TNPSC Thervupettagam

இதற்கென்ன மருந்து

April 4 , 2024 288 days 260 0
  • மத்திய-மாநில அரசுகள் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன என்றாலும் கூட மருத்துவம் என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது என்பதை யார்தான் மறுத்து விட முடியும் ? ஒருபுறம் தனியார் மருத்துவமனைகளில் நினைத்துப் பார்க்க முடியாத கட்டணங்கள்; இன்னொரு புறம் அரசு மருத்துவமனைகளில் வழங்கும் கண்துடைப்பு மருத்துவ சிகிச்சை; இதற்கிடையில் ஊசலாடுகிறது சாமானிய இந்திய நோயாளியின் உயிர்.
  • மருத்துவ நிறுவனச் சட்டம் ஒன்றை 14 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு நிறைவேற்றியது. அனைவருக்கும் கட்டுப்படும் வகையில் நியாயமான கட்டணங்கள்தான் மருத்துவமனைகளில் வசூலிக்கப்பட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் முந்தைய மன்மோகன் சிங் அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் அது. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியதே தவிர அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.
  • பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கும், அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கும், பரிசோதனைகளுக்கும் அந்தந்தப் பகுதிகளின் வாழ்க்கை தரத்துக்கு ஏற்ப கட்டணங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிறது சட்டம் . அது மட்டும் அல்ல. என்னென்ன சிகிச்சைக்கு என்னென்ன கட்டணம் என்பது நிர்ணயிக்கப்பட்டு, அது நோயாளிகள் தெரிந்துகொள்ளும் விதத்தில் தனியார் மருத்துவமனைகளில் பார்வைபடும் இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது . எந்த ஒரு மருத்துவமனையும் அதைப் பின்பற்றுவதில்லை; அரசும் கண்காணிப்பது இல்லை.
  • கடந்த மாதம் மருத்துவ நிறுவனச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நீதிபதிகள் மத்திய அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறார்கள். ஒரே சிகிச்சைக்கான கட்டணத்தில் மருத்துவமனைகளுக்கு இடையே கடுமையான வேறுபாடுகள் இருப்பது நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தது.
  • இந்த பிரச்னை குறித்து மாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு வற்புறுத்தி வருவதாகவும், ஆனால் மாநில அரசுகள் அது குறித்த தகவல்களைத் தங்களுக்கு வழங்கவில்லை என்பதும் மத்திய அரசின் வாதம். அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு மாதத்துக்குள் மாநில அரசுகளின் சுகாதாரத் துறை செயலாளர்களின் கூட்டத்தைக் கூட்டி மருத்துவ சிகிச்சைக்கான கட்டண நிர்ணயம் அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
  • பொதுநல வழக்குத் தொடுத்தவர்கள் இடைக்கால நிவாரணமாக சி.ஜி.ஹெச்.எஸ். கட்டணத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதன் அடிப்படையில் ஒரு யோசனையை முன்மொழிந்திருக்கிறது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்.
  • மத்திய அரசு ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்காக மத்திய அரசு உடல்நலத் திட்டம் (சி.ஜி.ஹெச்.எஸ்.) செயல்படுகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் . ஒவ்வொரு சிகிச்சைக்கும் இன்ன கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சைக்கான செலவை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குகிறது . அரசு மருத்துவ நிறுவன சட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை சிகிச்சைக் கட்டணங்களை நிர்ணயித்து நடைமுறைப்படுத்தாமல் இருந்தால், சி.ஜி.ஹெச்.எஸ். நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைத் தர நிர்ணயம் செய்வதாக அறிவிக்க வேண்டி வரும் என்று எச்சரித்து இருக்கிறது உச்சநீதிமன்றம்.
  • மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்கள் மிகவும் அதிகம் என்பதும் மருத்துவ சிகிச்சை காரணமாக பல குடும்பங்கள் திவால் நிலைக்குத் தள்ளப்படுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்களை முறைப்படுத்தி மருத்துவமனைகள் இருக்கும் இடம், அவை வழங்கும் வசதிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுதல் அவசியம் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது.
  • விலைவாசி உயர்வால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ சிகிச்சைதான். 2023 -ஆம் ஆண்டில் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்கள் 9.6% அதிகரித்திருக்கின்றன. 2024-இல் அது 11% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த விலைவாசி உயர்வைவிட இது ஏறத்தாழ 50% அதிகம் .
  • மருத்துவக் காப்பீடு பெரும்பாலானவர்களைச் சென்றடையவில்லை. மத்திய அரசின் "ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் பல குளறுபடிகள் காணப்படுகின்றன. சிகிச்சைக்கான காப்பீட்டுக்குத் தகுதியானவர்களுக்கே கூட அது கிடைப்பதில்லை. மொத்த மருத்துவ செலவினங்களில் 47% அளவுக்கு தனிப்பட்ட அளவில்தான் இப்போதும் நோயாளிகள் செலவிடும் நிலை காணப்படுகிறது.
  • பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் "பணம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் மருத்துவ சிகிச்சை' என்ற திட்டத்தை அறிவித்திருக்கின்றன. அதன்படி, இந்தியாவின் எந்த ஊரிலும் எந்த மருத்துவமனையிலும் பணம் எதுவும் கொடுக்காமல் காப்பீடு எடுத்தவர் சிகிச்சை பெற முடியும் என்று பரப்புரை செய்யப்படுகிறது. மருத்துவமனைகளின் சிகிச்சைக்கு எந்தவித கட்டண தர நிர்ணயமும் இல்லாத நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகள் அந்தக் காப்பீட்டை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதில்லை.
  • தனியார் மருத்துவமனைகள், குறிப்பாக கார்ப்பரேட் மருத்துவமனைகள், மிகவும் செல்வாக்கானவை என்பதுடன் பெரும்பாலான அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், மேலதிகாரிகள் ஆகியோருடன் தொடர்பு உடையவையாகவும் இருக்கின்றன. அவை மருத்துவக் கட்டணங்களைத் தர நிர்ணயம் செய்யும் முயற்சியைத் தடுத்து விடுகின்றன.
  • உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் முடிந்து விடுமா? பூனைக்கு யார் மணி கட்டுவது ?

நன்றி: தினமணி (04 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்