TNPSC Thervupettagam

இடிப்பார் இலாமை

October 19 , 2022 661 days 384 0
  • ஜனநாயகத்தில் யாருமே எந்தப் பதவியிலும் நிரந்தரமாக இருந்துவிட முடியாது. அப்படியே இருந்தாலும்கூட இயற்கை அவர்களைத் தொடர அனுமதிக்காது. அப்படி இருக்கும்போது, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், தாங்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரும் என்பதை மறந்து செயல்பட முனைவது நகைப்புக்குரியது.
  • கடந்த எட்டாண்டுகளில், அதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பல சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. சரியோ, தவறோ அவர் தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்த நடவடிக்கைகள், வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதுடன் பல முன்னேற்றங்களுக்கும் வழி கோலியிருக்கின்றன.
  • இந்தியா "கண்ணாடி நுண்ணிழை'யால் இணைக்கப்பட்டிருப்பதும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு மூலம் மானியம் முறைப்படுத்தப்பட்டிருப்பதும், சிறு நகரங்கள்கூட விமானப் போக்குவரத்தால் இணைக்கப்பட்டிருப்பதும் நரேந்திர மோடி அரசின் செயலாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள்.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொண்ட விதமும், 180 கோடி தவணை தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டதும் உலகமே வியந்து பாராட்டும் மோடி அரசின் சாதனைகள். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மரியாதை ஏற்படுத்தித் தந்திருப்பதற்காகவும், துணிந்து இந்தியாவின் தற்சார்பை முன்னிலைப்படுத்தும் வெளியுறவுக் கொள்கைளை வகுத்திருப்பதற்காகவும் நரேந்திர மோடி அரசை எத்துணை பாராட்டினாலும் தகும்.
  • பிரதமர் நரேந்திர மோடியும், அவர் தலைமையிலான அரசும் எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஆதரிக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்வாக ரீதியிலான வெற்றிகளுக்கு நடுவில், பொருளாதாரக் கொள்கையில் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்பதை சுட்டிக் காட்டத் தோன்றுகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், கட்டுக்குள் அடங்காமல் திமிறும் விலைவாசி, அச்சுறுத்தும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளைக் கண்ணை மூடிக்கொண்டு கடந்துபோக முடியாது.
  • நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதன் அடிப்படையே விமர்சனங்களும், விவாதங்களும்தான். அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்புகள்தான் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும். நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் குறைகளைச் சுட்டிக் காட்டவும், விமர்சிக்கவும், தவறுகளைத் தட்டிக் கேட்கவும் முழு உரிமையும், சுதந்திரமும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவதுதான் நாடாளுமன்ற ஆட்சி முறையின் அடித்தளம்; பலம். அதை பலவீனப்படுத்த முற்பட்டால், அடுத்தாற்போல எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரும்போது அதன் விளைவுகளைச் சந்திக்க நேரும் என்பதை மத்திய - மாநில ஆட்சியில் இருப்பவர்கள் மறந்துவிடலாகாது.
  • நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல், நாடாளுமன்றம் கூடும் நாள்கள் குறைந்து வருகின்றன. அப்படியே கூடும்போதும், விவாதங்கள் நடைபெறும் நேரம் மிகமிகக் குறைவு. மசோதாக்கள் சட்டமாவதற்கு முன்பு, துறை சார்ந்த நிலைக்குழுக்களால் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட்டு, குறைகள் களையப்படும் வழிமுறை பின்பற்றப்படுகிறது. இப்போது அது கைவிடப்படும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
  • 14-ஆவது மக்களவையில் 60% மசோதாக்களும், 15-ஆம் மக்களவையில் 71% மசோதாக்களும், நிலைக்குழுக்களால் விவாதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், 16-ஆவது மக்களவையில் 27% மசோதாக்கள்தான் நிலைக்குழுக்களின் ஆய்வுக்கும் ஒப்புதலுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் உட்பட சில மசோதாக்கள் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டதற்கு, நிலைக்குழுவில் அவை முறையாக விவாதிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படாததுதான் காரணம்.
  • எல்லா பிரச்னைகளையும் விவரமாகவும், ஆழமாகவும் விவாதிக்க நேரம் இருக்காது என்பதால்தான், துறை சார்ந்த சிறிய நிலைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் உள்ள நிலைக்குழுக்கள், ஜனநாயகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிர்வாகத்துக்கும், மக்கள் பிரதிநிதிகளின் சபைக்கும் இடையேயான தொடர்பு அமைப்புகள் அவை. எல்லா எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்களும் ஏதாவது ஒரு துறை சார்ந்த நிலைக்குழுவில் உறுப்பினராக இருப்பதால் அதை ஒரு குட்டி அவையாகவே கருத வேண்டும்.
  • பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் அல்லாமல், அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடனும் செயல்படுகின்றன நிலைக்குழுக்கள். எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் நிலைக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கும் ஜனநாயகத்தை அவைத் தலைவர்கள் கடைப்பிடிப்பது வழக்கம். அந்த நடைமுறைக்கு இன்றைய நரேந்திர மோடி அரசு விடை கொடுக்க முற்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
  • உள்துறை அமைச்சக நிலைக்குழுத் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி மாற்றப்பட்டு பாஜகவின் பிரிஜ்பால், செய்தித் தொடர்பு நிலைக்குழுத் தலைவரான காங்கிரஸின் சசி தரூருக்கு பதிலாக சிவசேனை (ஷிண்டே) கட்சியின் ஜிதன்ராவ் ஜாதவ் என்று பல நிலைக்குழுக்களின் தலைமைப் பொறுப்பு, எதிர்க்கட்சிகளிலிருந்து ஆளுங்கட்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தவறுகள் சுட்டிக் காட்டப்படுவதையும், தட்டிக் கேட்கப்படுவதையும் தவிர்க்க வேண்டும் என்று நரேந்திர மோடி அரசு நினைக்குமானால், அது தவறு செய்கிறது.
  • நம்மை நாமே பார்த்துக்கொள்ள முடியாது; அதற்குக் கண்ணாடி வேண்டும். பெரும்பான்மை பலம் மட்டுமே ஜனநாயகம் அல்ல; அதற்கு எதிர்க்கட்சிகள் வேண்டும்!

நன்றி: தினமணி (19 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்