TNPSC Thervupettagam

இணைக்கப்பட்ட விண்கலங்கள்: இஸ்ரோவின் இமாலய சாதனை!

January 21 , 2025 6 hrs 0 min 40 0

இணைக்கப்பட்ட விண்கலங்கள்: இஸ்ரோவின் இமாலய சாதனை!

  • ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது.
  • மனிதர்களை விண்வெளிக்கு இட்டுச் செல்லும் கனவு முதல் நிலவுப் பயணம், செவ்வாய்ப் பயணம், விண்வெளியில் குடில் உருவாக்குதல் போன்ற இஸ்ரோவின் எதிர் காலக் கனவுகளுக்கு இந்தத் தொழில்நுட்பப் பரிசோதனை வழிகோலியுள்ளது.

விண்கல இணைப்பு:

  • இருப்புப் பாதையில் இரண்டு ரயில் பெட்டிகளை இணைத்துத் தொடர்வண்டியை ஏற்படுத்துவதுபோல இரண்டு விண்கலங்களை இணைப்பதுதான் விண்வெளியில் விண்கல இணைப்பு (Space Docking). ஜாடியில் மூடியைப் பொருத்தி மூடுவதுபோல ஒரு விண்கலத்தில் உள்ள வட்டவடிவ வாய் போன்ற பகுதியை மறு விண்கலத்தில் உள்ள வட்டமான வாய் போன்ற பகுதியில் பொருத்தி, இரண்டுக்கும் இடையே காற்று வெளியேறாதபடிக்கு வலுவான - இறுக்கமான இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
  • ஊசியில் நூலைக் கோக்கும்போது நூலும் ஊசியின் துளைக்கண்ணும் சரியாக வரிசைப்படுத்தப்படுவதுபோல ஒரு விண்கலத்தில் உள்ள கொக்கி போன்ற அமைப்பு மறு விண்கலத்தில் உள்ள கொக்கித் துளை போன்ற அமைப்பில் சரியாகப் புக வேண்டும். என் கையில் ஊசியும் உங்கள் கையில் நூலும் இருந்தால் எப்படி நூலைக் கோப்பது கடினமோ அதைவிட இரண்டு விண்கலங்களைச் சரியாக வரிசைப்படுத்துவது மிகப் பெரிய சவால்.

செயற்கை நுண்ணறிவு:

  • இரண்டு விண்கலங்களுக்கு இடையே உள்ள இடைவெளியைத் தொலைவை உணரும் லேசர் கருவிகள், கொக்கி, துளை போன்ற பகுதிகளை இனம்காண்பதற்கு கேமரா போன்ற கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டன. விண்கலத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் உதவியுடன் விண்கலத்தைத் துல்லியமாக இயக்கி, நேர் வரிசைக்குக் கொண்டுவந்து, நெருக்கமாகக் கொண்டுசென்று பிணைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
  • இந்தப் பணிக்காகப் பல்வேறு உணர்விக் கருவிகளையும், செயற்கை நுண்ணறிவு அல்காரிதம் போன்றவற்றையும் இஸ்ரோ சொந்தமாகத் தயாரித்துள்ளது. இந்தச் சோதனையில் இவை பரிசோதனை செய்யப்பட்டு, வெற்றி கண்டிருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

அடிமேல் அடி:

  • முதன்முறையாக இந்தச் சோதனையை மேற்கொள்வதால் நிதானமாகவே இஸ்ரோ இதை அணுகியது. ஜனவரி 11, 2025 அன்று முதல் முறை இணைப்பு முயற்சியை மேற்கொண்டபோது, உணர்வி - அல்காரிதம் சரியாகச் செயல்படுகிறதா என ஆய்வுசெய்யும் நோக்கில், இரண்டு விண்கலங்களையும் வெறும் 230 மீட்டர் இடைவெளி அளவு நெருங்கவைத்தனர்.
  • அதன் பின்னர் ஜனவரி 12 அன்று முதலில் 15 மீட்டர் இடைவெளி அளவுக்கு நெருக்கமாகவும் அதன் பின்னர் வெறும் 3 மீட்டர் நெருக்கமாகவும் இரண்டு விண்கலங்களையும் கொண்டுவந்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் கிடைத்த வெற்றியை வைத்து - அடுத்த நாளான 2025 ஜனவரி 13 அன்று இரண்டு விண்கலங்களையும் இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளத் தீர்மானித்தனர்.

பின்னடைவு:

  • எனினும், துரத்தும் விண்கலத்தில் இருந்த சில உணர்விக் கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை. எனவே, எதிர்பார்த்தபடி தானியங்கி அல்காரிதம் பாதுகாப்புக் கருதி இரண்டு விண்கலங்களையும் ஆபத்தில்லாத தொலைவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. விண்கல இணைப்பு முயற்சியைச் செயல்படுத்த முடியவில்லை.
  • இதனால், எதிர்பாராமல் இஸ்ரோவுக்கு இக்கட்டான சூழல் உருவானது. விண்கலங்கள் செல்லும் பாதையைக் கவனத்தில் கொண்டால் ஜனவரி 22க்கு முன்பு இணைப்பை மேற்கொண்டுவிட வேண்டும். இல்லை என்றால், அடுத்த மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டிவரும்.
  • ஜனவரி 22க்குப் பிறகு விண்கலம் பூமிக்குப் பின்புறமாக இரவு நேரத்தில் நீண்டநேரம் பயணம் செய்யும். எனவே, போதிய சூரிய மின்சாரத்தைப் பெற முடியாது. இதனால் கணினி உள்பட மின்னணுக் கருவிகள் செயல்படத் தடை ஏற்படும் என்கிற சூழல் உருவானது.

