TNPSC Thervupettagam

இது ‘அவர்கள்’ குழந்தைகளுக்கான நியாயம்

November 16 , 2022 633 days 389 0
  • இடஒதுக்கீடு என்றாலே, இந்து மேட்டுக்குடிகளுக்குக் காலங்காலமாக தொடர்ந்துவரும் வெறுப்பும் பொறாமையும் இப்போது சட்டப்பூர்வ ‘தேவப் பிரசன்னமாக’வே – ஆம், பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பின் வடிவில் – வந்துவிட்டது. இது எதிர்காலத்தில் சமூகத்தில் பாரதூர விளைவுகளையே நிச்சயம் ஏற்படுத்தும்.
  • இடஒதுக்கீடு என்பது சமுதாயப் பின்தங்கிய நிலையைச் சரி செய்வதற்கான ‘ஏற்புடைய உடன்பாடு’ (பரிகார நடவடிக்கை) என்று முற்போக்கான வகையில் நீதித் துறை இதுவரை கடைப்பிடித்துவந்த ‘கருத்தொற்றுமை அணுகுமுறை’ முடிவுக்கு வந்துவிட்டது என்பதையே இப்போதையத் தீர்ப்பு தெரிவிக்கிறது. காலங்காலமாக சாதி அடிப்படையில், சமூக அசமத்துவத்துக்கு வித்திட்ட செயல்களைச் சரி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கவும் கல்வி – வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் முறை சரியானதே என்று, தங்களுடைய உள்ளார்ந்த உணர்வுகளையும் மீறி இதுவரை தீர்ப்பளித்துவந்தனர் முற்பட்ட சாதி மேட்டுக்குடிகள்.
  • இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக ‘ஜன ஹித் அபியான்’ தொடர்ந்த 10% இடஒதுக்கீட்டு எதிர்ப்பு வழக்கில், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பு, இதுவரை நீதித் துறை கடைப்பிடித்துவந்த அணுகுமுறையிலிருந்து பெருமளவுக்கு மாறியிருப்பதுடன் மிகவும் பிற்போக்காகவும் இருக்கிறது; அரசமைப்புச் சட்டக் கொள்கைகளில் இதுவரை பெரும்போக்கில் கடைப்பிடித்துவந்த பகுத்தறிவுள்ள அணுகுமுறை கைவிடப்பட்டுள்ளது; காலங்காலமாகச் சலுகைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு இயல்பாகவே பொதுப் புத்தியில் உறைந்துபோயிருந்த பாரபட்சமான எண்ணங்களின் வெளிப்பாடாகவே தீர்ப்பு அமைந்திருக்கிறது.
  • சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான வழக்கில் வெளிப்படுத்திய அதே தன்மையை இப்போதும் காட்டியுள்ளனர். இன்றைய ஆட்சியாளர்களுடைய சித்தாந்தங்களுடன் ஒத்திசைவாக இருக்கும் நீதிபதிகள், தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலுக்கேற்ற மனநிலையிலேயே இந்த வழக்கிலும் லஜ்ஜையின்றித் தீர்ப்பளித்துள்ளனர். மக்களுடைய நன்மைக்கான (ஜன ஹித்) அமைப்பு தாக்கல் செய்த வழக்கில், தங்களுடைய ‘ஜனம்’ யார், அவர்களுக்கு எது ‘ஹிதம்’ என்று தீர்ப்பின் மூலம் திரித்துக்காட்டியதற்காக - நீதிபதிகளும் அவர்களுடைய தீர்ப்பும் காலங்காலமாக இனி பேசப்படும்.

