TNPSC Thervupettagam

இது பெருங்களத்தூர் தீபாவளி

November 10 , 2023 426 days 243 0
  • ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நாள்காட்டியைக் கையில் எடுத்து தீபாவளிப் பண்டிகை எப்போது என்று பார்க்கத் தோன்றும். அப்படி 2022இல் தீபாவளி திங்கள்கிழமை வந்தபோது அவ்வளவு மகிழ்ச்சி. ஏனென்றால், தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை இரவு ஊருக்குக் கிளம்பிவிட்டால் பண்டிகை நாள் முழுவதும் சொந்த ஊரில் கொண்டாடலாம். பல மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட வேண்டும், ஊருக்குச் சென்று புத்தாடை எடுத்துக்கொள்ளலாம் என மனதில் திட்டங்கள். ஆனால், அபூர்வமாகக் கிட்டும் இது போன்ற வாய்ப்புகள் நமக்குக் கிட்டாமல் போவதுதான் வழக்கம் ஆச்சே!
  • அலுவலகத்தில் ஒப்புக்கொண்ட வேலை ஞாயிற்றுக்கிழமை வரை இழுத்துவிட்டது. எனவே, ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு தாம்பரத்திலிருந்து இரவுப் பேருந்தைப் பிடித்துவிட ஆயத்தமானேன். பண்டிகை நாள்களின்போது தாம்பரம், கோயம்பேட்டில் இருந்து பேருந்து பிடித்து ஊர் செல்பவர்களுக்குத் தெரிந்திருக்கும், இது எவ்வளவு பெரிய பிரம்மப் பிரயத்தனம் என்று! வேறு வழியில்லை, ‘போருக்கு’ தயாரானேன்.

கலைந்த உறக்கம்

  • திங்கள்கிழமை தீபாவளி என்பதால் சனிக்கிழமையே அனைவரும் ஊருக்குக் கிளம்பியிருப்பார்கள் எனத் தப்புக் கணக்குப் போட்டிருந்தேன். என்னைப் போல அலுவலகப் பணியில் சிக்கியிருந்த பெருங்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவுதான் பேருந்து பிடிக்கத் தாம்பரம் வந்திருந்தது. இரண்டரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின், தனியார் பேருந்தின் முன் வரிசையில் காலியாக இருந்த ஒரு சீட்டு கிடைத்தது.
  • நேரம் இரவு 11.30 மணி, தாம்பரத்திலிருந்து பேருந்து புறப்பட்டது. சென்னையிலிருந்து கோயமுத்தூர் செல்ல 8-9 மணி நேரமாகும் என்பதால், பேருந்து கிளம்பியவுடன் அம்மாவுக்குப் போன் போட்டு காலையில் இட்லி கறிக்குழம்பு உணவுக்கு வீட்டில் இருப்பேன் என்று ‘அப்டேட்’ செய்துவிட்டேன். அம்மாவிடம் பேசிவிட்டு உறங்கச் சென்றேன்.
  • உட்கார்ந்தவுடன் அப்படியொரு உறக்கம். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த அந்த நிம்மதியான தூக்கம் சட்டென்று எழுந்த பின்பு வரவேயில்லை. ஏனென்றால். எழுந்து பார்த்தபோது நேரம் இரவு 1 மணி, அப்போதுதான் பெருங்களத்தூரைத் தாண்டப்போகிறோம் என்பது தெரிந்ததும் உறக்கம் வருமா? காலையில் இட்லியும் கறிக்குழம்பும் கிடைக்க வாய்ப்பில்லை எனத் தேற்றிக்கொண்டேன்.

‘மீம்கள்’ துணை

  • செல்போனை எடுத்து நோண்டத் தொடங்கியதும் வாட்ஸ்-அப்பில் வாழ்த்துகள் வரத் தொடங்கின. ‘வீட்டில் பலகாரம் தயார்’ என அம்மா ஒளிப்படம் அனுப்பினார். பெருமூச்சு விட்டுவிட்டு ஃபேஸ்புக் பக்கம் சென்றேன். அந்தத் தூக்கமற்ற இரவைச் சிரிப்பு வெடியாக மாற்றியது நெட்டிசன்களின் மீம்கள். என்னைப் போல பெருங்களத்தூரிலும், கோயம்பேட்டிலும் ஊர் செல்ல முடியாமல் தவித்துப் போயிருந்த இணைய சொந்தங்கள் மீம்களைத் தெறிக்கவிட்டிருந்தனர்.
  • ‘வாழ்க்கையில் அவ்வளவு சீக்கிரம் கடந்துவிட முடியாதவற்றில் ஒன்று பெருங்களத்தூர்’, ‘ஒரே ஒரு நாள்தான் லீவு இருக்கு, பெருங்களத்தூர் வரைதான் வர முடியும், அதனால குடும்பத்தோடு நீங்க எல்லாம் பெருங்களத்தூர் வந்துட்டா, அங்கேயே தீபாவளிய சிறப்பா கொண்டாடிடலாம்’ என்பது போன்ற மீம்கள் கண்ணில் சிக்கின. அன்றைய இரவு ‘பெருங்களத்தூர் மீம்கள்’, ‘தீபாவளி போனஸ் மீம்கள்’, ‘பலகார மீம்கள்’ ஆகக் கடந்தது.
  • அதிகாலை 2 மணிக்கு வேகமெடுத்த பேருந்து காலை 8.30 மணிக்கு கோயமுத்தூர் சென்று நின்றது. ஊர் இறங்கிய மகிழ்ச்சியின் மறுபக்கம், சென்னை திரும்பும்போதும் ‘பெருங்களத்தூர் டிராஃபிக் நம்மை நேரத்துக்கு அலுவலகம் செல்ல விடாதே’ என நினைத்துக்கொண்டேன். சென்னை தாண்டி சொந்த ஊர் செல்லும் அனைவருக்கும் சிறப்பு தீபாவளி நல்வாழ்த்துகள்!

நன்றி: இந்து தமிழ் திசை (10 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்