TNPSC Thervupettagam

இணையச் சமத்துவம்: இன்னும் எட்டப்படா இலக்கு

April 7 , 2023 476 days 279 0
  • ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி, ஐநா போன்ற அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் பாலினச் சமத்துவத்தை எட்டுவதற்கான குறிக்கோளைத் தேர்வுசெய்து செயல்படுகின்றன. ‘தலைமுறைச் சமத்துவம்: பெண்களின் உரிமைகளைப் புரிந்து கொள்ளுதல்’ என்பது 2020 இன் குறிக்கோளாக இருந்தது.
  • 2021இல் ‘பெண்களின் தலைமைத்துவம்: கோவிட்-19 உலகில் சமமான எதிர்காலத்தை எட்டுதல்’; 2022இல் ‘நிலையான நாளைக்கான இன்றைய பாலினச் சமத்துவம்’ ஆகியவை குறிக்கோள்களாக நிர்ணயிக்கப்பட்டன.
  • 2023க்கான குறிக்கோள், ‘சமத்துவத்தை ஏற்போம்’ என்பதாக உருவாக்கப்பட்டது நாம் அறிந்ததுதான். கூடுதலாகப் ‘பாலினச் சமத்துவத்துக்காகப் புதுமை மற்றும் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருளும் முன்வைக்கப்பட்டுள்ளதுதான் கவனம் ஈர்க்கிறது. போதுமான வேலை நேரம்; கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்பில் சமத்துவம் என்பன போன்றவை தொடக்க கால மகளிர் தினக் குறிக்கோள்களாக முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டில், அறிவியல் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையைக் களைவதையும் பெண்-ஆண் சமத்துவத்தை எட்டுவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கதே.

இணையத்தை அணுகாப் பெண்கள்:

  • இன்றைய உலகில் பெரும்பாலான மனிதச் செயல்பாடுகள் தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நவீனக் காலகட்டத்திலும், இணையத்தை 37% பெண்கள் பயன்படுத்துவதில்லை என்பதையும், ஆண்களைவிட 25.9 கோடிப் பெண்கள் குறைவாகவே இணையப் பயன்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதையும் ஆய்வுகள் பதிவுசெய்கின்றன.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்தப் பாலினச் சமத்துவ வேறுபாடு, பெண்-ஆண் சமத்துவத்தை எட்டுவதில் ஒரு தடையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டே 2023க்கான மகளிர் தினக் குறிக்கோள் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகக் கொள்ள முடிகிறது.
  • இத்தகைய டிஜிட்டல் துறையில் பாலின இடைவெளி தொடர்ந்தால், 2025க்குள் அதிக எண்ணிக்கையிலான பெண்களும் ஆன்லைன் உலகத்துக்குள் இயங்கும் திறனற்றவர்களாக இருந்து, அணுகல் இல்லாத நிலை தொடர்ந்தாலும், பயன்பாட்டில் சமத்துவமின்மை தொடர்ந்தாலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% இழப்பு ஏற்படும் என ஐநா மதிப்பிட்டுள்ளது.
  • ஆகவே, டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் துறையில் நிலவும் பாலின இடைவெளி, டிஜிட்டல் துறையில் பாலின வறுமை ஆகியவை களையப்பட வேண்டும் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இதை எட்டுவதில் உள்ள சவால்கள் குறித்தும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.

பொருளாதார அதிகாரமின்மை:

