TNPSC Thervupettagam

இது அல்ல வழிமுறை!

June 12 , 2024 19 days 68 0
  • மாநில அளவில் பிரச்னைக்குரியதாக இதுவரையில் இருந்த நீட் தேர்வு, தேசிய அளவில் விவாதத்துக்கு உரியதாக மாறியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) காணப்பட்ட குளறுபடிகள், மாணவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
  • தொழில்நுட்பப் படிப்புகளின் தரத்தை உயர்த்தவும், அதில் சேர விரும்பும் மாணவர்களின் அந்த படிப்புக்கான திறமையையும் ஆர்வத்தையும் எடை போடுவதும்தான் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளின் நோக்கம். அது மட்டுமல்லாமல், அடிப்படைத் தகுதிகூட இல்லாதவர்கள் நன்கொடையின் மூலம் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட ஏனைய தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதைத் தடுப்பதும் பொது நுழைவுத் தேர்வுகளின் குறிக்கோள்.
  • கடந்த மே 5-ஆம் தேதி நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்தது. அதில் பிகாரில் உள்ள தேர்வு மையத்தில் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. ராஜஸ்தானில் உள்ள ஒரு மையத்தில் வினாத்தாள் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது.
  • முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனர். ஹரியாணாவில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் முதலிடம் பெற்றது சர்ச்சையை எழுப்பி இருக்கிறது. 1500-க்கும் அதிகமான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையாகி இருக்கிறது.
  • "நீட்' எனப் பரவலாக அறியப்படும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான், மருத்துவப் படிப்புக்கான அடிப்படைத் தகுதியாக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வைப் போலவே பொறியியல் உள்ளிட்ட ஏனைய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் தேசிய அளவில் தகுதிகாண் நுழைவுத் தேர்வுகள் வந்துவிட்டன. அனைத்துப் படிப்புகளுக்குமே இதுபோல தகுதிகாண் நுழைவுத் தேர்வு நடத்துவது முன்மொழியப்படுகிறது.
  • 12 ஆண்டுகள் வரை படித்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும்கூட நீட் உள்ளிட்ட தகுதிகாண் நுழைவுத் தேர்வுகளில் போதிய மதிப்பெண்கள் பெற முடியாமல் வாய்ப்புகளை இழக்கும் மாணவர்கள் பலர். குறிப்பிட்ட தொழில்நுட்ப படிப்புக்கு மாணவர்கள் தகுதியானவர்களா, அதில் நாட்டம் உள்ளவர்களா என்பதை எடைபோடுவதில் தவறில்லை. ஆனால், 12 ஆண்டுகள் படித்துப் பெற்ற மதிப்பெண் முற்றிலுமாக புறந்தள்ளப்படுவது தவறான அணுகுமுறை.
  • நல்ல மருத்துவராக ஒருவர் உயர்வதற்கும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் தொடர்பு இருக்கிறதா என்றால் இல்லை. நீட் தேர்வில் வெற்றி பெறவும், மருத்துவராகப் பணியாற்றவும் கடுமையான உழைப்பு அவசியம் என்பதுடன் இரண்டுக்குமான தொடர்பு முடிந்துவிடுகிறது.
  • 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில் இருந்து, சில ஆயிரம் மாணவர்களை மட்டுமே வடிகட்டுவதுதான் நீட் தேர்வின் நோக்கமாக இருக்கிறதே தவிர, தேர்வு எழுதும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு உகந்தவர்களா, நாட்டம் உள்ளவர்களா, நல்ல மருத்துவர்களாக இருப்பார்களா என்பதையெல்லாம் அளவிடும் முயற்சியாக அது இல்லை. 200 நிமிஷங்களில் 180 வினாக்களுக்கு விடை அளிக்கும் திறமைசாலிகளாக இருப்பவர்கள் தேர்வாகிறார்கள்.
  • ஒவ்வொரு வினாவுக்கும் 4 விடைகள் தரப்படும்; அதில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவும் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த விடை ஏன் சரியானது, மற்றவை ஏன் தவறானது என்றெல்லாம் யோசிப்பதற்குகூட நேரம் கிடையாது. கண் இமைக்கும் நேரத்தில் "மல்டிப்பிள் சாய்ஸ் க்வெஸ்டின்' எனப்படும் மேலே குறிப்பிட்ட முறையைக் கற்றுத் தேர்ந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.
  • அந்தக் கலையை பல லட்சங்கள் கல்விக் கட்டணமாக பெறும் பயிற்சி மையங்கள் கற்பிக்கின்றன. தேர்வருக்கு மருத்துவப் படிப்பிலோ, ஏனைய தொழில்நுட்ப படிப்பிலோ நாட்டம் இருக்கிறதோ, இல்லையோ அவரது பெற்றோரின் கனவை நனவாக்க பயிற்சி மையங்கள் உதவுகின்றன. கோடிகளில் மையங்கள் சம்பாதிக்கின்றன; சிலர் வெற்றி பெற உதவுகின்றன.
  • நீட் தேர்வை நடத்துவது என்பது மக்களவைக்கான பொதுத் தேர்தலை நடத்துவதைவிட சிரமமானது. குறிப்பிட்ட விநாடியில் நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து மையங்களிலும் தேர்வு தொடங்க வேண்டும். நீட் தேர்வு எழுதுவதற்கு மையங்களில் மாணவர்கள் நுழைவது என்பது விமான நிலைய பாதுகாப்பு சோதனையைவிடக் கடினமானது. நோக்கம் வேறொன்றுமில்லை - ஏமாற்ற நினைக்கும் இளைஞன் மருத்துவராகக் கூடாது.
  • தேசிய தேர்வுகள் முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி) என்பதன் நோக்கம் என்னவோ மேன்மையானது. ஆராய்ச்சி அடிப்படையிலான, வெளிப்படையான, சர்வதேச தரத்திலான சோதனைகள் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது, கல்வி வாய்ப்பில் சமத்துவத்தை உருவாக்குவது ஆகியவை என்டிஏவின் குறிக்கோள்கள். அந்த குறிக்கோளுக்கும் இப்போதைய நீட் தேர்வுக்கும் தொடர்பில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
  • விரைந்து முடிவெடுக்கும் திறன் மட்டுமே திறமைக்கும், தகுதிக்கும் அடிப்படையாக இருக்க முடியாது. மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்விக்கு தேசிய அளவிலான திறன்காண் தேர்வு தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக பிளஸ் 2 மதிப்பெண்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படுவது ஏற்புடையது அல்ல. நன்கொடை அடிப்படையிலான மருத்துவக் கல்விக்கு கடிவாளம் போட நினைத்து, புற்றீசல் போல தனியார் பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் பெற்றோர்களையும் மாணவர்களையும் சுரண்டும் இப்போதைய வழிமுறை அபத்தமானது!

நன்றி: தினமணி (12 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்