TNPSC Thervupettagam

இது எதிர்மறைக் காலமா

May 26 , 2021 1340 days 600 0
  • ஒவ்வொரு பேரழிவும் முன் ஊகிக்கத்தக்கதாக இருக்கும் அதே வேளையில் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது.
  • எரிமலை வெடிப்பிலிருந்து பருவம் தவறுதல் வரை நம்மால் எதிர்காலத்தைப் பெருமளவு கணிக்க முடிந்தாலும், நாம் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளில் கோட்டை விடுபவர்களாக இருக்கிறோம்.
  • மனித அறிவு எல்லையற்றதாக இருக்க, நமது முயற்சிகளின் ஒருங்கிணைப்பில் இன்னுமே பின்தங்கியவர்களாகவே தொடர்கிறோம் என்பது ஒரு முரண்.
  • நாம் இப்போது முற்றிலும் எதிர்மறையான ஒரு காலத்தில் வாழ்கிறோம் என்பது ஓர் உண்மை. உலகளாவிய சிக்கலான கரோனா பெருந்தொற்று எல்லாத் திசைகளிலும் எதிர்மறைக் காற்றையே நிரப்பியுள்ளது.
  • நாம் மூச்சுத் திணறுகிறோம். நமது அரசுகள், அமைப்புகள் மூச்சுத் திணறுகின்றன. நமது முக்கியத்துவங்கள், முன்னுரிமைகளின் பட்டியலில் அனைத்துமே வரிசை மாறி, உயிர் பிழைத்தல் மட்டுமே முன்னணியில் நிற்கிறது.

இதை எப்படி எதிர்கொள்வது?

  • மனித வரலாற்றில் எப்போதாவது நேர்மறைக் காலமென்று ஒன்று இருந்ததா? இதற்கான பதில் நிச்சயமாக சந்தேகத்துக்கு உரியது.
  • வேட்டையாடி உணவருந்திய காலம் முதலாக விவசாய, தொழில் சமூகமாகத் திரண்ட காலகட்டம் வரையிலும் ஒவ்வொரு வகையில் அழிவை எதிர்கொண்டு, பேரளவில் இழப்புகளைச் சந்தித்தே மனித இனம் உயிர் பிழைத்திருக்கிறது.
  • உதாரணத்துக்கு, தொழிற்புரட்சியின் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பருத்தி ஆலை மையங்களில் வாழ்ந்தவர்களின் சராசரி வாழ்நாள் வெறும் 17 வருடங்களாக இருந்திருக்கிறது.
  • சாதாரண வயிற்றுப்போக்கால் நாம் இங்கே பல உயிர்களை இழந்திருக்கிறோம். கைக்குழந்தைகள் இறப்பு, பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழத்தல், காச நோய் போன்றவற்றால் நாம் அநாமதேயமாகப் பல உயிர்களை இழந்திருக்கிறோம்.
  • ஒவ்வொரு குடும்பமும் சமூகமும் பல்வேறு வகையில் நிகழ்ந்த உயிரிழப்புகளை உள்வாங்கியே மீண்டிருக்கிறது.

கடந்துவந்த பஞ்ச காலம்

  • நோயைக் காட்டிலும் கொடிய பஞ்ச காலங்களைத் தமிழகமேகூட சந்தித்திருக்கிறது. தாது வருடப் பஞ்சம் எனக் குறிப்பிடப்படும் 19-ம் நூற்றாண்டுப் பஞ்சம் பல லட்சக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டியது.
  • நவீன மதிப்பீடுகள் 82 லட்சம் மக்கள் வரை இறந்திருக்கலாம் என மதிப்பிடுகின்றன. இயற்கைப் பேரழிவை விடுங்கள், உணவுப் பஞ்சம் பெரும்பாலும் செயற்கையானது.
  • மனிதத் தவறால், விநியோகத்தில் நிலவும் குளறுபடிகளால் நிகழ்வது. நாம் முழுமுற்றான பஞ்ச கால நிலையைக் கடந்திருக்கிறோம். உணவுப் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க அளவிலாவது நமது நிர்வாக முறைகளால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
  • ஆயினும், இன்னுமே உணவில்லாமல் உறங்கச் செல்லும் அல்லது உறக்கம் வராமல் தவிக்கும் ஏழைகள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை எதை ஓர் அளவுகோலாகக் கொண்டாலும் அளவிடப்படுவதற்கு பெரும் எண்ணிக்கை கிடைத்துவிடும்.
  • நாம் இன்னும் மத்திய கால ஐரோப்பாவைச் சீரழித்த பிளேக் நோயை, இரு உலகப் போர்கள், தேசப் பிரிவினை, குறும் போர்கள், மதக்கலவரங்களைப் பற்றி விவாதிக்க வில்லை.
  • இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில்தான் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த ஸ்பானிஷ் ஃபுளூ பற்றி அறிந்தோம்.
  • ஒவ்வொரு பேரழிவைச் சந்திக்கும் காலத்திலும் மனித வரலாறு அதற்கொரு முன்னுதாரணத்தை விட்டுச் சென்றிருக்கிறது. மனித வாழ்வின் அடிப்படைகளில் எதுவுமே புதியதில்லை. அதுவும் ஒரு கரோனா வைரஸைப் போல தன்னைச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்திருக்கிறது.

