TNPSC Thervupettagam

இணைந்தே ஒலிக்கட்டும் மாநில நலனுக்கான தமிழகக் கட்சிகளின் குரல்கள்

May 20 , 2021 1346 days 529 0
  • கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையைச் சமாளிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்குக் கூடுதல் தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதம் நல்ல விஷயம்.
  • அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்யக் கோரியும் நிலுவையிலுள்ள ஜிஎஸ்டி நிலுவைகள் மற்றும் அரிசி மானியங்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டியும் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
  • எதிர்க்கட்சித் தலைவரும் கடிதம் எழுதியிருப்பது முதல்வரின் கோரிக்கைக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமையும்.
  • பெருந்தொற்றுக் காலத்தில் அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான தொடக்கமாகவும் இது அமைய வேண்டும்.
  • ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலாகவே எல்லாக் கட்சிகளையும் அரவணைத்து ஆட்சியைக் கொண்டுசெல்வதில் முனைப்புடன் செயலாற்றுகிறது.
  • சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறது. இனி வரும் காலங்களிலும் இத்தகு அணுகுமுறை தொடர வேண்டும்.
  • பிரதமருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள சமீபத்திய மற்றொரு கடிதத்தில், தற்போதைய பொதுமுடக்கத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு நிறுவனங்களுக்கும் வாகனக் கடன் வாங்கியோருக்கும் கடந்த ஆண்டைப் போல ஆறு மாத காலத்துக்குக் கடன் தவணைகளை நீட்டிக்கவும் இடைப்பட்ட காலத்துக்கான வட்டியிலிருந்து விலக்கு அளிக்கவும் கோரியிருந்தார்.
  • தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதற்கும் பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனை இது. உலக அளவிலும் உள்ளூர் அளவிலும் கரோனா தடுப்பூசிக்கு உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தி முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுதியுள்ள சமீபத்திய கடிதத்தில், ஸ்டாலினும் கையெழுத்திட்டிருக்கிறார்.
  • மாநில உரிமைகள் சார்ந்த தேசிய அளவிலான உரையாடலில் தொடர்ந்து அவர் உத்வேகத்துடன் பங்கேற்றுவருகிறார். 2020 அக்டோபரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநில அரசுகள் கடன்பெறுவதற்கு ஒன்றிய அரசு முன்மொழிந்த வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் அந்த நிதி உதவியைச் செய்ய வேண்டியது ஒன்றிய அரசின் கடமையே என்று வாதிட்ட 10 முதல்வர்களுக்குத் தனது ஆதரவைக் கடிதத்தின் வாயிலாகத் தெரியப்படுத்தியிருந்தார் ஸ்டாலின்.
  • தொற்றுப் பரவல் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே அப்போதைய முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், ஒன்றிய அரசிடம் நிதி பெறுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்குத் தமது கட்சி துணைநிற்கும் என்று உறுதிமொழியையும் ஸ்டாலின் அளித்திருந்தார்.
  • இப்போது முதல்வராக அவர் முன்னெடுக்கும் மாநில நலன்களுக்கான குரலுக்கு எதிர்க்கட்சியும் கருத்தொருமித்த நிலையில் அத்தகைய ஆதரவை அளிக்க வேண்டியது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்