- வங்கியிலிருந்து இடைவிடாமல் வரும் ஏல நோட்டீஸ் விழி பிதுங்க வைக்க, வானத்தை வெறித்துப்பார்த்து நின்ற தமிழக உழவர்களின் முகத்தில் இப்போது மட்டற்ற மகிழ்ச்சி.
- இந்த ஆண்டும் நிலம் தரிசாகிவிடுமோ என்கிற கவலை ஒருபுறம்; பிள்ளைகளின் திருமணக் கனவுகள், கல்விச் செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட கவலைகள் மறுபுறம் என உழன்று கொண்டிருந்த உழவர்கள் நெஞ்சில் உவகை பூத்திருக்கிறது.
- ஆம்! இயற்கை கொட்டித் தீர்த்துவிட்டது. விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர்கூடத் தர முடியாது என்று அடம்பிடித்த கர்நாடக அரசியல்வாதிகளையும் வாரி அணைத்தபடி, விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் காவிரியில் சீறிப்பாய்கிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் வறட்சியினால் தரிசாகின.
- ஜூன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, அக்டோபரில் பாதியிலேயே மூடப்பட்டது. இந்நிலையில், கனமழை மூலம் இயற்கை நமக்கு அருள்பாலித்துவிட்டது. அதேநேரம், தமிழகத்தின் முன் உள்ள முக்கியமான கேள்வி, வெள்ளமாக வரும் தண்ணீரை எப்படிப் பயன்படுத்துவது என்பதுதான்.
மாற்றப்பட்ட மரபு:
- தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 259 டி.எம்.சி. நீர் கடலில் கலக்கிறது. 2022இல் ஒரே மாதத்தில் 450 டி.எம்.சி. கடலுக்குள் புகுந்தது. கடலுக்கு நன்னீர் தேவைதான். தேவையைவிட தமிழகம் அவ்வப்போது நன்னீரைக் கடலுக்கு ஈந்துவிடுகிறது. மறுபுறமோ தமிழகத்தின் பாரம்பரியப் பாசனப் பெருமையுள்ள நீர்நிலைகள் பொட்டுத் தண்ணீரின்றி வாடிக் கிடக்கின்றன.
- நீர் மேலாண்மை என்பதில் பழந்தமிழகத்தின் வரலாறு பெருமிதம் மிக்கது. கணக்கதிகாரத்தில் நீர்வழிச் சூத்திரம் என்கிற பாடலே மன்னர்கள் ஆட்சியில் வகுக்கப்பட்டிருந்தது. குளங்கள் சங்கிலித் தொடராக அமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் கடைசிக் குளங்கள் கோயில் குளங்களாக நிர்மாணிக்கப்பட்டன.
- நீர்ப்பாசனம் என்பது கடைமடையில் தொடங்கியது. கடைசிக் குளத்துக்குத் தண்ணீரைக் கொண்டுசேர்த்து, அங்கிருந்து தொடங்கி அதற்கு முன்புறம் உள்ள குளங்களில் தண்ணீர் வரிசையாக நிரப்பப்பட்டது.
- அதாவது, பந்தியில் கடைசியில் உட்கார்ந்தவருக்கு முதலில் பறிமாறப்பட்டது. எல்லோருக்கும் உணவும் கிடைத்தது. இடைக்காலத்தில் இந்த மரபு மாற்றப்பட்டது. பந்தியின் கடைசியில் உட்கார்ந்தவர் கொலைப் பட்டினியோடு திரும்பினார். கடைமடை வயல்களின் உதடுகள் வறண்டு தண்ணீருக்காக ஏங்கின.
- காவிரிப் பாசனத்தில் பழைய டெல்டா என்பது காவிரி, வெண்ணாறு, அவற்றின் கிளை ஆறுகளும், துணை ஆறுகளும் ஆகும். புதிய டெல்டா என்பது கல்லணைக் கால்வாய்ப் பகுதிகளைக் குறிக்கும். இவற்றின் நீர்வழித்தடங்கள் பாழடைந்து சுருங்கின. நதியோரம் நாணல் இல்லாமல் ஆகாயத் தாமரை, நெய்வேலி காட்டாமணக்கு என நீர் உறிஞ்சும் தாவரங்கள் அடர்ந்துள்ளன.
