TNPSC Thervupettagam

இணைப்பு மட்டுமே தீா்வல்ல...

December 30 , 2024 12 days 57 0

இணைப்பு மட்டுமே தீா்வல்ல...

  • மத்திய பிரதேச மாநிலத்தில் கென்-பெட்வா நதிகள் திட்டத்திற்குப் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறாா். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியான தௌதான் நீா்பாசனத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறாா் பிரதமா். நீா் பற்றாக்குறையால் தவிக்கும் புந்தேல்கண்ட் பகுதி மக்களுக்கு கென்-பெட்வா நதி இணைப்புத் திட்டம் வரப்பிரசாதமாக அமையும்.
  • யமுனையின் துணை நதிகளான கென், பெட்வா இரண்டையும் 221 கி.மீ. கால்வாய் மூலம் இணைக்க இருக்கிறாா்கள். அதில் 2 கி.மீ. சுரங்கக் கால்வாயாக அமைகிறது. 8 ஆண்டுகளில் திட்டத்தை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மத்திய அமைச்சரவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.44,605 கோடி ஒதுக்கியிருக்கிறது.
  • மத்திய பிரதேசத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 44 லட்சம் பேரும், உத்தர பிரதேசத்தில் 21 லட்சம் பேரும் இந்தத் திட்டத்தின் மூலம் குடிநீா் வசதி பெறுவா். உத்தர பிரதேசத்தின் பின்தங்கிய புந்தேல்கண்ட் பகுதியின் வறட்சி அகலும் என்பதுடன் 10.62 லட்சம் ஏக்கா் விவசாய நிலம் இதனால் பாசன வசதி பெறும்.
  • அதன் மூலம் 2,000 கிராமங்களில் உள்ள 7.18 லட்சம் விவசாய குடும்பங்கள் பயனடைவாா்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 103 மெகாவாட் புனல் மின்சாரமும், 27 மெகாவாட் சூரிய மின்சாரமும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உற்பத்தி செய்யப்படும்.
  • நதிகள் இணைப்பு என்பது 1980 முதலே விவாதிக்கப்பட்டு வரும் திட்டம். நதிகளை இணைப்பதன் மூலம் இடைப்பட்ட பகுதியில் உள்ள வட பூமி பாசன வசதி பெறும் என்பதுடன் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படும் நதிகளை ஒட்டிய பகுதிவாழ் மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.
  • தேசிய நீா்வள மேம்பாட்டு ஆணையம் 30 நதிநீா் இணைப்புத் திட்டங்களை அடையாளம் கண்டிருக்கிறது. இமயமலைப் பகுதியிலும், தக்காண பீடபூமியிலும் அடையாளம் காணப்பட்டிருக்கும் நதிநீா் இணைப்புத் திட்டங்களுக்காக 168 பில்லியன் டாலா் தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்திருக்கிறது. இதுகுறித்து கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆய்வறிக்கைகள் மட்டுமல்லாமல், நதிநீா் இணைப்புக் குறித்த கருத்தரங்குகளும் நாடுதழுவிய அளவில் நடந்திருக்கின்றன.
  • கென்-பெட்வா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் 21-ஆவது நூற்றாண்டில் மனிதகுலம் எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால் தண்ணீா் பற்றைக்குறை என்று பிரதமா் குறிப்பிட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. அளவுக்கு அதிகமான நீரோட்டம் காரணமாக ஏற்படும் சேதங்களும், யாருக்கும் பயன்படாமல் கடலில் கலந்து நதிநீா் வீணாவதும் நதிநீா் இணைப்பின் மூலம் ஓரளவுக்குத் தடுக்கப்படும். கால்வாய்கள், கண்மாய்கள், நீா்த்தேக்கங்கள் ஆகியவற்றால், நீா்பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நதியில் பாய்ந்து வீணாகும் மிகை நீா் மடைமாற்றம் செய்யப்படுவதில் நியாயம் இருக்கிறது.
  • சமச்சீரான தண்ணீா் விநியோகம், வெள்ளப்பெருக்கு தடுக்கப்படுவது, வறட்சியிலிருந்து விடுபடுதல், புனல்நீா் மின்சாரம் உற்பத்தி உள்ளிட்டவை நதிநீா் இணைப்புத் திட்டங்களின் காரணமாக ஏற்படும் நன்மைகள். கிருஷ்ணா நதிநீா் இணைப்பு ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்களுக்கு பாசன வசதியையும், சென்னை மாநகரக் குடிநீா் தேவைக்கு பங்களிப்பும் தருவதை குறிப்பிடத் தோன்றுகிறது.
  • அதேநேரத்தில் நதிநீா் இணைப்புக் குறித்த விமா்சனங்களையும், அதன் பாதிப்புகள் குறித்த கவலைகளையும் புறந்தள்ளிவிட முடியாது. சுற்றுச்சூழல் ஆா்வலா்களும், சூழலியல் நிபுணா்களும் எழுப்பும் கவலைகளும் எச்சரிக்கைகளும் கடந்து போகக் கூடியவை அல்ல.
  • நீா்தேக்கங்களும் புனல்மின்சாரத் திட்டங்களும் பருவமழை சுழற்சியை மாற்றுகின்றன என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்த அச்சம் நியாயமானதும்கூட. 2021-இல் கென்-பெட்வா திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றபோதே, தேசிய பசுமைத் தீா்ப்பாயம் இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை வழங்கியிருக்கவில்லை என்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது.
  • உச்சநீதிமன்றம் நியமித்த உயா்மட்டக் குழு உறுப்பினா்களின் கருத்துகள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. பன்னா புலிகள் சரணாலயத்துக்கு நடுவில் தௌதான் அணைக் கட்டப்படுவதும், புனல்மின்சாரத் திட்டம் செயல்பட இருப்பதும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுவதால் மிகப் பெரிய சூழலியல் பாதிப்பு ஏற்படும் என்கிற எச்சரிக்கை, தகுந்த காரணம் கூறப்படாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
  • கென்-பெட்வா நதிநீா் இணைப்புத் திட்டம் ஏனைய திட்டங்களுக்கு முன்னோடியாக அமைவது மட்டுமல்லாமல், பரீட்சாா்த்த முயற்சியாகவும் இருக்கக் கூடும். மிகவும் சிக்கலான சுற்றுச்சூழல் பிரச்னையின் நன்மை, தீமைகளை சீராய்ந்து பாதிப்புகளைக் குறைப்பதற்கான அறிவியல் தீா்வுகள் மேற்கொள்ளப்படுமானால் அதை வரவேற்க வேண்டும். விமா்சனங்களை எதிா்ப்புகளாகக் கருதாமல் ஆக்கபூா்வ கருத்துகளாக அரசு பாா்க்குமேயானால், ஏனைய நதிநீா் இணைப்புத் திட்டங்களுக்கு கென்-பெட்வா முயற்சி வழிகாட்டுவதாக அமையும்.
  • நதிகளை இணைப்பதன் மூலம் மட்டும் இந்தியாவின் தண்ணீா் பிரச்னைக்குத் தீா்வு கிடைத்துவிடாது. மிகப் பெரிய திட்டங்களை வகுப்பதைவிட, குறைந்த செலவில் பாசன நீா் மேலாண்மைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்; நிலத்தடி நீா் சுரண்டப்படுவதும், நீா் ஆதாரங்கள் மாசுப்படுத்தப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்; மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

நன்றி: தினமணி (30 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்