TNPSC Thervupettagam

இடஒதுக்கீட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

January 13 , 2021 1469 days 707 0
  • தலையில் அடிபட்டவர்கள் சுயநினைவுடன் இருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள மருத்துவர்கள் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்பார்கள். என்ன ஆண்டு இது? இந்தியாவின் பிரதமர் யார்? இப்படியே பல கேள்விகள்.
  • இந்தக் கேள்விகளுக்கு “எனக்குத் தெரியவில்லை” என்று பதில் சொன்னால், அந்த எதிர்வினை விநோதமாகப் பார்க்கப்படும். “இடஒதுக்கீட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்பது ஒருவருக்கு சுயநினைவு திரும்பிய பிறகு கேட்பதற்கான நல்ல அல்லது மோசமான கேள்வியாக இருக்குமா என்று நான் அடிக்கடி நினைத்துப்பார்த்ததுண்டு.
  • ஒருபக்கம், ஒவ்வொரு இந்தியருக்கும் இது தொடர்பாகச் சொல்வதற்குக் கருத்து இருக்கிறது. இன்னொருபக்கம், விடாப்பிடியான கருத்துகளை உடையவர்கள் வழக்கமாகத் தங்கள் அறிவுக்குத் தொடர்பில்லாமல் பதில் கூறுகிறார்கள்.
  • ஆனால், நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. சமீப காலம் வரை இடஒதுக்கீடு என்பது நம்மை மிகவும் பிளவுபடுத்தும், மிகவும் ஒன்றுபடுத்தும் பொது விவகாரமாக இருந்துவந்தது. இது, இந்தியர்களை ‘இடஒதுக்கீடு பெறும் பிரிவினர்’, ‘பொதுப் பிரிவினர்’ என்று இரண்டு எதிரெதிர் முகாம்களாகப் பிளவுபடுத்தியது. இவர்களில் பொதுப் பிரிவினர் தேர்தல் அரசியலைத் தவிர, பொது வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் ஆதிக்கம் செலுத்திவருபவர்கள்.
  • 21-ம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் நாம் நுழையும்போது நிலைமைகள் மாறுகின்றன: ‘இடஒதுக்கீடு பெறும் பிரிவினர்’ என்பவர்களையும் ‘பொதுப் பிரிவினர்’ என்பவர்களையும் பிரிக்கும் கோடு மங்கலாகியுள்ளது, ஒவ்வொரு குழுவினருக்குள்ளும் வெகுகாலமாகப் புகைந்துவந்திருந்த வேறுபாடுகளை இனியும் அடக்கிவைக்க முடியாது.
  • இந்த மாற்றங்களெல்லாம் இடஒதுக்கீட்டை ஒரு கருத்தாக்கமாகவும் நடைமுறையாகவும் கருதி எந்த அளவுக்கு அதன் மேல் தாக்கம் செலுத்தியிருக்கின்றன? இந்தக் கேள்விக்கான பதில் பல கோணங்களைக் கொண்டவை.

