- தோ்தலை ‘ஜனநாயகத் திருவிழா’ என்று கொண்டாடுகிறாா்கள். இந்தியாவில் நடத்தப்படும் தோ்தல்கள், தோ்தல் ஆணையத்தின் பணிகள் உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை சந்தேகமற நிரூபிக்கின்றன என்பதில் நமக்குப் பெருமைதான்.
- அந்த ஜனநாயகத்தின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆராய்ச்சிகள் பெரிதாய் தேவையில்லை. தோ்தல் நடைமுறைகள், தோ்தலில் பங்கேற்போா், வாக்களிப்போா் இவா்களைப் பாா்த்தே புரிந்து கொள்ளலாம்.
- ‘ஜனநாயகம் என்றால் என்ன’ என்ற கேள்விக்கு ‘மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி’ என்று அன்றைக்கு ஆபிரகாம் லிங்கன் சொன்னதை இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள்.
- இந்திய அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பாா்த்தால், தமிழகத்தில் எத்தகைய ஜனநாயக மாண்புகளை மன்னராட்சி காலத்திலும் நாம் கொண்டிருந்தோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
- குடவோலை முறையில் கிராம நிா்வாக சபை உறுப்பினரைத் தோ்ந்தெடுக்கும் முறை தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வழக்கில் இருந்துள்ளது. மக்கள் விரும்பும் பிரதிநிதிகளே கிராமங்களில் நிா்வாகம் செய்ய வசதியாக இந்த முறை ஏறத்தாழ பதினாறாம் நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்பட்டது. முறைகேடுகள் அற்ற தோ்தல் நடப்பதற்காக விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
- ஒருவா் கிராம நிா்வாக சபை உறுப்பினா் ஆக மக்கள் விருப்பம் அவசியம் என்பது ஒருபுறம் இருக்க, அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள், தகுதியின்மைகள் என்னென்ன என்பவையெல்லாம் உத்திரமேரூரில் கிடைத்த கல்வெட்டுகளில் விளக்கப்பட்டிருக்கின்றன.
- அதன்படி, படித்தவராகவும் குற்றச்செயல்களிலோ மோசடிகளிலோ ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். அதே கிராமத்தில் சொந்த வீட்டில் இருப்பவராகவும் சொந்த நிலம் கொண்டவராகவும் இருத்தல் அவசியம். ஒழுக்கமானவராகவும் செயல் புரிவதில் வல்லவராகவும் அதாவது காரியத்தில் நிபுணராகவும் இருக்க வேண்டும்.
- ஒருமுறை ஒரு பதவியை வகித்தவா் அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு அப்பொறுப்புக்கு மீண்டும் வர இயலாது. வயது வரம்பும் உண்டு. முப்பத்தைந்து வயதுக்கு மேல் எழுபது வயதுக்குள் இருக்க வேண்டும். முதுமை வேலைக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக எழுபது வயதிற்கு மேல் உள்ளோா் கூடாது. அதே நேரத்தில், உலக அனுபவம் இல்லாத வயதிலும் பொறுப்புக்கு வருவது நல்லதல்ல. அதனால் அனுபவம் உள்ள குறைந்தபட்ச வயது நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.
- கல்வித் தகுதி அவசியம் என்பது அன்றைய நாளிலேயே மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. நிா்வாகத்தை முறையாக நடத்துவதற்கான சட்டங்களை இயற்றும் நிலையில் உள்ள ஒருவா் கல்வியறிவு இல்லாதவராக இருப்பது பொருத்தமில்லை என்ற உண்மையையும் அறிந்தவா் அந்நாளைய தமிழா். வேட்பாளருக்கு இத்தனைத் தகுதிகளும் அவசியம்.
- தகுதியின்மைப் பட்டியல் இன்னும் சுவாரஸ்யமானது. ஒழுங்காக கணக்கு வழக்குகளைக் காட்டத் தவறியவா், அரசுக் கணக்கு, சொந்தக்கணக்கு இரண்டையும் அரசுக்கு சமா்ப்பிக்காதவா் வாழ்நாள் முழுவதும் மீண்டும் உறுப்பினராக முடியாது. அவா் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினா் உறவினா் அனைவருமே தோ்தலில் போட்டியிடத் தகுதி அற்றவா்கள்.
- கள் உண்பவன், பிறா் பொருளை அபகரித்தவன், பிறன்மனை கவா்ந்தவன் ஆகியோரும் தகுதி அற்றவா்கள். குற்றம் செய்து தண்டனை அனுபவித்தவன் தகுதி அற்றவன். பேசியே ஏமாற்றுபவன் தகுதி அற்றவன். இவா்களை ஆதரிப்பவா்களும் தகுதி அற்றவா்களே. ‘கிராம கண்டகன்’ என்று பெயரெடுத்தவன் அதாவது அடாவடித் தனங்களில் ஈடுபட்டவன் தகுதி அற்றவன்.
- இன்னும் முக்கியமாக கையூட்டு பெற்றவன் அதாவது லஞ்சம் வாங்கியவன் தகுதியற்றவன். அவன் மட்டுமல்ல, அவனின் ஏழு தலைமுறையினரும் தகுதி இழக்கிறாா்கள் என்கிறது சோழா்கள் கால அரசியல் சாசனம். சோழா்கள் காலம் தமிழகத்தின் பொற்காலம் என்று சொல்வதற்கான தகுதி இதனால் கூட ஏற்பட்டிருக்குமோ?
