இடைநுழைப்பு நியமனங்கள் தீர்வாகிவிடாது
- அரசின் உயர் பதவிகளில் ‘இடைநுழைப்பு முறை’ (Lateral Entry) மூலம், தனித்திறமை வாய்ந்தவர்களைப் பணிக்கு அமர்த்தலாம் என்ற பிரதமர் மோடியின் யோசனை பல்வேறு தரப்புகளிலிருந்துவந்த எதிர்ப்புகளால் கைவிடப்பட்டிருக்கிறது; சமூக நீதியை உறுதிசெய்யும் இடஒதுக்கீட்டு முறையில், இந்த நியமனங்கள் இருக்காது என்பதால் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. அதேசமயம், வேறு கோணங்களிலிருந்தும் இதைப் பலர் கண்டித்துள்ளனர்.
- அரசுப் பணிகளில் இப்போதிருக்கும் அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் கருத்துகளைத் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். ஓய்வுபெற்றவர்களும் அரசின் விமர்சகர்களும் தாராளமாகக் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். அரசு எடுத்த முடிவு மட்டுமல்ல, அந்த முடிவைத் திரும்பப் பெறுவது என்ற முடிவும்கூட கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஒன்றிய அரசின் முன்னாள் கேபினட் செயலர் கே.எம்.சந்திரசேகர், நிதி ஆணையத் தலைவர் அர்விந்த் பனகாரியா, ஃப்யூச்சர் இந்தியா நிறுவன இயக்குநர் ருச்சி குப்தா, பத்தி எழுத்தாளர் சுதிந்திர குல்கர்னி ஆகியோர் முதல் முடிவை திரும்பப் பெறுவது என்ற இரண்டாவது முடிவை விமர்சித்திருக்கின்றனர்.
- சில கருத்துகள் வழக்கத்துக்கு மாறாக இருக்கின்றன. “மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு, எளிமையான தீர்வைப் போல இடைநுழைவு நியமனங்களைக் கருதிவிடுகின்றனர்; எப்போதாவது – ஏதாவது ஒரு துறையில் என்றால் நல்லது, ஆனால் எல்லாத் துறைகளுக்கும், எல்லாப் பொறுப்புகளுக்கும் என்று அமல்படுத்தத் தொடங்கினால் நிர்வாக அமைப்பையே அது நாசப்படுத்திவிடும்” என்று மத்தியத் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் தீபக் குப்தா எச்சரிக்கிறார்.
- ‘த பிரிண்ட்’ இதழில் கட்டுரை எழுதிய திலீப் மண்டல், மிகவும் நுட்பமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். “திறமை ‘எதிர்’ சமூகநீதி என்ற ஒரே கோணத்தில் மட்டும் இதைப் பார்க்கக் கூடாது. துறைசார்ந்த நிபுணர்களை அரசின் உயர்பதவியில் அமர்த்துவது புதிய நிகழ்வு அல்ல, இதற்கு முன்னரும் நடந்துள்ளது” என்கிறார் அவர்.
- ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர், இயக்குநர், துணை செயலாளர் ஆகிய பதவிகளுக்கு 45 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியிட்ட விளம்பரத்தை, மத்தியத் தேர்வாணையம் திரும்பப் பெற்றுவிட்டது. இந்தப் பதவிகள் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அதிகாரம் வாய்ந்த – முக்கியமான பதவிகள் அல்ல.
- ஆதார் அட்டை திட்டத்தைக் கொண்டுவந்த நந்தன் நிலக்கேணி, பொருளாதார சீர்திருத்தங்களைப் புகுத்திய மான்டேக் சிங் அலுவாலியா - மன்மோகன் சிங், நிதித் துறை மறுசீரமைப்பைச் செய்த விமல் ஜலான், பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன், வெண்மைப் புரட்சியைக் கொண்டுவந்த வர்கீஸ் குரியன் போன்றவர்களை நியமிப்பதற்கான முயற்சி அல்ல இது. பிரதமர் மோடி விரும்பியபடி இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் பெற்றாலும், அரசின் நிர்வாகத்தையோ முடிவுகளையோ பெருமளவு மாற்றும் அளவுக்கான முடிவுகளை அவர்களால் எடுக்க முடியாது.
அமைச்சர்களில் சிலர்
- ஒன்றிய அமைச்சரவையிலேயே அவரவர் துறைகளில் நீண்ட அனுபவம் பெற்றவர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் புரி, செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களில் சிலர். பிரதமரின் அலுவலகம் (பிஎம்ஓ), தேசிய பாதுகாப்பு முகமை (என்எஸ்ஏ), நிதி ஆயோக் ஆகியவற்றில் மூத்த அதிகாரிகளும் ஓய்வுபெற்ற அதிகாரிகளும்தான் அதிகம் இருக்கின்றனர்.
