இது பேசக் கூடாத பிரச்சினையல்ல
- ‘மாட்டிக்கொள்ளாதவன் ஞானி, மாட்டிக்கொள்பவன் அயோக்கியன்’ என்பார்கள். நம் சமூகத்தில் எதைப் பற்றியெல்லாமோ விவாதிக்கிறோம். ஆனால், நாம் உரையாடத் தயங்கும் ஒரு விஷயம், மனிதர்களின் பாலியல் சிக்கல்கள். பாலியல் சார்ந்து பேசப்படாம லேயே இருக்கும் எண்ணங்களும் சிந்தனைகளும் குற்றங்களாக உருவெடுக்கின்றன.
- நம் சமூகத்தில் பெண்களுக்குப் பாலியல் வேட்கையே இருக்காது என்கிற நினைப்பு பலருக்கும் இருக்கிறது. எனவேதான் ஆண்களின் மறுமணத்தை ஆதரிக்கும் பலர் பெண்களின் மறுமணத்தைப் பற்றிச் சிந்திப்பதுகூட இல்லை. இதனாலேயே சமூகத்தில் பல்வேறு சிக்கல்கள் பாலியல் ரீதியாகப் புரையோடிக் கிடக்கின்றன.
- இலக்கியத் துறை சார்ந்த ஒரு நபர் பெண்களின் உள்ளாடையைத் திருடி அண்மையில் மாட்டிக்கொண்டார். அந்தச் செய்தி சமூக ஊடகங்களில் நகைக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது. வெளி உலகத்துக்கு மிகவும் நாகரிகமானவராகவும் நல்லவராகவும்தான் இப்போது வரை அந்த நபர் அறியப்பட்டு வந்திருக்கிறார்.
- ஆனால், அவரிடம் பாலியல் சார்ந்து அப்படிப்பட்ட ஓர் எண்ணம் இருக்கும் என்பதைக்கூட அவரால் யாருடனும் உரையாடவே இயலவில்லை. இன்று அவர் செய்த செயலைப் பகடி செய்யும் இலக்கிய உலகம், அவருக்குள் இருக்கும் இந்தப் பாலியல் ரீதியான மனச்சிக்கல் குறித்து அவரால் யாரோடும் ஏன் உரையாட இயலவில்லை என்பதைச் சிந்திக்க மறுக்கிறது.
- அதுதான் இதுபோன்ற பாலியல் பிரச்சினைகள் பெருகுவதற்கான காரணங்களில் ஒன்று என நினைக்கிறேன். அவர் கேமரா கண்களில் சிக்கி, காவல்துறையில் மாட்டிக்கொண்ட பிறகு, ‘ஐயய்யோ... இவர் நல்லவர் என்று நினைத்தோமே..’ என்கிற குமுறலைக் கேட்க முடிந்தது.
- வெளி உலகத்தில் நல்லவராக அறியப்படும் மனிதருக்குள் பாலியல் சிக்கல்கள் இருக்கக் கூடாது என்று எந்த நியதியும் இல்லை. அப்படி அவர் தன்னுடைய சிக்கலை யாரிடமாவது தெரிவித்திருந்தாலோ அதற்குச் சிகிச்சை எடுத்திருந்தோலோ இந்தப் பழக்கத்தை அவர் கைவிட்டிருக்கலாம்.
- ஆனால், தன் சிக்கல் குறித்து மனைவியிடம்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு நம் சமூகத்தில் மனச்சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதை இனிமேலும் நாம் விவாதிக்காமல் இருந்தால், பாலியல் சிக்கல்களைப் பாலியல் குற்றங்களாக மாற்றும் மௌன சாட்சியாக மட்டுமே நாம் சமூகத்தில் வலம்வருவோம் என்பது உறுதி.
- மனரீதியான பாலியல் சிக்கல்களை உரையாடாமல் இருப்பதால்தான் இங்கு பல்வேறு விதமான பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன. பாலியல் வேட்கை என்பது இயல்பானது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவை ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும், வேறுபடும்.
- இதன் அடிப்படையில்தான் அவர்களது பாலியல் மனப்பிரச்சினையையும் சிக்கல்களையும் அணுக வேண்டும். பிறரிடம் உரையாட முடியாமல் பாலியல் சிக்கல்களைத் தங்களுக்குள்ளேயே வைத்திருக்கும் மனிதர்கள், பெண்களிடம் மட்டும் மிக எளிதாகத் தங்களுடைய மூர்க்கமான பாலியல் வேட்கைகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
- அதற்கு முக்கியக் காரணம் இன்று எல்லா இடங்களிலும் பெண்கள் காட்சிப் பொருளாக மட்டுமே காட்டப்படுவதுதான். அடிப்படையில் பள்ளிகளில் இது போன்ற பாலியல் தெளிவுறுத்தல்கள் அவசியம். பாலியல் சிக்கல்கள் தொடர்பாக மாணவர்களிடம் உரையாடும் நபர்கள் அது குறித்த புரிதலோடும் முதிர்ச்சியோடும் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசும் ஒரு தளம் உருவாக்கப்பட வேண்டும்.
- அந்தத் தளத்தை அரசு மட்டுமே உருவாக்க முடியும். கல்வித் துறையில் அதற்கென ஒரு தனிப் பகுதி உருவாக்கப்பட்டு, அதை மேலாண்மை செய்ய ஒரு குழு அமைத்து அதன் மூலமாகக் கவனித்துவர வேண்டும். கல்வி என்பது நல்ல வேலையை ஈட்டித் தருவது மட்டுமல்ல. ஒரு நல்ல மனிதனை உருவாக்குவது. பாலியல் ரீதியான வேட்கைகளைப் பற்றிய புரிதல்களைக் கல்வி உருவாக்க வேண்டும். இந்த முயற்சி பாலியல் குற்றங்களைக் குறைக்க உதவும் என்பது என் நம்பிக்கை.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 12 – 2024)