கோட்டா, சித்தாந்தம், தகுதி

  • இடஒதுக்கீடு – குறிப்பாக சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு – என்பது சித்தாந்தத்தில் ஊறிப்போயிருக்கும் விஷயமாக இருக்கிறது. ஆதிக்கம் செலுத்தும் மேல்சாதி சித்தாந்தத்தில் ஊறிப்போனவர்களின் கண்களுக்கு ‘அவர்களுக்கான’ கோட்டா என்பது அளவுக்கு அதிகமாகவும் சந்தேகத்துக்கு இடமின்றி மோசமானதாகவும் நியாயமற்றதாகவும் தோன்றுகிறது.
  • ‘நமக்கான’ கோட்டாக்கள், அதாவது பொருளாதாரரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான கோட்டாக்கள் போன்றவை, நம் கண்ணுக்குக் கோட்டாக்கள்போல் தோன்றுவதில்லை, அப்படியே தோன்றினாலும் அவையும் சாதிரீதியில் வழங்கப்படும் கோட்டாக்களும் ஒன்றாகத் தோன்றுவதில்லை.
  • இங்கே ஒரு சுவாரசியமான எடுத்துக்காட்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆசிரியராக இருந்த அரசுப் பல்கலைக்கழகமானது கடந்த காலத்தில் வெவ்வேறு துறைகளில் பின்பற்றப்பட்ட சீரற்ற நடைமுறைகளுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்து கொடுத்து நிலைப்படுத்தியது.
  • அந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஹானர்ஸில் சேர்பவர்களுக்காக முதுகலையில் பாதியளவு இடங்களை ஒதுக்கியதன் மூலம் அது மிகப் பெரிய அளவு கோட்டாவை உருவாக்கியது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் எங்கள் பல்கலையின் எம்.ஏ./ எம்.எஸ்சி இடங்களில் 50% அதே பாடங்களில் எங்கள் பல்கலையில் பி.ஏ./ பி.எஸ்சியில் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இது நேரடியான கோட்டா, ஆனால் இது அதிகாரபூர்வமாக ‘தகுதி அடிப்படையிலான முறை’ என்று அழைக்கப்படுகிறது.
  • இடஒதுக்கீட்டின் மீது இருந்த அசூயையை விரட்டுவதற்காக இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதோ அல்லது சித்தாந்தரீதியிலான பார்வையின்மையின் காரணமாக இப்படி உண்மையிலேயே நிகழ்ந்துவிட்டதோ என்பதெல்லாம் முக்கியமில்லை. இந்தப் பெயரில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இது தன்னையறியாமலேயே ‘கோட்டா’, ‘தகுதி’ போன்ற சித்தாந்தரீதியில் எதிரிடையான சொற்களை ஒன்றிணைக்கிறது.
  • உண்மையிலேயே, எல்லா கோட்டாக்களும் தகுதி அடிப்படையிலானவைதான். ஏனென்றால், தகுதி வாய்ந்தவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி அடிப்படையிலான நெறிமுறைகளை அவை வைத்திருக்கின்றன என்பதை மேல்தோற்றத்துக்கு முரண்பாடான இந்தப் பெயரானது நமக்கு உணர்த்துகிறது.
  • தகுதியும் இடஒதுக்கீடும் ஒன்றையொன்று விலக்குபவை அல்ல, ஒருபோதும் அப்படி இருந்ததுமில்லை என்ற சங்கடமான அறிதலுக்கு இது இட்டுச்செல்கிறது. ஒவ்வொரு கோட்டாவும் இன்று தகுதிவாய்ந்தவர்களிடையே கடுமையான போட்டியை ஏற்படுத்துவதைப் போலத்தான் தகுதி என்று சொல்லப்படுவதும்கூட இடஒதுக்கீடு போன்ற ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது.
  • எடுத்துக்காட்டாக, அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளும் தனிப்பயிற்சி நிலையங்களும் பணக்காரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவைதானே. நிதர்சனத்தில், நாம் தகுதி என்று அழைப்பது எப்போதும் திறன், முயற்சி, சமூக மூலதனம் போன்றவற்றின் கலவையாகத்தான் இருக்கிறது; கடைசியில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரிய பங்காற்றுகிறது.
  • இது கொஞ்சம் தெளிவானதாகத் தோன்றலாம். ஆனால் தகுதி என்ற சித்தாந்தத்தால் இது கடுமையாக மறுக்கப்படலாம். இந்தச் சித்தாந்தம் தகுதி என்பதை மிகவும் தனிப்பட்ட நபர் சார்ந்ததாகவும் உள்ளார்ந்த விஷயமாகவும் வரையறுக்கிறது. நடைமுறையில் ‘தகுதி’ என்பது பிறப்புரிமை சார்ந்து ஒருவர் கொள்ளும் மேல்சாதி உணர்வை வெளிப்படுத்துவதற்கான சங்கேதச் சொல்லாக இருக்கிறது.
  • ஆனால், நிறைய மதிப்பெண்களைப் பெறும் ‘அவர்களின்’ எண்ணிக்கை ‘நம்’மில் பலரைவிட அதிகரித்துக்கொண்டே வருவதால் அந்த உணர்வின் மாயம் வலுவிழந்துகொண்டிருக்கிறது. மேலும், தகுதியை அளவிட தேர்வு மதிப்பெண்களை மட்டுமே சார்ந்திருப்பதனால் எழும் பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவையாக ஆகிக்கொண்டிருக்கின்றன. இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பானது (சௌரவ் யாதவ் எதிர். உத்தர பிரதேச மாநிலம்) இது சமூகங்களுக்கிடையிலான சிக்கலான பிரச்சினையாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. பொதுப் பிரிவானது இடஒதுக்கீடு பெறத் தகுதியான பிரிவினர் உட்பட எல்லோருக்குமானது என்பதைத் தெளிவுபடுத்தி 1990-களில் அளிக்கப்பட்ட ‘மண்டல் தீர்ப்’பைத் தற்போதைய தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.
  • சித்தாந்தமானது சட்டத்திடம் பின்தங்கிவிட்டிருப்பதில் வியப்பேதும் இல்லை. பொதுப் பிரிவை மேல்சாதியினருக்கான ஒதுக்கீடாகக் கருத முடியாது என்பதை மேல்சாதி மனதால் அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘இடஒதுக்கீடு பெறும் சாதியினர்’ பொதுப் பிரிவுக்குள்ளும் நுழைவது திறமைக்கான அங்கீகாரமாகக் கருதப்படாமல் ஏதோ அத்துமீறி நுழைந்ததைப் போல கருதப்படுவது இதன் பக்கவிளைவாகும். தகுதி அடிப்படை என்ற வரையறை நம் அமைப்பில் உண்மையில் பகிர்மானச் செயல்பாட்டை ஆற்றுகிறது.
  • குறைந்த அளவே உள்ள இடங்களுக்குப் பெரும் எண்ணிக்கையிலான தகுதிவாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழிமுறையை அது வழங்குகிறது. பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது, காலம்சென்ற அருண் ஜேட்லி குறிப்பிட்டதுபோல் உண்மையான தகுதி என்பதைத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கொண்டு அளவிட முடியாது.

