TNPSC Thervupettagam

இணையவெளியில் தமிழாய்வுகள்: அனைத்துலக கவனம் பெற என்ன செய்ய வேண்டும்?

March 25 , 2020 1753 days 789 0
  • · தமிழாய்வு என்பது தமிழ் இலக்கியம்இலக்கணம் மட்டுமின்றி மொழியியல், இனவரைவியல், தொல்லியல், நாடகவியல், வரலாறு, நுண்கலைகள், தகவல் தொடர்பியல், இதழியல், சூழலியல், பெண்ணியம், சமயம்மெய்யியல் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்த நிலையில் விரிவடைந்துள்ளது. உயர்கல்விப் புலத்தில் பேராசிரியர்களும் முனைவர் பட்ட ஆய்வாளர்களும் தமிழாய்வு தொடர்பாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கின்றனர். இன்னொருபுறம், காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் வெளியிடும் போக்கு அதிகரித்துவருகிறது. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்தும் ஆய்வாளர்களால் தமிழில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.
  • · அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் மூலம் ஆய்விதழ்களில் பிரசுரமாகிற தமிழாய்வுக் கட்டுரைகள்தான் கல்விப்புலம் சார்ந்த அண்மைக் கால ஆய்வுப் போக்குகளைத் தீர்மானிக்கின்றன. மின்-ஆய்விதழ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் ஆய்வுக் கட்டுரைகள் குறித்த கண்காணிப்பும் தர மதிப்பீடும் இணையவெளியில் முக்கிய இடம்பெறுகின்றன. தகவல் பெருக்கச் சூழலில் தமிழாய்வுக் கட்டுரைகளை அடையாளப்படுத்திட நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது. தமிழில் நடைபெறுகிற ஆய்வுகளும், பிரசுரிக்கப்படுகிற ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சர்வதேசத் தரத்துக்கேற்பத் தகவமைக்கப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.  

ஆய்வுசார் குறியீடுகள்

  • · ஒரு ஆய்வாளர் தான் தேர்ந்தெடுத்துள்ள ஆய்வுத் தலைப்பு தொடர்பாக முன்னர் பிரசுரமாகியுள்ள ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வுகளின் போக்கையும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். தமிழாய்வுகள் நெடிய பாரம்பரியமும் வரலாறும் மிக்கவை எனினும் ஆய்வுக் கட்டுரைகளை ஆவணப்படுத்துதல் என்பது தொடக்க நிலையில்தான் உள்ளது அல்லது நடைபெறாமலே உள்ளது. இதனால், பிற துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளுக்கு அளிக்கப்படும் ஆய்வுசார் குறியீடுகளான மேற்கோள் அளவீடுகள் (Citation Metrics, H-index, i-10 index, SNIP) தமிழாராய்ச்சித் துறையில் வழங்கப்படாமல் இருக்கிற சூழல் நிலவுகிறது.
  • · ஆய்விதழில் பிரசுரமாகிற ஆய்வுக்கட்டுரைகள், சர்வதேசக் கட்டுரை எண் (DOI number) பெறுவதன் மூலம், அவை வேர்ல்ட்கேட்’ (WorldCat), ‘ப்ளம்எக்ஸ்’ (PlumX), ‘பிகேபி இண்டெக்ஸ்’ (PKP Index), ‘கிராஸ்ரெஃப்’ (Crossref) போன்ற அறிவியல் தரவுத் தளங்களில் பதிவேற்றப்படுகின்றன. அறிவியல், சமூக அறிவியல், கலையியல் சார்ந்த ஆய்வுகளில் ஆய்விதழ்களின் தரமும், ஆய்வாளர்களின் தனித்துவமும், ஆய்விதழ்களில் பிரசுரமாகிய ஆய்வுக் கட்டுரைகளின் தர மதிப்பீட்டின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஸ்கோப்பஸ்’ (SCOPUS), ‘வெஃப் ஆப் சயின்ஸ்’ (WoS) போன்ற அமைப்புகள், ஆய்விதழ்களின் தரத்தை மதிப்பிடுகிற பணியைத் தொடர்ந்து செய்கின்றன.

என்னென்ன தேவை?