- பிரதமர் மோடி தன்னுடைய அமைச்சர்களை நம்புவதைவிட அதிகாரிகளைத்தான் அதிகம் நம்புகிறார். நிதி, உள்துறை, பாதுகாப்பு (ராணுவம்), வெளியுறவு ஆகிய முக்கிய துறைகளில் இரண்டுக்கு அரசியலர்களை அவர் நியமிக்கவில்லை. சமீபத்தில் உக்ரைனுக்கு மோடி சென்றபோது அமைச்சர் ஜெய்சங்கரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும்தான் அருகிலேயே இருந்தனர். முக்கிய முடிவுகளை இந்த அரசு யார் உதவியுடன் எடுக்கிறது என்பதற்கு இது வெளிப்படையான சான்று.
- எனவேதான், புதிய சிந்தனைகளை நிர்வாகத்தில் புகுத்த இடைநுழைவு நியமனங்கள் மூலம் நிபுணர்களைக் கொண்டுவர அரசு முயல்கிறது என்ற வாதம் எடுபடவில்லை. இந்த விவகாரத்தில் அரசுக்குப் பல்வேறு உள்நோக்கங்கள் இருக்கக்கூடும், ஆனால் அந்த முயற்சிகள் பலத்த எதிர்ப்பு காரணமாக தோற்றுவிட்டன. இது ஏன்?
ஒரு எதிரிக்கு ஒரு தோட்டா
- உத்தராகண்ட் மாநிலத்தின் முசோரி நகரில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிக் களமாக இருந்தாலும் தேசிய மாணவர் படைக்கான பயிற்சிக் களங்களாக இருந்தாலும் முதலில் நம் கண்ணில்படுவது ‘ஒரு எதிரி – ஒரு தோட்டா’, ‘ஒரே இலக்கு’ என்று சிவப்பு அல்லது மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட பெரிய பலகையில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகமாகும். அதன் செய்தி தெளிவானது – பல்வேறு அம்சங்களில் மனதைச் சிதறவைத்து இலக்கைத் தவறவிட்டுவிடாதீர்கள், உங்களுடைய தோட்டாவைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள் என்பது.
- இடைநுழைவு நியமனத்தைப் பற்றிச் சிந்தித்த அரசு, வேறு இரண்டை ஒரே சமயத்தில் நிறைவேற்றிக்கொள்ளவும் முயற்சிசெய்தது. முதலாவது, அரசின் வெவ்வேறு பதவிநிலைகளில் நிலவும் ஆள் பற்றாக்குறை, இரண்டாவது, சில முக்கியத் துறைகளுக்கு அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவமும் தனிப் பயிற்சியும் பெற்றவர்களை நேரடியாக நியமித்துக்கொள்வது. 1996 முதல் 2002 வரையில் அனைத்திந்தியப் பணிகளுக்கு ஆள்களைத் தேர்வுசெய்வதில் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டது ஒன்றிய அரசு.
- மாநில அரசுகளும் தங்களுடைய அதிகாரிகளை ஒன்றிய அரசின் தேவைக்கு அனுப்பி வைக்கத் தயக்கம் காட்டின. இதனால்தான் பல பதவிநிலைகளில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. வேளாண்மை விரிவாக்க திட்டங்கள், சைபர் குற்றச் செயல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது, விமானப் போக்குவரத்தில் பன்னாட்டு கூட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு அந்தந்தத் துறைகளின் நிபுணர்களைப் பணியில் சேர்த்தால் பயன் இருக்கும் என்று அரசு கருதுகிறது.
- இந்த இரு நோக்கங்களும் இணைந்த நிலையில், இடைநுழைவு நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய பதவிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட நிலையில், அரசுப் பதவிகளில் நியமனங்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய சமூக நீதிக் கொள்கை என்னாவது என்ற கேள்வி எழுகிறது. இணைச் செயலாளர்களாகவும் இயக்குநர்களாகவும் நியமிக்கப்பட வேண்டிய பதவிகள் எண்ணிக்கை 45. ஆண்டுதோறும் ஐஏஎஸ் பிரிவில் சேர்க்கப்படுகிறவர்கள் எண்ணிக்கையே 180தான். இந்த நிலையில் இது கணிசமான எண்ணிக்கையே. எனவேதான், கூக்குரல்கள் எழுந்தன. நாம் பிரச்சினையின் வேர் பகுதிக்கே செல்வோம்.
