- நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்ட ஜனநாயக அமைப்பு முறைகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட ஜனநாயகம்தான் உள்ளது. வடிவங்கள் மாறினாலும் உள்ளடக்கம் ஒன்றுதான்... அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி.
- உலகின் பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவம்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சீனா கொஞ்சம் வித்தியாசமான நாடு. சோஷலிஸ நாடு என்று அதைக் கூற முடியாது. மக்கள் ஜனநாயகப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நாடாக அதை நாம் பார்க்கலாம்.
- ஆனாலும், அதுவும் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்தும் நாடுதான். இந்திய முதலாளித்துவம் எந்த திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை நாம் கணித்தால்தான் இடதுசாரிகளின் அரசியல் பலத்தையும் பலவீனத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
- சுதந்திர இந்தியாவின் இதுவரையான வரலாற்றை மூன்றாகப் பிரிக்கலாம். 1991-க்கு முன்பு வரை ஒரு காலம். 1991-க்குப் பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று கொள்ளலாம். 1991-ல் சோவியத் ஒன்றியத்தின் சோஷலிசப் பரிசோதனை தோல்வியடைந்த பிறகு, இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தது.
- அதுதான் அமெரிக்கா சார்பாக இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலும் திறந்துவிடுவது என்பது. அன்றிலிருந்து இந்தியப் பொருளாதாரம் 2014 வரை பிரம்மிக்கத்தக்க மாற்றத்தை அடைந்தது. புலி தனது இரையைப் பிடிக்கும்போது எந்த அளவு வலுவாகப் பிடிக்குமோ, அதைப் போல் இந்திய முதலாளித்துவம் இந்தியச் சமூகத்தை மிக வலுவாகப் பிடித்தது.
- 2014-ல் நிகழ்ந்தது, ஆட்சியில் அரசியல் கட்சியின் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது எனத் தவறாக நினைத்தவர்கள் அனைவரும், அது அப்படியில்லை என்பதைத் தற்போது உணர்ந்திருப்பார்கள். 1991-ல் எப்படி அடிப்படை மாற்றம் நிகழ்ந்ததோ அதைப் போலவே இன்னொரு மாற்றம் நிகழ்ந்த ஆண்டு 2014.
- அதன் கூறுகள் இரண்டுதான். ஒன்று, அதிவேகப் பாய்ச்சலுடன் முதலாளித்துவம் ஓட ஆரம்பித்திருக்கிறது. இரண்டு, அந்தப் பாய்ச்சலைக் காப்பாற்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் மழுங்கடிப்பதும், அதற்குத் துணையாகச் சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதும் என இரண்டு ஆயுதங்களைக் கையிலெடுத்துக்கொண்டு மத்திய அரசு செயல்படுவதும்.
- இதன் விளைவுகளை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எல்லா மாநிலக் கட்சிகளும் இந்தப் போக்கைப் புரிந்துகொண்டு, அதற்கேற்பத் தங்கள் பாதையை மாற்றியமைத்துக் கொண்டு தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டுவருகின்றன. இன்று எல்லாவித குதிரை பேரத்துக்கும் எல்லா மாநிலக் கட்சிகளும் தயாராக உள்ளன. அவர்களுக்குள் வரும் சண்டை சச்சரவுகளெல்லாம் பேரங்களின் ஒரு பகுதிதான்.
- ஆனால், மிகப் பெரிய அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், இடதுசாரி இயக்கம்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை ஓரளவு வலிமைமிக்க சக்தியாக மாற்றிக்கொண்ட இடதுசாரி இயக்கம், இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை அகற்றும் பணியில் முதலாளித்துவம் தன்னை விரைவாக ஈடுபடுத்திக்கொண்டிருப்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. பொருளாதாரத் துறையிலும் இப்படிப்பட்ட அதிரடி மாற்றங்களையும் இடதுசாரி இயக்கம் எதிர்பார்க்கவில்லை.
- இப்படி எதிர்பார்க்காமல் இருந்ததால்தான் எல்லா மாநிலக் கட்சிகளும் சேர்ந்து ஜோதி பாசுவைப் பிரதமராகச் சிபாரிசு செய்தபோது, அதை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை மறுத்து விட்டது. அவர் பிரதமராகியிருந்தால், ஒருவேளை நாட்டின் தலைவிதி வேறு மாதிரி எழுதப் பட்டிருக்கக் கூடும்.
