PREVIOUS
கரோனா காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவரும், சமகாலத்தவர்களாகி விட்டோம்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக தீநுண்மி தொற்று பற்றியும், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும், அந்நோயின் தாக்கத்தால் இறந்து போனவர்களைப் பற்றியும் செய்திகளைக் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கிறோம்.
இத்தனைக்குப் பிறகும், இதுதான் வாழ்க்கை என்றும், இவ்வளவுதான் வாழ்க்கை என்றும் தெளிந்தவர்களும் உண்டு, திருந்தாதவர்களும் உண்டு.
ஏராளமான முதலீட்டில், ஏராளமாக லாபமும் சம்பாதித்த வியாபாரிகள், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணக்கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவர்கள், வளர்ந்தவர்கள், தாராளமாக பணத்தைப் புழங்கியவர்கள் என இவர்கள் எல்லோரையும் பொருளாதாரச் சிக்கல் ஆட்டி வைக்கும்போது, சாமானிய மக்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இந்த சாமானியர்களுள் தனியார் பள்ளி ஆசிரியர்களும் அடங்குவர்.
தனியார் பள்ளிகள்
ஆழமாக வேரூன்றிய தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் இந்த கொரோனா ஆழிப் பேரலையை சமாளித்துக் கொண்டார்களா? என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
ஆனால், நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகளுக்காகவும், முழுக்க முழுக்க இலாப நோக்கமின்றியும் அறக்கட்டளைகள் மூலமாக நடத்தப்படும் தனியார் பள்ளிகள் தத்தளிக்கின்றன.
அதுபோன்ற பள்ளிகளின் ஆசிரியர்களின் சம்பளத்திற்கு முழுமையாக பெற்றோர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தையே நம்பியுள்ளனர் நிர்வாகிகள்.
இத்தகைய பள்ளிகளில் கல்வித் தரத்தைக் குறைசொல்ல முடியாதபடி அனுபவம் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு நடத்துகிறார்கள்.
இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கரோனாவின் புண்ணியத்தில் முக்கால் சம்பளம் என்பது அரை சம்பளமாகியுள்ள நிலையில், இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் என்ன நடக்கும் என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், தங்களால் இயன்றவரை இணையவழி மூலம் பிள்ளைகளுக்குக் கற்பித்தல் பணியை ஆசிரியர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு நல்ல ஆசிரியருக்கு மாணவர்களிடம் இருந்தோ, பெற்றோர்களிடம் இருந்தோ நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற நோக்கமோ அல்லது அரசிடம் இருந்து விருது வாங்க வேண்டும் என்ற நோக்கமோ கிஞ்சித்தும் இராது, அதைப் பற்றிய சிந்தனைகளும் மனதில் தோன்றாது.
தம்முடைய மனசாட்சிக்குத் துரோகம் செய்யக்கூடாது என்பதற்காகவும், தங்களின் முழுத் திருப்திக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பலனை எதிர்பாராது கற்பித்தல் பணியை தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ள ஆசிரியர்கள் பலர் உள்ளனர்.
இணையவழி வகுப்புகள்
இணையவழி வகுப்புகள் அந்தந்த பள்ளிகளின் வசதிக்கேற்ப லட்சங்கள் செலவழித்து, மென்பொருள் பயன்பாட்டின் மூலமாகவோ அல்லது ஆசிரியர்களின் செல்லிடப்பேசிகளின் கட்செவி மூலமாகவோ நடத்தப்படுகின்றன.
கட்செவி மூலம் நடத்தும் ஆசிரியர்கள் அதிகமான விமர்சனங்களுக்கு ஆளாவதில்லை.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சம்பந்தம் இல்லாதவர்களின் கேலிக்கும், கிண்டல்களுக்கும் "ஜூம்' போன்ற செயலிகளின் மூலம் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் ஆளாகிறார்கள்.
மாணவர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசிரியர்களைக் கண்காணிக்கிறார்கள். ஆசிரியர்களின் இணையவழி கற்பித்தல் குறித்த நையாண்டி ஒளி, ஒலிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டுக்கே இந்தச் செயலிகள் மூலம் வருவதுதான் இதற்குக் காரணம்.
இதில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முதலாவதாகவும், முக்கியமானதாகவும் இருப்பது நாம் யாராக இருந்தாலும் ஆசிரியர்களிடம் நாம் கொள்ள வேண்டிய மரியாதை, மதிப்பு மற்றும் அன்பு.
இந்தப் பண்புகள் இல்லாதவர்கள் வாழ்க்கையின் மதிப்பையும், அர்த்தத்தையும் உணராதவர்கள் எனலாம்.
இரண்டாவதாக பெற்றோர்கள் இப்பண்புகளை தம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கவில்லையென்றால் ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.
இது தலைமுறை, தலைமுறையாகத் தொடரும் அபாயம் என்பதையும், அவர்கள் உணர வேண்டும்.
வீடுகளே வகுப்பறைகள்
இப்பொழுது வீடுகளே வகுப்பறைகளாகி விட்டன என்பதால், வகுப்பறையில் மாணவர்கள் எப்படிப்பட்ட ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்களோ, அதே ஒழுக்கத்தை பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் ஒலி பெருக்கி, புகைப்படக் கருவி ஆகியவற்றை செயலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களில் பலரும், வகுப்பிற்கே வராமல், ஆனால், இருப்பது போல் வேலைகள் (!) செய்வது, ஒலி பெருக்கியை சப்தமிழக்கச் செய்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவது என பொழுதைக் கழிப்பதுடன், ஆசிரியர்களை ஏமாற்றி விட்டோம் என்று பெருமைப்படுகிறார்கள். இழப்பு ஆசிரியர்களுக்கு அல்ல தங்களுக்குத்தான் என்பது புரிந்தால் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
இது நன்றாக இருக்கிறது, இது நன்றாக இல்லை என்று அபிப்பிராயம் சொல்வதற்கு, ஆசிரியர்கள் ஒன்றும் கடைச்சரக்கல்ல.
ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தலுக்குப் பழக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் இயல்பாக இயங்கும் களம் வகுப்பறைகளே. வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே உரித்தானவை.
வகுப்பறைகளில் கற்பிப்பது ஆசிரியர்களுக்கு தண்ணீர் பட்ட பாடு. ஆனால், இந்தப் புதிய முறையில் பரிச்சயமில்லாத ஆயிரம் கண்கள் தங்களைக் கவனிப்பதாக ஆசிரியர்கள் உணர்கிறார்கள்.
இணையவழி வகுப்பில் கற்றுக் கொடுப்பதற்காக, புதிய கற்பித்தல் முறைகளையும், திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
வகுப்பறையில் கற்றுக் கொடுப்பதற்கு, தங்களைத் தயார் செய்வதற்குத் தேவைப்படும் நேரத்தைவிட அதிகமான நேரத்தை இணையவழி வகுப்புகளுக்காகச் செலவிடுகிறார்கள்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியர்களின் பணியை ஆராதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை... கேலி, கிண்டல் செய்யாமல் இருந்தாலே போதும். ஒவ்வோர் ஆசிரியரும் பள்ளிகள் திறக்கும் நாளையும், வகுப்பறைகளில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் நாளையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவன் விதித்ததுதான் நடக்கும்; அதுவே இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்று உறுதியாக நம்புபவர்கள், பிரார்த்தனைகளும், நல்ல செயல்பாடுகளும் இறைவன் விதித்ததை அவனே மாற்றுவதற்கும், காரணமாக இருக்கும் என்பதையும் உறுதியாக நம்ப வேண்டும்.
நன்றி: தினமணி (07-07-2020)