திருப்புமுனைகள்

  • 2021-ம் ஆண்டானது மெட்ராஸ் மாகாணத்தில் ‘கம்யூனல் ஜி.ஓ.’ (வகுப்புவாரி அரசாணை) கொண்டுவந்த நூற்றாண்டு அனுசரிக்கப்படுகிறது. இதுதான் சாதிகள், சமூகங்கள் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. ஜனவரி 9-ம் தேதியானது 2019-ல் கொண்டுவரப்பட்ட ‘பொருளாதாரரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீ’ட்டின் இரண்டாம் ஆண்டு நிறைவுபெற்ற தினமாகும். இதுதான் மேல்சாதியினருக்கென்று கொண்டுவரப்பட்ட (அப்படிக் குறிப்பிடுவதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டாலும்), இடஒதுக்கீட்டுக்கான வெளிப்படையான வழிமுறையாகும்.
  • ஜனவரி 26-ம் தேதியானது நம் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 70-ம் ஆண்டு நிறைவாகும். அதுதான், வரலாற்றில் முதன்முறையாகச் சாதியற்ற குடிநபர் என்ற உருவத்தை உருவாக்கியது. சட்டபூர்வமான இந்த மூன்று நிகழ்வுகளும் தகுதி என்ற சித்தாந்தமும் இடஒதுக்கீடு என்ற கொள்கையும் பின்னிப்பிணைந்த வரலாற்றின் முக்கியமான திருப்புமுனைகளாகின்றன.
  • சாதியமைப்பில் சமத்துவமின்மை நிலவுகிறது என்பதை ஒப்புக்கொண்டு அதை எதிர்கொள்வதற்காக அரசியல்ரீதியில் பொருத்தமான வழிகளைக் கண்டறிவதற்கான காலனிய அரசின் வழிமுறைதான் ‘கம்யூனல் ஜி.ஓ’. நம் அரசமைப்புச் சட்டத்தின் உடன்நிகழ்வுகள் இரண்டு. முதலாவது, சாதியற்றதன்மை என்ற சித்தாந்தத்தின் பிறப்பு, மறைமுகமான இந்த நெறிமுறையின் வெளிப்படையான விதிவிலக்காக இடஒதுக்கீட்டைப் பொருத்துவதும் இதில் சேரும். இரண்டாவது, தகுதியைச் சாதி அரசியலாகக் கொள்ளும் சொல்லாடல். பொருளாதாரரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு. இப்படியாக நம் குடியரசை ஒரு சுற்று சுற்றிவரச் செய்து சாதி என்பதை மறைமுகமான நெறிமுறையாக ஒப்புக்கொள்ளச் செய்திருக்கிறது, அதே நேரத்தில் சாதியற்றதன்மை என்ற முகமூடியை அணிந்திருப்பதும் தொடரவே செய்கிறது.
  • எந்தத் தீர்வும் அருகில் தென்படவில்லை, எனினும் குறைந்தபட்சம் மேல்சாதி அரசியலானது வெளிப்படையாகத் தற்போது நடக்கிறது. மிக முக்கியமாக, தகுதி அடிப்படையிலான சித்தாந்தம் தற்போது அம்பலப்பட்டிருக்கிறது. வாய்ப்புகளைப் பகிர்ந்தளிப்பதற்கும் திறமைகளை மதிப்பிடுவதற்கும் மேலான வழிமுறைகளை நாம் கண்டறியும் சவாலைச் சமாளிக்க இது நமக்கு உதவும் என்று நம்புவோம்.

நன்றி: தி இந்து (13 – 01 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்