- காவிரி கழிமுகப்பகுதியின்கிளை வாய்க்கால்கள் ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி எனப் பகுக்கப்பட்டு 29,881 என்ற எண்ணிக்கையில் கல்முகத்தோடு கிடக்கின்றன. இவையன்றி பாசனத்துக்குப் பயன்படும் இதர ஏரிகளும், குளங்களும், வாய்க்கால்களும் முறையாகத் தூர்வாரப்படாமல் மண் மூடிக் கிடக்கின்றன. இதேபோல் ஊராட்சி ஒன்றியங்கள், பொதுப்பணித் துறை, முந்தைய ஜமீன்காலத்து நீர்நிலைகள் போன்றவையும் போதிய மராமத்துப் பணியின்றி புறக்கணிக்கப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை ஏறத்தாழ 39,202.
மறைந்து போன பெருமை:
- ஒரு காலத்தில் இவற்றின் பராமரிப்பைப் பார்த்துதான் ஆங்கிலேயர்கள் மிரண்டனர். 1883 வரையிலான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் வரலாற்றை எழுதிய ஆங்கிலேயர்கள், இப்பகுதி எப்போதும் உணவுப் பஞ்சத்தைச் சந்தித்ததில்லை என்று வியந்தனர்.
- மணற்பாங்கான பகுதியில் அணைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தைப் பழங்காலத் தமிழர்களின் பாசன முறையிலிருந்து கற்றுக்கொண்டோம் என்றும், இவற்றுக்காகத் தமிழர்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்றும் சர்.ஆர்தர் காட்டன் கூறினார்.
- பழந்தமிழகத்தில் நீர் சேமிப்பு எவ்வாறு இருந்தது என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகளும் உண்டு. திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் கண்டசதுர்வேதிமங்கலம் என்கிற பகுதி இருந்தது. திருவெறும்பூர் மலையில் சிவன் கோயிலை நிறுவிய செம்பியன் வடிவேலன் என்பவர், அந்தக் கிராமத்து ஏரியை ஆழப்படுத்த 45 களஞ்சி தங்கம் அளிக்க முன்வந்தார். அதற்கு ஈடாக அந்தக் கிராமத்துப் பேரவை கீழ்நடை என்ற உள்ளூர் நலத்தீர்வையை அவருக்கு விற்க ஒப்புக்கொண்டது.
கிராமப் பேரவையின் முதல் தீர்மானம்
- சூரியன், சந்திரன் இருக்கும் காலம் வரை இந்த ஏரி வருடந்தோறும் ஆழப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். ராஜராஜசோழனின் மற்றொரு பெயர் உய்யக்கொண்டான் என்பதாகும்.
- உய்யக்கொண்டான் வாய்க்கால், புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், அக்னியாறு ஆகியவற்றைச் சேர்ந்த பாசன ஏரிகளை இப்போது யார் போய்ப் பார்த்தாலும், அவை தூர்வாரப்படாமல் செத்துக் கிடப்பதை உணர முடியும். மதகுகளும், கதவணைகளும் பழுதாகிக் கரைகள் நிர்மூலமாகி அவற்றின் தோற்றம் பரிதாபமாக உள்ளது.
- கர்நாடகத்தின் ஹாசன், மாண்டியா, மைசூரு உள்ளிட்ட காவிரிப் பாசனப் பகுதிகளில் 15 கிலோமீட்டருக்கு ஒரு கதவணை அமைத்தும் பிற்காலத்தில் உபரி நீரைக்கூட அபகரிக்க மேகேதாட்டு என்கிற மாமலையை உருவாக்கச் சூழ்ச்சி செய்யும் கர்நாடகத்தின் திட்டத்தை முறியடிக்க, தமிழகம் நீர் மேலாண்மையிலும் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டிய நேரம் இது.