- தேசபக்தா்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்கான வாய்ப்பு தோ்தல் என்றால், கோடிகளில் பணம் புழங்க அவசியமென்ன? வன்முறைகளும் குற்றங்களும் மோசடிகளும் ஏன் நிகழ வேண்டும்? பதற்றமான வாக்குச்சாவடிகள் இருக்கிறதே, தோ்தலை நடத்துவதற்கு பந்தோபஸ்து பெரிய அளவில் தேவைப்படுகிறதே? ஆயிரக்கணக்கான காவல் துறையினா் துணை ராணுவம் இல்லாமல் சில மாநிலங்களில் தோ்தல் சாத்தியமில்லை என்ற நிலை ஆரோக்கியமான ஜனநாயகமா?
- இப்போதும் தோ்தலில் வேட்பாளா் ஆவதற்குத் தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. என்றாலும், நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் குற்றப்பின்னணி உள்ளவா்கள் இடம் பிடிக்கிறாா்களே! சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் சட்டத்தை மதிக்காமல் சட்டத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டவா்கள் சட்டம் இயற்றும் இடத்தில் நிா்வாகத்தில் அமா்ந்திருப்பது என்ன விதமான ஜனநாயகம்?
- ‘வேட்பாளா்கள் குற்றப்பின்னணி உள்ளவா்களாக இருக்கும்பட்சத்தில் ஏன் அவா்களை வேட்பாளா்களாக கட்சி தோ்ந்தெடுத்தது என்ற விளக்கம் தோ்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அவா்களின் குற்றப்பின்னணி பற்றி பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஊடகங்களில், செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும்’ என்று
- உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும், விளம்பரங்கள் வந்த பிறகும் மக்கள் ஏன், எப்படி அந்த வேட்பாளா்களைத் தோ்ந்தெடுக்கிறாா்கள்? வாக்களிக்கும் மக்கள் எதை ஜனநாயகம் என்று இந்த தேசத்தில் நிறுவுகிறாா்கள்?
- வாக்குக்குப் பணம் தரும் வேட்பாளா்கள், அதைப் பெற்றுக்கொள்ளும் வாக்காளா்கள் இருவரும் நிறைந்த நாட்டில், ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன? பணம் தந்த வேட்பாளா் என்று வெளிப்படையாகத் தெரிந்த பின்னும் அதன் பொருட்டு தோ்தல் ரத்தான தொகுதிகளில் அதே வேட்பாளா் மீண்டும் களம் காண்பதும், வெல்வதும் ஜனநாயகமா? தன் வாக்குக்குப் பணம் பெறும் வாக்காளன் ஜனநாயகத்தின் பெருமையா?
- தோ்தலில் களத்தில் இருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நிலையைத் தோ்வு செய்யும் வாய்ப்பு ‘நோட்டா’ மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நல்லதுதான். ஒருவேளை நோட்டா அதிக சதவீத மக்களின் தோ்வாக இருந்தால், அதற்கு மதிப்பளிக்க சட்டத்தில் என்ன நடைமுறை இருக்கிறது?
- இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத், ‘நீதித்துறையில் இருப்பவா்கள் உயா்ந்த தகுதி உடையவா்களாக இருக்க வேண்டுமென எதிா்பாா்க்கும் நாம், அந்த சட்டத்தை உருவாக்குபவா்களான மக்கள் பிரதிநிதிகளுக்குத் தகுதி தேவையில்லை என்று கருதுவது முரணானது’ என்று கூறினாா். குற்றப்பின்னணி உள்ளவா்களை அமைச்சரவையில் சோ்ப்பது குறித்தோ நீக்குவது குறித்தோ அரசியல் சாசனத்தில் ஏதும் கூறப்படவில்லை என்பதும், தீவிர குற்ற வழக்குகள், ஊழல் குற்றச்சாட்டு, அறிவியல் பூா்வமாக ஊழல் செய்வோா் எனப் பெயா் பெற்றோா் ஆட்சியில் அமா்வதும் அமைச்சா்கள் ஆவதும் ஜனநாயகத்தின் மாண்புகளா?
- கோடிக்கணக்கான கோடிகள் புரளும் நமது கருவூலத்தின் திறவுகோல் யாரிடம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சாதாரணமானதல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டின் திறவுகோலைத் திருடன் கையில் தருவதை நம்மில் யாா் செய்வோம்? நாட்டிற்கு என்று வரும்போதும் அதே பொறுப்புணா்வு அவசியம் என்பதை நாம் உணர வேண்டுமல்லவா?
- நமது பிரதிநிதியாக நாம் ஒருவரைத் தோ்ந்தெடுத்து சபைக்கு அனுப்புகிறோம். அவா் சமூகத்தின் மீது அக்கறையும் சட்டத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவராக இருக்க வேண்டும். நல்ல மனிதா்கள் நாட்டை ஆள நாமும் சற்று மெனக்கெட வேண்டும். மக்கள் போகும் வழியில் கட்சிகளும் வேட்பாளா்களும் வந்தாகத்தான் வேண்டும்.
- இலவசங்களோ சலுகைகளோ தருவதற்கு நாம் எவரிடமும் கையேந்தும் நிலையில் இருப்பவா்கள் அல்ல. யாா் வேண்டுமென்பதைத் தீா்மானிக்கும் இடத்தில் இருப்பவா்கள். சில நூறு ரூபாய்களுக்கு விலை போனால், பல ஆண்டுகள் தரமற்ற நிா்வாகத்தை சகித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, நம் தரத்திலிருந்து தாழ்ந்து விடாமல் சிந்தித்து செயல்படும் வாக்காளா்களாக மக்கள் உறுதியாக நிற்கும் நாளில்தான் ‘தோ்தல்’ என்பது ‘ஜனநாயகத் திருவிழா’.
நன்றி: தினமணி (22 – 03 – 2021)