TNPSC Thervupettagam

இணைந்த கரங்களால் கிடைத்த வெற்றி

October 15 , 2023 457 days 283 0
  • சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள், குடும்பப் பராமரிப்பு போன்ற ‘வாழ்க்கைக் கல்வி’யே பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரே ‘கல்வி முறை’யாக அந்நாளில் இருந்தது. அறிவில் சிறந்தவர்களாகச் சொல்லப்படும் முன்னோர்களின் சொல்லுக்கு எதிராக யாராவது நடந்து கொண்டால் அவர்கள் மறுபிறவியில் எலியாகப் பிறப்பார்கள் என்று பெரும்பான்மைச் சமூகம் நம்பவைக்கப்பட்டிருந்தது. ‘ஏன்?’ என்கிற சொல்லே இல்லாத அகராதி அவர்களுடையது. அதனால், தங்கள் மீது நிர்ப்பந்திக்கப்பட்ட அனைத்தையும் விதியே என்று ஏற்றுக்கொண்டனர்.
  • ஒரு வயதுகூட நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு மணம் முடிக்கப்பட்ட 1800களில் சாவித்ரிபாய்க்கு ஒன்பது வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அவருடைய கணவர் ஜோதிராவ் புலேவுக்கு 13 வயது. தனக்குக் கிடைத்த கல்வி தன் மனைவிக்கும் கிடைக்க வேண்டும் என ஜோதிராவ் விரும்பினார். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சாவித்ரிக்கு வீட்டிலேயே கற்பித்தார். அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கே கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பெண் களுக்கான பள்ளி தொடங்க வேண்டும் என்பது இந்தத் தம்பதியின் மாபெரும் இலக்கு. அதற்காக அகமதாபாத்திலும் பூனாவிலும் இருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சாவித்ரிபாய் புலே சேர்ந்தார்.

பெண்களுக்கான முதல் பள்ளி

  • ஜோதிராவின் கல்வி குறித்த சிந்தனையால் ஈர்க்கப்பட்ட தத்யாசாகேப் பிடே என்னும் வழக்குரைஞர், பூனாவில் உள்ள தன் வீட்டை ஜோதிராவ் தம்பதிக்கு வழங்கினார். ‘பிடே வாடா’ என்று அழைக்கப்பட்ட அந்த வீட்டில் 1848 ஜனவரி 1 அன்று ‘இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளி’ தொடங்கப்பட்டது. இந்தத் தம்பதியின் நண்பர்கள் சகாராம், கேசவ் இருவரும் இந்தப் பள்ளி அமைய உதவியாக இருந்தனர்.
  • தங்கள் மருமகள் தான் படித்ததோடு பெண்களுக் கான பள்ளியையும் தொடங்கியதில் நாலு பேர் என்ன சொல்வார்களோ என்று சாவித்ரியின் புகுந்த வீட்டினர் நினைத்தனர். தங்களுக்குப் பெருத்த ‘அவமானம்’ எனவும் கருதினர். கல்வி கற்றதன் மூலம் செய்யக் கூடாத பாவத்தைச் செய்ததாகச் சொல்லி ஜோதிராவ் – சாவித்ரிபாய் தம்பதியை வீட்டை விட்டு வெளியேற்றினர். இத்தம்பதியின் நண்பர்களான பாத்திமா ஷேக்கும் அவருடைய சகோதரர் உஸ்மானும் அடைக்கலம் தந்து உதவினர். ‘பிடே வாடா’ பள்ளியில் பாத்திமா ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பெண்கள் கல்வி பயில்வது பாவம் என்று சொல்லப்பட்டதை மீறப் பெரும்பான்மை குடும்பங்களுக்கு மனமில்லை. மிகச் சிலரே தங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தனர். எத்தனை விளக்குகளை ஏற்றினால் என்ன? ஒளியின் மகத்துவம் குறையாதுதானே. சாவித்ரியும் பாத்திமாவும் மனம் தளராமல் பள்ளிக்குச் சென்றனர்.
  • ஆனால், சுற்றியிருந்தவர் களுக்கு அங்கே பள்ளி செயல்படுவதில் விருப்பம் இல்லை; பள்ளிக்குச் சென்ற சாவித்ரிபாய், பாத்திமா மீது கல்லையும் மாட்டுச் சாணத்தையும் வீசினர். இந்தத் தாக்குதல் பாத்திமாவை நிலைகுலையச் செய்தது. ஆனால், சாவித்ரி அசராமல் நின்றார். பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதன் மூலமே இதுபோன்ற மூடத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை பாத்திமாவுக்குச் சொன்னார். மறுநாள் முதல் கையில் மாற்றுச் சேலையோடு பள்ளிக்கு இருவரும் புறப்பட்டனர். தங்கள் மீது வீசப்பட்ட மண்ணையும் சாணத்தையும் கழுவிவிட்டுப் பாடங்களை எடுத்தனர். ‘கல்வியே விடுதலை தரும்’ என்கிற முழக்கம் எழுதப்பட்ட பதாகையைப் பள்ளியின் முகப்பில் சாவித்ரிபாய் மாட்டினார். அதுவே பெண் கல்விக்கான முதல் முழக்கமாகவும் அமைந்தது.