துல்லியமற்ற நடவடிக்கைகள் அநீதியானவை

  • எந்தவித இடஒதுக்கீட்டு திட்டங்களின் கீழும் வராத பொதுப் பிரிவினரில், பொருளாதாரரீதியாக நலிவுற்ற ஏழைகளுக்கு (இடபிள்யுஎஸ்-EWS) கல்வி – வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு அளிக்கும் ‘103வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் – 2019’ செல்லுமா செல்லாதா என்பதை மட்டும் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ‘பொருளாதார அடிப்படையிலும் இடஒதுக்கீடு வழங்கலாம்’ என்பதில் இந்த அரசமைப்புச் சட்ட அமர்வு ஒருமனதாக ஒத்துப்போயிருக்கிறது.
  • தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய சமுதாயங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்துமா என்பதில்தான் ஐந்து நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. ‘ஒரு பிரிவைச் சேர்ந்த ஏழைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கி, இதர பிரிவுகளைச் சேர்ந்த ஏழைகளை விலக்கிவைக்கும் கொள்கை தவறானது’ என்று மட்டுமே இந்த வழக்கில் மாற்றுக்கருத்தைத் தெரிவித்துள்ள நீதிபதி ரவீந்திர பட்டும் அவர் கருத்தை ஆமோதித்துள்ள தலைமை நீதிபதி யு.யு.லலித்தும் நிராகரித்துள்ளனர்.
  • பெரும்பான்மையாக உள்ள மற்ற மூன்று நீதிபதிகளும் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கெனவே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதால் அவர்களைத் தனியாகப் பிரிப்பதில் தவறில்லை என்று கருதியுள்ளனர். இது ஒதுக்கித்தள்ளப்பட வேண்டிய நுணுக்கமான சிறு விஷயம் அல்ல. உடன்பாட்டு நடவடிக்கைகள் மூலம், சமூக நீதி வழங்கும் நீதித் துறை நடவடிக்கைகளின் மையத்தையே பிளப்பது போன்ற, கருத்து விளக்கமாகும்.
  • அரசமைப்புச் சட்டம் உறுதி அளிக்கும் சமத்துவக் கொள்கை வெற்றிபெற, இதுவரை கல்வி – பொருளாதாரரீதியாக வளர முடியாமல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் முன்னேற இடஒதுக்கீட்டுக் கொள்கை என்கிற உடன்பாடான நடவடிக்கைகள், அல்லது இழந்ததை ஈடு செய்யும் பரிகார நடவடிக்கைகள் சரியானவை என்றுதான் என்.எம்.தாமஸ் (1976), இந்திரா சஹானி (1992) ஆகியோர் வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்துள்ளன. அதேசமயம், முன்னேற்றுவதற்கான இறுதி உத்தியாக உள்ள இந்த இடஒதுக்கீட்டையும் வழங்க கடுமையான முன் நிபந்தனைகளை அவை விதித்துள்ளன.

கடும் நிபந்தனைகள்

  • முதலாவதாக, இடஒதுக்கீட்டின் மூலம் பயனடையப் போகிறவர்கள் யார் என்பது முறையான வாதப்படியும், கூர்மையான விவரங்களுடனும் அடையாளம் காணப்பட வேண்டும் என்பது ஆகும்.
  • இரண்டாவதாக, அப்படி அடையாளம் காணப்படும் சமுதாயம் முன்னேற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது – கல்வி, வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமலிருக்கிறது என்பதும் வலிமையான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும்.
  • மூன்றாவதாக, யாருக்கு இடங்களை ஒதுக்குவதாக இருந்தாலும், மொத்த இடஒதுக்கீடு அதிகபட்சம் 50% என்ற அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • நாலாவதாக, இடஒதுக்கீடு காரணமாக, பொதுவெளியில் ‘தகுதி’ – ‘திறமை’ ஆகியவற்றுக்கு பாதிப்பு நேர்ந்துவிடக் கூடாது, அப்படி நேருவதை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளவே முடியாது!
  • பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இப்போதைய இடஒதுக்கீட்டை அனுமதிக்கும்போது, உச்ச நீதிமன்றம் இந்த நான்கு நிபந்தனைகளையும் கைவிட்டிருப்பதுதான் ‘அசாதாரணமானதாக’ இருக்கிறது. மேல்தட்டு மக்களுடைய குழந்தைகளின் நலனைக் காப்பதற்காக கடுமையான நிபந்தனைகளை விதித்து ‘பிற சமுதாய மக்களுக்கு’ இடஒதுக்கீட்டைக் கடுமையாக்கினர், தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு என்று வரும்போது, இந்த நிபந்தனைகளையே கைவிட்டுவிட்டனர்!