  • · தமிழாய்வுக் கட்டுரைகள் தொடர்பாகச் செயல்முறைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திட, தமிழாய்வுசார் குறியீடுகளை (Citation Metrics) உருவாக்கி மேம்படுத்த வேண்டும். எனவே, ஆய்வுக் கட்டுரை எழுதவிருக்கிற ஆராய்ச்சியாளர்கள்/ கல்வியாளர்கள்/ கட்டுரை யாளர்கள் கூகுள் ஆய்வாளர் கணக்கு (Google Scholar account), ஆய்வு நுழைவாயில் கணக்கு (Research Gate account), ஆய்வாளர் அடையாளம் (Researcher ID), அடிப்படைத் தரவுகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • · கூகுள் ஆய்வாளர் கணக்கு, கூகுள் நிறுவனத்தினரால் ஆராய்ச்சியாளர்களுக்கு இலவசமாகத் தரப்படுகிற சேவை. இந்தக் கணக்கை ஏற்படுத்தி நிர்வகிப்பதற்குக் குறைந்தபட்சம் ஆய்வாளர் அல்லது கட்டுரையாளருக்கு ஜிமெயில் கணக்கு இருந்தால் போதுமானது. இதை ‘www.scholar.google.com’ என்ற இணையத்தளத்தில் எளிதில் உருவாக்கி ஆய்வாளர் இதுவரை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தில் பதிவேற்ற முடியும். கூகுள் தேடுபொறியின் உதவியுடன் கட்டுரையாளர் பெற்றிருக்கக்கூடிய அனைத்து வகையான ஆய்வுசார் குறியீடுகளையும் அறிக்கையாகப் பெறும் வாய்ப்பு இங்குள்ளது.
  • · கல்விப்புலம் சார்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர் கள் குறைந்தபட்சம் கல்வி நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் மூலம் தங்களுக்கெனத் தனிப்பட்ட ஆய்வு நுழைவாயில் கணக்கை (Research Gate account) ஏற்படுத்தி, தாங்கள் இதுவரை வெளியிட்டுள்ள அல்லது புதிதாக எழுதியுள்ள கட்டுரைகளைப் பதிவேற்றலாம். இணையத்தில் ஆய்வாளரின் கட்டுரைகளை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள், பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள், ஆய்வாளருக்குக் கிடைத்திருக்கிற மேற்கோள் அளவீடுகள் (RG Factor) ஆகியவற்றை அறிந்துகொள்கிற வாய்ப்பு ஆய்வு நுழைவாயிலில் இருக்கிறது.
  • · ஆய்வாளர் அடையாளம்’ (Researcher ID) என அழைக்கப்படும் ஆர்ச்சிட் ரிசர்ச்சர் ஐடி’ (ORCID Researcher ID - Clarivate Analytics) எண், ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிற அனைத்து வகையான ஆய்வுத் துறையினருக்கும் இந்த எண் மிகவும் அவசியமானது. இந்த எண்ணை கல்வி ஆதார்என்று கூறலாம். இணையத்தில் இந்த எண்ணை ஏற்படுத்திப் பயன்படுத்துவது முற்றிலும் இலவசம். தமிழ் ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் அவசியம் தங்களுக்கான அடையாள எண்ணை உருவாக்கிட வேண்டும்.

அனைத்துலக முறைமைகள்

  • · தமிழில் பிரசுரமாகிற எந்தவொரு ஆய்வுக் கட்டுரையும், ஆய்வுச் சுருக்கம், முதன்மைச் சொற்கள், துணைநூல் பட்டியல் ஆகிய அடிப்படைத் தரவுகளை உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம். தமிழில் எழுதப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையுடன் ஆய்வுச் சுருக்கம், முதன்மைச் சொற்கள், துணைநூல் பட்டியல் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்துப் பதிவேற்றினால் கூகுள் ஆய்வாளர் கணக்கு, ஆய்வு நுழைவாயில் கணக்கில் ஆய்வாளரின் கட்டுரைகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரையின் இறுதியில் துணைநூல் பட்டியல் அளிக்கும்போது எம்எல்ஏ ஸ்டைல்’ (MLA Style), ‘ஏபிஏ ஸ்டைல்’ (APA Style), ‘சிகாகோ ஸ்டைல் மேனுவல்’ (Chicago Style Manual) போன்ற அனைத்துலக முறைமைகளைப் பயன்படுத்துவது அவசியமானது.
  • · ஆய்வின் தாக்கத்தை அறிவியல்பூர்வமாகத் தருவதுதான் ஆய்வுசார் குறியீடுகள் (Citation Metrics). ஆய்வுக் கட்டுரையில் பயன்படுகிற அதிக எண்ணிக்கையிலான மேற்கோள்கள் கட்டுரையை எழுதிய ஆராய்ச்சியாளரின் ஆய்வுசார் குறியீட்டை நிர்ணயிக்கின்றன. கூகுள் தரும் பல சேவைகளைப் போல ஆய்வுசார் குறியீடுகளைப் பெற்றிட கூகுள் ஆய்வாளர் கணக்கு என்ற சேவை உதவுகிறது.
  • · தமிழில் எழுதப்படுகிற ஆய்வுக் கட்டுரைகள் உடனடியாக மின்னணு வெளியில் அதிக எண்ணிக்கையில் இடம்பெறும்போது அவை அண்மைக்கால மதிப்பீட்டைப் பெறும். தமிழில் நடைபெறுகிற ஆய்வுகள் குறித்து, அனைத்துலக அளவில் கவனப்படுத்திட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயலாற்றிட வேண்டியுள்ளது.

 

நன்றி: தி இந்து (25-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்