உரிமை நீர் அல்ல...
- குடியரசுத் தலைவர் ஆட்சியில் தமிழகம் இருந்தபோதுகூட காவிரியில் சட்டபூர்வமாகக் கூடுதல் உரிமை பெற்றிருந்தது. 1976 ஆகஸ்ட் 26 இல் அப்போதைய மத்திய வேளாண் அமைச்சர் ஜெகஜீவன்ராம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கர்நாடகத்தின் முதல்வராக தேவராஜ் அர்ஸும், தமிழகத்தின் ஆளுநராக மோகன்லால் சுகாடியாவும் இருந்தனர்.
- நீர்ப்பங்கீடு தமிழகத்துக்கு 489 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 177 டிஎம்சி, கேரளத்துக்கு 5 டிஎம்சி என்கிற அளவில்தான் இருந்தது. அரபிக் கடலுக்கு ஆண்டுக்கு 2,000 டிஎம்சியைக் கொடையாகத் தரும் கர்நாடகம் தமிழகத்தை வஞ்சிக்கப் பார்க்கிறது. கர்நாடகத்திடமிருந்து தமிழகம் இப்போது பெறுவது உபரி நீர்தான், உரிமை நீர் அல்ல.
தமிழகம் செய்ய வேண்டியவை...
- உரிமை நீரைக் காவிரிப் பாசனத்துக்கும் உபரி நீரை வானம்பார்த்த பூமிக்கும் திருப்ப உரிய திட்டங்களைத் தமிழகம் வகுக்க வேண்டும். முதல் கட்டமாகக் காவிரியின் கடைமடை வரையிலும் அதன் துணை நதிகளிலும், கிளை நதிகளிலும், கொள்ளிடத்தின் குறுக்கேயும், 50 முதல் 100 கதவணைகளுக்குக் குறையாமல் 20 அடி முதல் 30 அடி உயரமும், இருவழிப் போக்குவரத்துக்கு வாய்ப்பாக நல்ல அகலமான பாலங்களும் வடிவமைத்து நீரைத் தேக்கிச் சேமிக்க வேண்டும். பவானி, அமராவதி, வெண்ணாறு உள்ளிட்ட பகுதிகளிலும், இவற்றின் கிளை, உப நதிகளிலும் கதவணைகளைக் கட்டி நீரைச் சேமிக்க வேண்டும்.
- பாசனத்துக்கான நீர்ப் பகிர்வில் தமிழகம் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்க வேண்டும். உதாரணமாக, 1938 ஏப்ரல் 30இல் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ஜே.பி.பிரௌன் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெறும் உரிமை பெற்ற வாய்க்கால்களின் பட்டியலைத் தந்தார். அதில் உய்யக்கொண்டான் பெயர் முதலிடம் பெற்றது.
- இப்போது 2024 ஜூலை 30இல் தமிழக அரசின் நீர்வளத் துறை வெளியிட்டுள்ள நீர் விநியோகப் பட்டியலில் உய்யக்கொண்டான் வாய்க்கால் பெயர் இடம்பெறவில்லை. ஜூன் 12இல் மேட்டூரில் தண்ணீர் திறந்து ஜனவரி 28இல் மூடும் கால நிர்ணயம்கூட இன்றைய காலநிலை மாற்றச் சூழலில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.
- இயற்கையும் தென்மேற்குப் பருவமழையும் சீதனமாக அவ்வப்போது அள்ளிக்கொடுக்கும் மழை நீரைப் பயன்படுத்தி நிலத்தடி நீர் வளத்தையும், பாசனத்தையும், குடிநீரையும் மேம்படுத்த தமிழ்நாடு நீர்வளத் துறை திட்டமிட வேண்டும். கூட்டாட்சி அமைப்பில் தமிழகம் காவிரியில் கர்நாடகத்தின் காலனி நாடு அல்ல என உணர்த்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பும் ஆகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2024)