- ஜோதிபாசு அன்று கூறியபடி அது ‘வரலாற்றுக் குற்றமாக’ மாறிவிட்டது. அதைப் போல, 2008ல் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் என்ற காரணத்தைக் காட்டி, காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டது, இது வருங்காலப் போக்கை அவர்களால் கணிக்க முடியவில்லை என்ற உண்மையை உணர்த்துகிறது.
- 2004-ல் 145 மக்களவை இடங்களை மட்டுமே வைத்திருந்த காங்கிரஸ் 2009 தேர்தலில் 204 இடங்களைப் பெற்றது. இடதுசாரிக் கட்சிகள் 68 இடங்களிலிருந்து வெறும் 12 இடங்கள் என்ற வீழ்ச்சியைச் சந்தித்தன. அவற்றின் கோட்டையான மேற்கு வங்கத்தில் மாபெரும் சரிவை எதிர்கொண்டது.
- ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் நாடாளுமன்றத் தோல்விகளில் தன்னை இழக்காது என்பது சரி என்றாலும், இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் தோல்வியிலிருந்து மீண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளில் இடதுசாரிகள் முற்றிலும் எதிர்பார்க்காத மாற்றங்கள் நாட்டில் நிகழ்ந்துவிட்டன. இவற்றை எதிர்கொள்வது இடது இயக்கத்துக்குச் சாத்தியமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
- ஏனென்றால், அதன் சக்தி குறிப்பிட்ட புவி எல்லைகளுக்குள் உள்ளது. இடதுசாரிக் கட்சிகள் இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்கின்றன. இன்று உழைக்கும் மக்கள் பெறும் பல சலுகைகள் அந்தக் கட்சிகளும், அவற்றின் தொழிற்சங்கங்களும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியதால் விளைந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை. அதைப் போல, அவற்றின் தலைவர்களும் தொண்டர்களும் உழைக்கும் மக்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். மிகவும் நேர்மையானவர்கள்.
- இன்றும், மக்களுக்காகவும் தொழிலாளர் நலன்களுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் இயக்கம் இடதுசாரி இயக்கம் மட்டுமே. அந்த இயக்கத்தின் தலைமையில் மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் (ஆட்சியில் இருந்துகொண்டிருக்கிறது) ஆண்ட இடதுசாரிக் கூட்டணி அரசுகள் மக்கள் நலனில் அக்கறையுடன் பணியாற்றின என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
- ஆனால், சகலமும் மாறிவரும் சூழ்நிலையில், அதற்கேற்றார்போல் தன்னை வடிவமைத்துக் கொள்ள இடதுசாரி இயக்கம் தவறிவிட்டதாகத்தான் தோன்றுகிறது. மார்க்ஸியத்தை உள்வாங்கிக் கொண்டு, அதைச் செயலில் காட்டுவதைவிட, மார்க்ஸிய கோஷங்கள் பிரதானப் படுத்தப் படுகின்றன. அறிவின் தேடல் குறைந்துகொண்டே வரும் சூழலில், அதற்கான களத்தை உருவாக்குவதில் இடதுசாரி இயக்கம் அவ்வளவாக இறங்குவதில்லை.
- இடது மாற்று என்பது ஒரு நம்பிக்கை அளிக்கும் மாற்றாகக் காட்டப்படாமல், வலது அடிப்படைவாதத்தை வெறும் விமர்சனரீதியில் அணுகுவது எந்தப் பயனும் தராது. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக வலது இயக்கம் மக்களைப் பிளவுபடுத்தும்போது, அதற்கு எதிரான மாற்றாக மிகப் பெரிய வடிவில் உருவாக வேண்டிய சவாலை எதிர்கொள்ளாமல், இடது மாற்று உடனடிச் சாத்தியமில்லை.
- இடதுசாரிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், வறட்டுத் தத்துவ இறுக்கங்களிலிருந்தும், ஸ்தாபன இறுக்கங்களிலிருந்தும் வெளிவந்தே ஆக வேண்டும். உலகம் முழுதும் வலதுசாரிகள் உக்கிரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் சூழலில், இந்திய இடது இயக்கம் தங்களுக்குத் தாங்களே போட்டுக்கொண்டிருக்கும் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும்.
- எதிர்காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை வரும்போது, அதற்குத் தலைமை வகிக்க இடதுசாரிக் கட்சிகள் இல்லை என்ற அவலநிலை உருவாகாமல் பார்த்துகொள்ள வேண்டியது அவர்களது கடமை.
நன்றி: தி இந்து (20 – 06 – 2022)