எஞ்சி நிற்கும் கேள்விகள்

  • சாதிரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் வாழும் மக்களுக்கான இடஒதுக்கீடு என்ற உடன்பாடான நடவடிக்கையை, சாதிரீதியில் பாதிப்புகளையே அடையாத சமூகங்களுக்கும் விரிவுபடுத்துவதை ஐந்து நீதிபதிகளும் சரியென்றே ஏற்றுக்கொண்டுள்ளனர்! குழந்தைகளின் பெற்றோரால் தரமான பள்ளிக்கூடங்களில் சேர்க்க முடியவில்லை, நிறையச் செலவழித்து படிப்புக்கான பயிற்சிகளை அளிக்க முடியவில்லை என்றால் உயர்கல்வியில் சேர்வதிலும் நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதிலும் குழந்தைகள் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்திக்கிறார்கள்; இந்த இழப்புக்கு அவர்களுக்குப் பரிகாரம் தேவை, எனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சாதிக் குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது! இதில் கேள்வி என்னவென்றால், தரமான பள்ளியில் சேர்ந்து படிக்க முடியவில்லை என்பதையோ, நல்ல பயிற்றுவிப்புகளைக் கூடுதல் செலவு செய்து பெற முடியாமல் பின்னடைவைச் சந்திப்பதையோ எப்படி விளக்குவது, நிரூபிப்பது? இதற்கு எப்படி ஈடு செய்வது?
  • ஐந்து நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் இந்த அம்சங்களை நுணுகிப்பார்த்து பதில் பெற வேண்டும் என்றெல்லாம் கவலைப்படவே இல்லை. சமூக நீதிக்கு இணையானது பொருளாதார அடிப்படையிலான நீதியும் என்றே அவர்கள் நமக்கு உணர்த்துகின்றனர். அதேசமயம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை என்பதை இடஒதுக்கீட்டுக்கான தகுதியாகக் கொள்வதில் உள்ள அடிப்படையான முரண்பாடுகள் குறித்து ‘அமர்வு’ கவலைப்படவே இல்லை.
  • சாதிரீதியாக கொடுமையாக, சமூக அமைப்பில் அழுத்தப்பட்டு, கல்வி - வேலைவாய்ப்பில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலைமைக்கு, ‘பொருளாதார அடிப்படையிலான பின்தங்கிய நிலைமை’ எப்படி சமமாகிவிடும் என்பதை ‘அமர்வு’ விளக்கவில்லை. பொருளாதாரரீதியாக பின்தங்குவது என்பது நிரந்தரமானதும் அல்ல என்பதும் கருத்தில் கொள்ளப்படவில்லை.

மோசடிக்கே வழிவகுக்கும்

  • சாதிரீதியிலான இடஒதுக்கீடு என்று வரும்போது, இடஒதுக்கீட்டின் பலனைப் பெறப் போகிறவர்கள், சமுதாயரீதியாக ஒன்றுபோல தொடர்ந்து பொருளாதாரரீதியில் பின்னடைவைச் சந்தித்தவர்கள் என்பதற்கு வலுவான ஆதாரங்களைக் காட்டுமாறு கோரிய நீதித் துறை, இப்போது பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு கோரும் முற்பட்ட சாதியினருக்கு அப்படிப்பட்ட ஆதாரங்களைக் காட்டுமாறு கேட்கவே இல்லை.
  • இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறாதவர்களில் ஏழைகள் அனைவருமே ஒரே மாதிரியானவர்கள் அல்லது ஒரே சமுதாயத்தினர் என்று அடையாளம் காட்ட வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதித் துறை கைவிட்டுவிட்டது. பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்கள் என்றால் அவர்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள். அப்படி அடையாளம் காணப்பட முடியாதவர்கள்தான் அந்த ஏழைகள் என்றால் இடஒதுக்கீடு தேவைப்படுகிறவர்களுக்கு அது கிடைக்காமலும், தகுதி குறைவானவர்களுக்கு அது கிடைக்கவும் இந்த அனுமதி வழியேற்படுத்தித் தந்துவிடும்.
  • இடஒதுக்கீடு தேவைப்படும் நபர் யார் என்பதே திட்டவட்டமாக விவரிக்கப்படாதபோது, அரிதான கல்வி – வேலைவாய்ப்புகளை முன்னுரிமை அடிப்படையில் அவர் பெறுவதற்கு அனுமதிப்பது குழப்பத்தையே ஏற்படுத்தும். பொருளாதாரரீதியாக பின்னடைவைச் சந்தித்தவர்கள் யார் என்பதற்கு வரையறைகளே நிர்ணயிக்கப்படாமல், ‘தேவைப்படும்போது அதைப் பரிசீலிக்கலாம்’ என்று நீதிபதி மகேஸ்வரி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது வருந்தத்தக்கது.

தகுதிக்கு முழுக்கு!

  • அடுத்து, ஆதாரங்கள் - அல்லது அவை இல்லாத நிலை - குறித்துக் காண்போம். பொதுப் பிரிவினரில் பொருளாதாரரீதியில் நலிவுற்ற பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக எந்த நீதிபதியும் கேட்காத அடிப்படைக் கேள்விகள் என்னவென்று பார்ப்போம்.
  • மொத்த மக்கள்தொகையில், பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவினரின் எண்ணிக்கை எவ்வளவு? சைனோ அறிக்கையைப் பரிசீலிப்போம். மொத்த மக்கள்தொகையில் வெறும் 5.4% - இவ்வளவு குறைவாக உள்ளவர்களுக்கு எந்த அடிப்படையில் கல்வி – வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு?
  • அனுபவ அடிப்படையிலும் நடைமுறை சார்ந்தும் இடஒதுக்கீட்டுக்காக நீதித் துறை இதுவரை வலியுறுத்திவந்த அடிப்படைத் தேவைகள் ‘எம்.நாகராஜ் எதிர் ஒன்றிய அரசு’ வழக்கில் 2008ஆம் ஆண்டு தீர்ப்புக்குப் பிறகு தெள்ளத் தெளிவானது. அப்படியிருந்தும் உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கில், 10% இடஒதுக்கீடு பெறப்போகும் பிரிவின் இப்போதைய மக்கள்தொகை என்ன என்பதையோ, எந்த அளவுக்கு அது பொருளாதாரரீதியாக ஆதரவற்ற நிலையில் இருக்கிறது என்பதையோ ஆதாரங்களுடன் காட்டுமாறு கேட்கவேயில்லை.