மனித இயல்பு

  • அறிவியலின் அடிப்படையில் சொல்லப் போனால், நாம் உண்மையில் வைரஸ்களின், பாக்டீரியாக்களின் உலகில்தான் வாழ்கிறோம்.
  • நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் வகைகளும் மனித இனத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானவை. நாம் அவற்றோடு இடைவிடாத தொடர்பில் இருக்கிறோம். நமது உடல் பல்வேறு நுண்ணுயிர்களின் வாழிடமாகவும் இருக்கிறது.
  • தூய்மையான மனித உடலென்று ஒன்று இல்லை. நாம் பல்வேறு உயிரினங்களைப் போலவே பல்வேறு உயிரினங்களின் கலவையால் ஆன உடலைக் கொண்டவர்கள்.
  • ஆனாலும், பெருந்தொற்றுக் காலத்தின் இழப்புகளால் நாம் ஏன் மனச்சோர்வு அடைகிறோம்? நம்பிக்கை இழக்கிறோம்? அது மனித இயல்பின், உயிரினங்களின் இயல்பான எதிர்வினை. நம்பிக்கை இழப்பும் மனச்சோர்வும் இயல்பானவை.
  • நமது மனம் மகிழ்ச்சியாக இருக்க மட்டுமே உருவான, ஓயாது இயங்கும் ஓர் இயந்திரமல்ல. அதன் இயல்பிலேயே விலகலையும் செயலின்மையையும் விரும்புவது.
  • கண் முன்னே நம் குடும்ப உறுப்பினர்கள் வயது வேறுபாடின்றி மரணிக்கிறார்கள். நம் மீது ஓயாது மோதும் தகவல் அலைகளில் நோய்மையும் மரணச் செய்தியுமே நிரம்பியிருக்கின்றன.
  • நாம் இவற்றை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தீயவற்றைப் பார்க்காமல், கேட்காமல், பேசாமல் இருக்கலாம். ஆனால், தீயவற்றால் தாக்குறாமல் நம்மால் ஒருநாளும் இருக்க முடியாது.
  • வாழ்வின் அடிப்படையிலேயே நிச்சயமின்மை ஒரு நிரந்தர முடிச்சாக அவிழ்க்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது. பெருந்தொற்றுக் காலம் மெல்ல விலகும். உலகு இயல்பு நிலைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்படக்கூடும்.
  • நாம் இழப்புகளோடு சேர்ந்தே ஒரு புதிய விடியலைக் காண்போம். மனிதர்கள் தாமாக முன்வந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதைக் காண்கிறோம்.
  • உணவு, மருந்து, பொருள் உதவி என வலிமையான அரசு அமைப்பைக் காட்டிலும் தனிமனிதர்கள், நண்பர்கள், உறவினர்கள் அளித்துக்கொள்ளும் பரஸ்பர நம்பிக்கையும் உதவிகளும் அற்புதங்களுக்கு நிகரானவை.
  • இந்த எதிர்மறைக் காலத்தில் மனிதர்கள் பலர் தங்களது சிறப்பான குணங்களை வெளிப்படுத்துகிறார்கள். இதுவும் மனித இயல்பின் ஒரு பகுதிதான்.
  • இரண்டு தலைமுறைகளுக்கு முன் பிறக்கும் குழந்தைகளில் ஒன்றிரண்டாவது இறப்பது என்பது சாதாரணம். அப்போதையே உணர்ச்சிகர எதிர்வினை இப்போதிருப்பதைப் போல கடினமானதாகவும் இருக்கவில்லை.
  • நம் காலம் நம்மை மகிழ்ச்சியின் அடிமைகளாக மாற்றியிருப்பதால், இழப்புகளைக் கண்டு பேரளவில் அச்சமும் மனநெருக்கடியும் கொள்கிறோம்.
  • முன் சென்ற எந்தத் தலைமுறையை விடவும் நாம் சிறப்பானவர்கள் அல்ல; அவர்கள் சந்திக்காத எந்தச் சவாலான நிலைமையையும் புதிதாகச் சந்திப்பவர்கள் அல்ல.
  • எதிர்மறைக் காலம் என்பது நம்மோடு எப்போதுமே உடன் இருப்பது; நேர்மறைக் காலமோ நாம் உருவாக்க விரும்புவது. இவ்விரண்டு நிலைகளுக்கு இடையேதான் வாழ்வு நகர்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்