இது ‘ஃபுட்டி’கள் காலம்!
- ஒவ்வோர் ஆண்டும் அக். 16இல் ‘உலக உணவு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் உணவைப் பற்றி பேச ஆரம்பித்தாலே, சோஷியல் மீடியாவில் புழங்கிக் கொண்டிருக்கும் ‘ஃபுட்டி’கள் நினைப்புகள் வராமல் இருக்காது. ஏனெனில், இன்றைய இளைஞர்களிடையே ஃபுட்டிகள் என்கிற வார்த்தை அதிகம் புழங்கிக் கொண்டிருக்கிறது.
- முன்பெல்லாம் எங்காவது ஊருக்கோ அல்லது சுற்றுலாவுக்கோ செல்லும்போது, அந்த இடத்தில் கிடைக்கும் விதவிதமான உணவு வகைகளைச் சாப்பிடுவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால், ‘ஃபுட்டி’கள் உருவான பிறகு அதெல்லாம் மாறிவிட்டது. ஏனெனில், ருசியான உணவு கிடைக்கும் இடங்கள் எங்கு இருந்தாலும் அங்கு வீடியோ, போன், கேமரா சகிதம் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள், ‘ஃபுட்டி’கள்.
- அங்கு சென்று அந்த உணவு வகையைச் சாப்பிட்டு, சிலாகித்து, அதைப் பற்றிச் சமூக வலைதளங்களில் எழுதித் தீர்ப்பதும், காணொளி வெளியிடுவதுமே இன்றைய ஃபுட்டிகளுக்கான அடிப்படைத் தகுதி. இதனால் ஸ்டார் ஹோட்டல்கள் முதல் சாலையோரக் கையேந்தி பவன் வரை ‘ஃபுட்டி’கள் ருசி பார்க்காத ஹோட்டல்களே இல்லை.
- அந்த ஹோட்டல்களில் சாப்பிட்டுப் பார்த்து, அவற்றைப் படம்பிடித்து, வெட்டி, ஒட்டி காணொளிகளாக யூடியூபிலும் பதிவேற்றிச் சேவை செய்வதுதான் ஃபுட்டிகளுக்கான லட்சணங்களாகிவிட்டன.
- இதன் காரணமாக சோஷியல் மீடியாவில் ஃபுட்டிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. அவர்களுடைய ரிவ்யூக்களும் நம் உள்ளங்கையை வந்தடைகின்றன. இந்த ரிவ்யூக்களைப் பார்த்து குறிப்பிட்ட ஊரில் உள்ள ஹோட்டல்களுக்குச் சென்று ருசிப்போரின் எண்ணிக்கையும் இன்று அதிகரித்தவண்ணம் உள்ளது.
- அந்த அளவுக்கு விதவிதமான உணவு வகைகள் பற்றி ரிவ்யூக்கள் அளிக்கும் ‘ஃபுட்டி’களின் சேவை மக்களோடு நெருக்கமாகியிருக்கிறது. ஆனால், பெரும்பாலான ஃபுட்டிகள் உணவு வகைகள் பற்றிய உண்மையைப் பேசுவதில்லை என்கிற குறைபாடும் இருக்கவே செய்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 10 – 2024)