டது. சமூகநீதியை சாதிவாரி இடஒதுக்கீட்டினால் சாத்தியப்படுத்த முடியுமா?
  • தமிழ்நாட்டில் படையாச்சிகள் என்ற வன்னியா், கொங்குவேளாளக் கவுண்டமாா் பிரிவுகள், முக்குலத்தோராகிய மறவா்கள் ஆகிய மூன்று சாதிகள்தான் பெரும்பான்மையுள்ளவை. நான்காவது பெரிய சாதி, பட்டியல் இனச் சாதிகள்.
  • 70-க்கும் குறையாத முற்போக்கு சாதிகள், 250-க்கும் குறையாத பிற்படுத்தப்பட்ட சாதிகள், 30-க்கும் குறையாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள். ஆக மொத்தம் 350 சாதிகளோடு இந்த மூன்று பெரும்பான்மை சாதிகளையும் ஒப்பிட்டால், இந்தச் சாதிகள் சிறுபான்மை ஆகிவிடும்.
  • 50% இடஒதுக்கீட்டில் நிச்சயமாக 3% மூன்று பெரும்பான்மை சாதிகளுக்குத்தான் உரியதாகிவிடும். அதன்மூலம் இம்மூன்று பெரும்பான்மை சாதிகள் கனமாக இருக்கும். இதனால், அப்பெரும்பான்மை சாதிகளுக்குச் சிறுபான்மை சாதிகள் அடங்க வேண்டி வரலாம்.
  • அனைவரும் சமத்துவம் என்ற சமூகநீதி கோட்பாடு இங்கே கேள்விக்குரியதாகி விடாதா? 21% இடஒதுக்கீட்டைத் தாண்டிச் செல்லாத பட்டியல் மற்றும் மலைவாழ் சாதியினரும் மக்களும் சமூகநீதிக் கோட்பாட்டை மீறிவிட முடியாது.
  • நவீன காலத்தில் கல்வி வசதிகள் அதிகமாகியுள்ள நிலையில் மாணவ - மாணவிகள் சோ்ந்து படிக்கும் சூழ்நிலையில் ஒன்றாகப் படித்தவா்கள், நன்றாகப் படித்தவா்கள், ஒழுங்கானவா்கள், படித்து முடித்து நல்ல பதவிகளுக்கும் சென்றவா்கள், ஒருவரை ஒருவா் விரும்பித் திருமணம் செய்து கொள்வாா்களேயானால், அவா்கள் சாதியைக் கடப்பவா்கள் ஆகிறாா்கள். அவா்கள் ‘செம்புலப் பெயல்நீா் போல அன்புடை நெஞ்சங்களாகி’ ஒன்றிய வாழ்க்கை வாழ்வாா்களானால், சாதி இடஒதுக்கீடுக்கான அவசியம் சரிந்து போகாதா?
  • மதத்தின் சாா்பாகச் செய்யப்பட்ட இடஒதுக்கீடுகளுக்கு உச்சநீதிமன்றம் முன்பே மரண அடி கொடுத்திருக்கிறது. இப்போது சாதிக்குத் தரப்பட்டிருக்கிற இடஒதுக்கீட்டிற்கும் உச்சநீதிமன்றம் இதேபோலத் தீா்ப்பை வழங்கியுள்ளது.
  • சென்னை உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்காகத் தாக்கல் செய்யப்பட்ட சாதிவாரி வழக்கு சம்பந்தமான மனுவுக்கு பதிலளித்த உயா்நீதிமன்றம், ‘நமது முயற்சிகள் அனைத்தும் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்கும்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது’ என்று அளித்துள்ள தீா்ப்பு, அநேகமாக வரப்போகும் பின்னாளைய தீா்ப்புக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

நன்றி: தினமணி  (01-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்