மாற்றுச் சிந்தனை:

  • அதுவரை சோதனையில் கிடைத்த தகவல்களைச் சரிபார்த்து இஸ்ரோ உடனடியாக மாற்றுத் திட்டத்தை உருவாக்கியது. ஒரு விண்கலத்தின் உணர்வி மட்டுமே பழுதாகியிருக்கிறது; மறு விண்கலத்தின் உணர்விகள் சிறப்பாகச் செயல்பட்டன. எனவே, உணர்வி பழுதுபட்ட விண்கலத்தை இலக்காகக்கொண்டு மற்ற விண்கலத்தைத் துரத்தும் விண்கலமாகக் கருதி, இணைப்புப் பரிசோதனையை மேற்கொண்டு இஸ்ரோ வெற்றி கண்டது.
  • லாரி சர்வீஸ் போலச் செயற்கைக்கோள் போன்ற பொதிகளை மட்டுமே இதுவரை இஸ்ரோ விண்வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளது. ‘ககன்யான்’ திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்ல இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது பேருந்து ஓட்டுவதுபோல. லாரியில் ஆபத்துக் கால வாசல் தேவையில்லை; ஆனால், பேருந்தில் அவசியம். எனவே, மனிதர்களை ஏந்திச்செல்லும் விண்கலங்களில் விண்கல இணைப்பு வாசல் அத்தியாவசியம்.
  • காலியாக விண்கலங்களை ஏவி விண்ணில் இணைத்துத்தான் மூன்று நான்கு நபர்கள் பத்து - இருபது நாள்கள் தங்கி ஆய்வுசெய்ய விண்வெளி நிலையம் அமைப்பார்கள். எனவே, இஸ்ரோவின் இந்திய விண்வெளி நிலையக் கனவுக்கும் இந்த விண்கல இணைப்பு அவசியம்.

விண்வெளியில் கட்டுமானம்:

  • பூமியிலிருந்து நிலவுக்குப் பயணம் செய்ய உந்துகலம், நிலவில் தரையிறங்கி மாதிரி சேகரிக்கக் கலம், நிலவிலிருந்து ராக்கெட் போலப் புறப்படும் கலம், நிலவிலிருந்து பூமிக்குத் திரும்ப நான்காவது கலம் என நான்கு பகுதிகள் இருந்தால் மட்டுமே நிலவுக்குப் பயணம் செய்து, தரையில் இறங்கி நிலவின் கல், மண் மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்கு எடுத்துவர முடியும்.
  • ஃபால்கன் ஹெவி (Falcon Heavy) என்னும் அமெரிக்காவின் ஆற்றல் மிகுந்த ஏவூர்தி 63.8 டன் எடை கொண்ட விண்கலத்தை விண்வெளி நிலையம் அமைக்கும் தாழ் விண்வெளி பாதைக்கு எடுத்துச்செல்ல முடியும். சீனாவின் ‘லாங் மார்ச் 5-CZ-5B’ என்னும் ராக்கெட் 25 டன் விண்கலத்தை எடுத்துச்செல்லும் ஆற்றல் வாய்ந்தது. ‘இஸ்ரோவின் பாகுபலி’ எனப்படும் ‘எல்விஎம்3’ (LVM3) என்கிற ராக்கெட் வெறும் எட்டு டன் மட்டுமே எடுத்துச்செல்லும் திறன் வாய்ந்தது.
  • தங்களிடம் உள்ள ஆற்றல் வாய்ந்த ராக்கெட்டைப் பயன்படுத்தி அமெரிக்கா, சீனா, ரஷ்யா நான்கு கலங்களையும் ஒன்றாக நிலவு நோக்கி ஏவ முடியும். ஆனால், இஸ்ரோவின் ஆற்றல் வாய்ந்த ஏவூர்தியால்கூட அது முடியாது. நம்மால் முடியாது என்று முடங்கிவிடாமல் மாற்றி யோசனை செய்து மதிநுட்பத்தால் இந்த இடரைக் கடக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • ‘சந்திரயான்- 3’ போல தலா இரண்டு கலங்களை இரண்டு ராக்கெட் மூலம் விண்வெளிக்கு ஏவுவது. இந்த நான்கு கலங்களும் விண்வெளியில் - டாக்கிங் - விண்கல இணைப்பு செய்து ஒரே விண்கலத்தைக் கட்டுமானம் செய்யும் விண்வெளிக் கட்டுமானத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
  • ஒருங்கிணைந்த நான்கு கலங்களும் ஒன்றாக இயங்கி நிலவுக்குச் செல்லும். பின்னர், படிப்படியாக ஒவ்வொரு விண்கலத்தையும் கழற்றி நிலவின் தரையில் இறங்கி கல், மண் மாதிரிகளைச் சேகரித்துத் திரும்ப எடுத்துவரும் சந்திரயான்-4 திட்டம், செவ்வாய்க்கோளின் தரையில் இறங்கி ரோவர் போன்ற கருவியை இயக்கி ஆய்வுசெய்யும் திட்டம் முதலிய இஸ்ரோவின் கனவுத் திட்டங்களுக்கு விண்வெளி விண்கல இணைப்புத் தொழில்நுட்பம் அவசியம். ஆம்… இந்த வெற்றியின் மூலம் எதிர்கால விண்வெளிச் சாதனைகளுக்கான பாதை மேலும் துலக்கமாகியிருக்கிறது!

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்