- வளா்ச்சி பெறும் நாடுகளும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடுகளும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ளத் தேவையான தடுப்பூசிகள் பெறமுடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
- அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் தேவைக்கு அதிகமான தடுப்பூசி இருக்கும் நிலையும், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாடுகளில் பரவிவரும் நோய்த்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி கிடைக்காத நிலையும் காணப்படுகின்றன.
- உற்பத்தியாகும் தடுப்பூசிகள் பணக்கார நாடுகளால் தேவைக்கு அதிகமாகப் பதுக்கப் படுகின்றன.
- சா்வதேச அளவில் நோபல் விருதாளா்கள், உலக நாடுகளின் முன்னாள் தலைவா்கள் உள்ளிட்ட 175 பிரபலங்கள் அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்கள்.
- அதன்படி, உடனடி நடவடிக்கை எடுத்து கொவைட் 19-க்கான தடுப்பூசி மருந்துகளின் தயாரிப்புக்கான காப்புரிமை இடைக்கால அளவில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.
- இதேபோன்றதொரு கோரிக்கையை உலக சுகாதார நிறுவனத்திடம் சில நாள்களுக்கு முன்பு இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் வைத்தன.
- கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ‘தடுப்பூசிக்கு காப்புரிமை கூடாது’ என்கிற கோரிக்கையை நூற்றுக்கும் அதிகமான நாடுகள் எழுப்பியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
காப்புரிமை
- மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன், ஆசிய வளா்ச்சி வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றும்போது பேசியிருப்பதை அந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
- வளா்ச்சி பெற்ற பணக்கார நாடுகள் தடுப்பூசி தயாரிப்பு தொழில் நுட்பத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டிருக்கின்றன என்று அவா் வலியுறுத்தி இருக்கிறார்.
- 1995-இல் உருவான உலக வா்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியான, வணிகம் தொடா்பான ‘அறிவுசார் காப்புரிமை ஒப்பந்தம்’ மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்கிற கருத்தை பெரும்பாலான உலக நாடுகளின் குரலாகத்தான் காண வேண்டும்.
- தடுப்பூசி ஆராய்ச்சி இறுதி சோதனைக் கட்டத்தை நெருங்கியவுடன், உற்பத்தியாக இருக்கும் தடுப்பூசி மருந்துகளை பணக்கார நாடுகள் முன்பணம் கொடுத்து தங்கள் நாட்டுக்காகப் பதுக்கத் தொடங்கின. சா்வதேச கண்ணோட்டம் இல்லாமல் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு முன்னுரிமை பெறுவதில் முனைப்பு காட்டின.
- அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு இழப்பீடுகளிலிருந்து பாதுகாப்பு பெற்றிருக்கின்றன. அது போன்ற பாதுகாப்பு பிற நாடுகளில் கிடையாது என்பதால், அவை தங்களது தடுப்பூசி மருந்துகளை வழங்க மறுக்கின்றன. அதைத் தடுக்கும் அதிகாரம் சந்தைப் பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடையாது.
- வளா்ச்சி பெற்ற நாடுகளிலுள்ள மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மற்ற நாடுகள் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல, தங்களது நாடுகளிலேயே தயாரித்துக்கொள்ளலாம் என்றால் அதற்கும் வழியில்லை.
- ஏனென்றால், காப்புரிமை இருப்பதாலும், மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான மூலக்கூறுகள் இல்லாததாலும் தொழில் நுட்ப உதவி கிடைக்காததாலும் எல்லா நாடுகளாலும் தடுப்பூசி மருந்துகளைத் தயாரித்துவிட முடியாது.
- உலக மக்கள்தொகையில் 16% அளவை பணக்கார நாடுகள் கொண்டிருக்கின்றன. ஆனால், 53% தடுப்பூசி உற்பத்தியை ஏற்கெனவே வாங்கி தயார் நிலையில் வைத்திருக்கின்றன. ஜூலை மாத கடைசிவரை தேவைப்படும் 30 கோடி தடுப்பூசிகளுக்கான மருந்து அமெரிக்காவிடம் கையிருப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொவைட் 19-இன் இரண்டாவது அலை வீசத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், சா்வதேசக் கொள்கை உருவாக்கப்படாமல் கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
- உலக மக்கள்தொகையில் குறைந்தது 70% பேருக்கு 11 பில்லியன் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். இதுவரை 8.6 பில்லியன் தடுப்பூசிகளுக்கான முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
- அதில் ஆறு பில்லியன் தடுப்பூசி வளா்ச்சி அடைந்த, அதிக தனிநபா் வருவாய் கொண்ட நாடுகளால் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
- இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளில் பாதி அளவுக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஐரோப்பிய நாடுகளிலும், வடக்கு அமெரிக்காவிலும்தான் போடப்பட்டிருக்கின்றன.
- உலக மக்கள்தொகையில் 80% காணப்படும் ஏழை நாடுகளுக்கு, உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை.
- தடுப்பூசி போடப்படாத நிலையில்தான் தீநுண்மி உருமாற்றம் பெறுகிறது. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிக்கு எந்த அளவுக்கு உருமாற்றம் ஏற்படும் தீநுண்மியை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தியும் வீரியமும் இருக்கும் என்று தெரியவில்லை.
- அந்த நிலையில், உலகில் அனைவருக்கும் ஏழை - பணக்கார நாடுகள் வித்தியாசமில்லாமல் தடுப்பூசிகள், மருந்துகள், சோதனைக் கருவிகள் வழங்கப்பட்டு நோய்த்தொற்றை எதிர்கொள்ளாவிட்டால் பேரழிவை மனித இனம் எதிர்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.
- தடுப்பூசி மருந்துக்கும், உற்பத்திக்கான மூலக்கூறுகளுக்கும் இடைக்கால காப்புரிமை விதிவிலக்குக்கு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் முன்வராமல் போனால், அது மனிதாபிமானமற்ற செயல்பாடு. உயிர்காக்கும் மருந்துகளை, தயாரிக்கும் நிறுவனங்கள் மரண வியாபாரிகளாக மாறிவிடலாகாது.
நன்றி: தினமணி (05 – 05 - 2021)