பற்றாக்குறை ஏன்?
- ஆட்சிக்கு வந்த சில காலத்துக்கெல்லாம் இந்தப் பற்றாக்குறையை உணர்ந்த மோடி, 2016 - 2017 காலத்திலேயே இடைநுழைவு ஆள் தேர்வுமுறையை ஒரு யோசனையாகத் தெரிவித்தார். இதன் தொடக்கம் 1990களின் நடுப்பகுதியில் ஏற்பட்டது. அப்போது நான் முசோரியில் தேர்வாணையப் பயிற்சி மைய துணை இயக்குநராக இருந்தேன். ஆண்டுக்கு 150 முதல் 170 பேர் வரையில் அனைத்திந்திய பணிப் பிரிவுகளுக்குத் தேர்ந்தெடுத்துவந்தோம். அதை அப்போதைய அரசு - ஐஏஎஸ் பணிக்கு 55, ஐபிஎஸ் பணிக்கு 35, ஐஎஃப்எஸ் (வனத் துறை) பணிக்கு 24 என்று தேர்ந்தெடுத்தால் போதும் என்று குறைத்துவிட்டது.
- மாநில அரசுகளில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசின் பணியில் சேர்க்கும் அளவை 20% என்பதிலிருந்து 33.33% என்று உயர்த்த சரண் சிங் தலைமையிலான அரசு 1979இல் முடிவெடுத்ததே இதற்குக் காரணம். அப்படி முடிவெடுக்கப்பட்டதே தவிர, அடுத்த பத்தாண்டுகளுக்கு அதன்படி கூடுதலாக அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு மாநிலங்களிடமிருந்து பெறவேயில்லை.
- அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கர்நாடக மாநில வனத் துறை அதிகாரிகள் சங்கம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் சங்கங்கள் வழக்கு தொடுத்தன, 1979இல் எடுத்த முடிவை அமல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட நீதிமன்றத்தை நாடின. காலிப் பணியிடங்களைக் கணக்கிடும்போது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணியிடங்களை மட்டும்தான் கணக்கிடுகின்றனர் – ஒட்டுமொத்தமாக தேவைப்படும் அதிகாரிகள் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில்லை என்று தங்களுடைய மனுக்களில் சுட்டிக்காட்டினர்.
- இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்கலாம். மாவட்ட ஆட்சியர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரியை மட்டுமே நியமிக்க முடியும். துணைக் கோட்ட ஆட்சியர், அரசுத் துறை நிறுவனங்களின் தலைமை நிர்வாகி, நிர்வாக இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி வேறு துறைகளின் உயர் அதிகாரிகளையும், அந்தந்த அமைப்புகளிலேயே அனுபவமும் பணிமூப்பும் உள்ளவர்களையும்கூட நியமித்துக்கொள்ள முடியும்.
- மாநில அரசுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கைக்கும் மத்திய தேர்வாணையப் பணிகளுக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கும் இடையில் (எண்ணிக்கையில்) சமநிலை ஏற்படும் வரையில், நேரடியாக ஆள்களைத் தேர்ந்தெடுப்பதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று 1995இல் ஒன்றிய அரசின் மூன்று அமைச்சகங்கள் முன்வந்தன.
- நேரடி நியமனங்கள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது, மாநிலங்களிலிருந்து அனுப்பப்படுவோர் எண்ணிக்கை ஒப்புக்கொண்டபடி இல்லாததுடன் அப்படி அனுப்பப்பட்டவர்களும் பதவிக்காலம் முடிந்தவுடன் ஓய்வுபெற்றதால், காலிப் பணியிடங்கள் அதிகரித்தன. இதனால்தான் பற்றாக்குறை ஏற்பட்டது.
அயல்பணி – பொருந்தாப் பெயர்
- ஒன்றிய அரசின் பணிகளுக்கு மாநில அரசுகளின் அதிகாரிகளை ‘அயல்பணி வகிப்பு’ (டெபுடேஷன்) அடிப்படையில் நியமிப்பது என்பதே உண்மையை மறைப்பதாகும். ‘அயல்பணி வகிப்பு’ என்பது பொருந்தாப் பெயர் (மிஸ்நோமர்), காரணம் அப்படி அனுப்பப்படும் அதிகாரிகள் ஒன்றியம், மாநிலம் ஆகிய இரு அரசுகளின் வேலைகளையும் முழு நேரமும் செய்யக் கடமைப்பட்டவர்கள், பொறுப்பானவர்கள், அதற்கான உரிமைகளையும் பெற்றவர்கள்.
- ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய மூன்று பதவிகளுக்கும் பழையபடி அதிக எண்ணிக்கையில் தேர்வுசெய்வது என்று 2003இல் முடிவுசெய்த பிறகு இந்தப் பற்றாக்குறை குறைந்திருக்க வேண்டும், ஆனால் குறையவில்லை. இந்தத் தாற்காலிக நெருக்கடியைத் தீர்க்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்றிய அரசில் இணைச் செயலர்களாக உள்ளவர்களுக்கு விரைவாகப் பதவி உயர்வு அளிக்க வேண்டும். அந்தப் பதவிகளுக்கு ஏற்கெனவே அனைத்திந்தியத் தேர்வெழுதி அடுத்த நிலைகளில் பணிபுரியும் அதிகாரிகளையும், மாநில அரசுகளில் அதே பதவிநிலையில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றியப் பணிக்கு ஈர்த்து இந்த எண்ணிக்கை பற்றாக்குறையைச் சரிக்கட்டலாம்.
- உலக வங்கியின் நிர்வாகக் குழுவும், பில்-மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும் கொடுத்த யோசனையின் பேரில்தான் இடைநுழைவு நியமனத்துக்கு அரசு அறிவிப்பு செய்தது என்று ஒன்றிய அரசின் வடக்கு பிளாக்கில் பேசப்படுகிறது. ஒரு துறையில் குழுவாகச் சேர்ந்து பணிபுரிந்து பெறும் அனுபவங்கள், அனைவருடைய நம்பிக்கை – ஒத்துழைப்பைப் பெற்று சாதிப்பது, கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்வை எட்டுவது, அனைவரையும் சமமாக நடத்தி அவர்களுடைய நம்பிக்கையுடன் செயல்படுவது ஆகிய அம்சங்களைவிட தனிநபரின் புத்திசாலித்தனமும் அனுபவமும் கைகொடுத்துவிடாது என்பது என்னுடைய கருத்து.
- இடைநுழைவு நியமனங்களுக்கு உகந்த இடம் நிதி ஆயோக் அமைப்புதான். காரணம், ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவமும் அனுபவமும் பெற்றவர்கள் தங்களுடைய ஆலோசனைகளையும் உத்திகளையும் அங்கே பகிர்ந்துகொள்ளலாம். அங்கிருந்து தொடர்புள்ள அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து அவற்றை நடைமுறைப்படுத்தலாம். நிதி ஆயோக்கிடமிருந்து பெறப்படும் கருத்துருக்கள் அனைத்தும் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது பரிசீலனைக்குரிய குறிப்புகளாக இடம்பெறும்.
மிஷன் கர்மயோகி
- அரசுத் துறையிலேயே தனித்துவமும் நிபுணத்துவமும் பெற பிரதமர் மோடியால் 2020இல் ‘மிஷன் கர்மயோகி’ என்ற திட்டம் மிகுந்த ஆரவாரத்துக்கிடையே கொண்டுவரப்பட்டது. அந்தந்தத் துறையில் ஆற்றலை வளர்க்க இது பயன்படும். இந்தத் திட்டப்படி, அதிகாரிகள் அடுத்து மேற்கொள்ளவிருக்கும் பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்வதற்கு இடைநிலையில் முசோரிக்கே வந்து குறுகிய காலப் பயிற்சிகளையும் தகவல்களையும் பெறலாம். அடுத்த பத்தாண்டுகளுக்கு அரசின் தேவைகள் – அதிகாரிகளின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டுமுயற்சிகளை மேற்கொள்ளலாம்.
- நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தந்தத் துறை நிபுணர்கள், தொழில் துறை, வர்த்தகத் துறை, தொழிற்சங்கம், விவசாயிகளின் சங்கங்கள் என்று பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று, தொலைநோக்குத் திட்டங்களைத் துறைச் செயலாளர்கள் தயாரிக்க வேண்டுவது முதல் படியாகும்.
- சில துறைகளில் இந்தப் பணி முடியவில்லை. ‘செயலாற்றலை உருவாக்கும் ஆணையம்’ இதில் ஈடுபட வேண்டும். ‘விக்சித் பாரத்’ என்ற லட்சியத்தை நிறைவேற்ற ஒவ்வொரு துறையும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்களை அடையாளம் காண வேண்டும். நிபுணர்களின் ஆலோசனை, நிதி ஆயோக்கின் வழிகாட்டலில் தீர்வுகளை உருவாக்க வேண்டும்.
நன்றி: அருஞ்சொல் (01 – 09 – 2024)