அச்சமூட்டிய உறுதி

  • சாவித்ரியின் இந்த உறுதிதான் தாக்கியவர்களுக்கு அச்சமூட்டியது. மிரட்டினால் பயந்துவிடுவார்கள் என்கிற அவர்களது கணக்கை சாவித்ரி பொய்யாக்கினார். தாக்கப்பட்ட இடத்திலிருந்தே மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தொடங்கினார். அதன் பிறகு மேலும் இரண்டு பெண்கள் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பொதுப்பள்ளிகளில் கற்பிக்கப்படாத கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்றவை சாவித்ரிபாய் நடத்திய பெண்கள் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. பெண்கள் பள்ளியில் மாணவியர் எண்ணிக்கை, பொதுப்பள்ளிகளில் பயின்ற ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகரித்தது. ஜோதிராவ் புலே - சாவித்ரிபாய் தம்பதியின் லட்சியப் பாதையின் முக்கிய மைல் கல் அது.
  • சாவித்ரிபாய்க்குச் சிறுவயதிலேயே கல்வியின் மீது தீராக் காதல். கிறிஸ்தவ மிஷனரி மூலம் கிடைத்த ஆங்கிலப் புத்தகத்தை அவர் படித்துக்கொண்டிருந்த போது கையும் களவுமாகப் பிடித்துவிட்டார் அவருடைய அப்பா. அந்தப் புத்தகத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, “இனி நீ இப்படியொரு பாவத்தைச் செய்வதைப் பார்த்தால் தொலைத்துவிடுவேன்” என மிரட்டினார். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் ‘பெண்கள் அதிகமா படிச்சா கெட்டுப்போயிடுவாங்க, மதிக்க மாட்டாங்க’ என்று இன்றைக்கும் ஒலிக்கிற பொதுச் சமூகத்தின் குரல் அது. அந்தக் குரலைக் கடந்துதான் பெண்கள் கல்வி கற்க வேண்டும். காரணம், கல்வியே விடுதலை தரும்.
  • உரிமைக்கான போராட்டங்களில் அனைத்துத் தரப்பும் பங்கெடுக்கிறபோது மாற்றம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. சாவித்ரிபாயின் போராட்டத்தில் மேல்தட்டுப் பிரிவைச் சேர்ந்த தத்யாசாகேப், சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த பாத்திமா ஆகியோரின் பங்களிப்பு இதை உறுதிப்படுத்துகிறது. சாவித்ரிபாய் புலே, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மட்டுமல்ல. பெண்களின் வாழ்வில் வேறு பல சீர்திருத்தங்களையும் அவர் ஏற்படுத்தினார். அவை என்னென்ன? அடுத்த வாரம் ‌‌‌‌‌‌‌‌‌‌பார்க்கலாம்.

நன்றி: தி இந்து (15 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்