  • இணையத்தை அணுகாத, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாத அந்த 37% பெண்கள் யார் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். டிஜிட்டல் மற்றும் இணையத்தை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அடிப்படைக் கல்வியறிவே போதுமானது. அதேசமயம், தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடுதலான கல்வியறிவும் நுணுக்கமான தகவல் தொழில்நுட்ப அறிவும் தேவைப்படுகின்றன.
  • கல்வியறிவில் பாலினச் சமத்துவத்தை எட்ட முடியாத நிலையில், டிஜிட்டல் பாலினச் சமத்துவத்தை எட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. கல்வியறிவு பெறுவதில் ஆண்களை ஒப்பிடப் பெண்கள் பின்தங்கியே இருக்கின்றனர்.
  • அடுத்ததாக, இணையப் பயன்பாடு என்பது பொருளாதாரம் சார்ந்ததாகவும் உள்ளது. பெரும்பான்மைப் பெண்கள் பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொண்டவர்களாக இன்றும் உள்ளார்கள். சம வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற கோரிக்கைகள் மகளிருக்குப் பொருளாதாரத் தன்னிறைவை வழங்கத் தொடங்கியிருக்கும் சூழலில்கூட, பொருளாதாரத்தின் மீது உரிமை கொள்ளுதலும் செலவு செய்வதில் அதிகாரம் கொள்ளுதலும் பெண்களுக்கு இன்னும் தொலைவில்தான் உள்ளன. பெண்களின் பெரும்பாலான வாழ்வியல் செயல்பாடுகளில் பொருளாதார அதிகாரமற்ற நிலையே நிலவுகிறது.
  • ஏறக்குறைய இன்னும் 25 ஆண்டு காலத்தில் வேலைவாய்ப்பு என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் இவற்றைச் சார்ந்துதான் அமையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் மற்றும் இணையப் பயன்பாட்டில் நிலவும் பாலின இடைவெளி, சம வேலைவாய்ப்பு என்கிற நிலையில் மிகப்பெரிய இடைவெளியை எதிர்காலத்தில் உருவாக்கும். இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்கும் அந்த 37% பெண்கள், கல்வியறிவு அற்ற உழைக்கும் பெண்கள். அன்றாட அடிப்படை வாழ்வாதாரத்தை எட்ட சமரிட்டுக்கொண்டிருக்கும் அந்த மகளிரால் இந்த எச்சரிக்கை ஒலிகளைக் கேட்க இயலுவதில்லை.

இணையக் குற்றங்கள்:

  • இணையப் பரப்பில் மகளிருக்கு எதிராக நிகழும் வன்முறையும் பெண் குழந்தைகளுக்கு எதிரான ஆபத்துகளும் மிகமிக அதிகம். எங்கிருந்து, யாரால் நிகழ்த்தப்படுகின்றன என்பதை எளிதில் அரிய இயலாத நிலையில், இணைய வன்முறையின் வீரியம் பெண்களையும் பெண் குழந்தைகளையும் அப்பரப்பிலிருந்து விலகிச்செல்ல வைத்துவிடுகிறது.
  • சட்டங்களும் பாதுகாப்புத் திட்டங்களும் இருந்தபோதும் மனித மனங்களின் குரூரத்தை அவற்றால் அடையாளம் காண முடியவில்லை. எனவே, இணையக் குற்றங்கள் தொடர்பான செய்திகள் மேலும் பல பெண்களை இணையப் பயன்பாட்டைக் கைவிடும் நிலைக்குத் தள்ளுகின்றன.

புரிந்துகொள்ளுதலின் அவசியம்:

  • பெண்-ஆண் சமத்துவம் என்பது அறிவியலாலும் எட்டப்பட முடியாதது என்பது, பாலினச் சமத்துவம் குறித்த நம்பிக்கையின் மீது கீறல்களாக விழுந்துகொண்டே இருக்கிறது. கூடவே, பெண்ணியத்துக்கு வெளியே சமத்துவத்தால் கட்டி இணைக்க வேண்டிய பெண்கள் உள்ளார்கள் என்ற கருத்தையும் உள்வாங்க வேண்டியுள்ளது.
  • பெண்-ஆண், ஏழை-பணக்காரர் என்பதுபோலப் பெண்களில் கீழ்-மேல்தட்டுப் பெண்கள் இருப்பதையும், பெண்ணியம் பெரும்பாலும் மேல்தட்டுப் பெண்களையே உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது என்பதையும், அவர்களது பிரச்சினையே கவனத்தில் எடுக்கப்படுகிறது என்பதையும் இந்த மகளிர் தினக் குறிக்கோள்கள் மூலம் உணர முடிகிறது.
  • கூடுதலாக பெண்-ஆண் சமத்துவம் என்பதனைச் சம கல்வி, பொருளாதாரத் தன்னிறைவு, சம வேலைவாய்ப்பு, சம அரசியல் பங்களிப்பு, என்பதையெல்லாம் தாண்டிப் ‘புரிந்துகொள்ளுதல்’ மூலம்தான் எட்ட முடியும் என்பதைத்தான் இவை ஆழமாக எடுத்துரைக்கின்றன.
  • பெண் உடலால் ஆனவள் அல்ல; தனித்த ஆளுமை மிக்கவள்; ஆளுமை கொண்ட பெண்ணும் ஆணும் சமம் - இது போன்ற புரிதல்கள்தாம் பாலினச் சமத்துவத்தை உண்மையாக மீட்டெடுக்க முடியும். மனங்களில் உருவாகும் இதுபோன்ற புரிதல்கள் சமத்துவத்தை மீட்டெடுப்பதில் வேறு எதையும்விடச் சிறப்பாகச் செயல்பட முடியும்.

நன்றி: தி இந்து (07 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்