இப்போது தரம் நாசமாகிவிடாதா?

  • இப்படியொரு இடஒதுக்கீடு வழங்குவதால் கல்வி – வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் ‘தரம்’ என்ன பாதிப்புக்கு உள்ளாகும், சமூகத்தில் ‘சமத்துவம்’ என்ற நிலைக்கு என்ன நேரும் என்பது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே கைவிடப்பட்டிருப்பது வியப்பாக இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் 2019இல் கொண்டுவரப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட கள ஆய்வில் 445 உயர்கல்வி நிறுவனங்களில் 28%க்கும் அதிகமான மாணவர்கள் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது.
  • இன்னும் பார்க்கப்போனால், இடஒதுக்கீடுகள் மூலம் நிரப்பப்படும் மொத்த இடங்கள் 50%க்கும் மேல் போகக் கூடாது என்ற நிபந்தனை ‘உற்சாகத்தோடு’ தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் ஏராளமான சமூக சமத்துவக் கொள்கைகளில் - உள்ளாட்சி மன்றங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு, அட்டவணைச் சமூகத்தவர் அதிகம் வாழும் பகுதிகளில் அவர்களுடைய கல்வி முன்னேற்றத்துக்கு இடங்களை அதிகப்படுத்தும் முயற்சி, விவசாயத்தில் ஈடுபடும் சாதியினருக்கு இடஒதுக்கீடு, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சிறுபான்மைச் சமூகங்கள் ஆகியோருக்கு நியாயம் வழங்க முற்பட்டபோதெல்லாம் – இடஒதுக்கீடு 50%க்கு மேல் போகவே கூடாது என்று கண்டிப்புடன் நிராகரித்தது நீதித் துறை.
  • நீதித் துறையின் இரட்டை நிலையை இப்போதைய தீர்ப்பு அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. ‘ஏற்கெனவே உள்ள சட்ட உட்கூறுகளின்படியான இடஒதுக்கீடுகளுக்கு மட்டுமே உச்சபட்சம் என்ற வரம்பு பொருந்தும்’ என்ற போலியான சமாதானம், அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளைக் காப்பதில் நீதித் துறை எந்த அளவுக்கு நீர்த்துப்போய்விட்டது என்பதையே காட்டுகிறது.
  • இடஒதுக்கீடு என்று பேசும்போதெல்லாம் ‘தகுதி - திறமை என்னாவது?’ என்று நச்சரித்துக்கொண்டே வந்தனர்; அதைப்பற்றி இப்போது வாயே திறக்கவில்லை. இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் பொதுப் பிரிவு ஏழைகளுக்கான ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்கள், ‘ஓபிசி’ பிரிவு மதிப்பெண்களைவிடக் குறைவு என்பது ஆதாரப்பூர்வமாகவே தெரிந்துவிட்டது. (அதாவது தகுதியும் திறமையும் குறைவாக இருந்தாலும் முற்பட்ட சாதி ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு!) தங்களுடைய சமூகத்துக் குழந்தைகளின் கல்வி – வேலைவாய்ப்புக்கு போட்டி என்று வந்தபோது தகுதி – திறமை குறித்துக் கவலைப்பட்டவர்கள், நன்கொடைக் கட்டணம் கொடுத்து உள்நாட்டில் படிக்கும் தங்கள் குழந்தைகள் விஷயத்திலும் அல்லது அயல்நாடுகளிலிருந்து போலியான பட்டங்களை வாங்கிவரும் வேளைகளிலும் - தகுதி – திறமை குறித்துக் கவலைப்படவே இல்லை.
  • நீதிபதி பேலா திரிவேதியின் தீர்ப்பில், ‘இடஒதுக்கீட்டுக் கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது; ‘இடஒதுக்கீடுகளுக்குக் கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும், நாட்டின் நலன் கருதி சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், தோழமை ஆகிய லட்சியங்களின் அடிப்படையில் மாற்றங்களுக்குத் தயாராக வேண்டும்’ என்று இதோபதேசம் செய்யப்பட்டுள்ளது. ‘ஆங்கிலோ – இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு முடிவுக்கு வந்துவிட்டது, பட்டியல் இனத்தவர் – பழங்குடிகளுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலுமான இடஒதுக்கீடு 2030இல் காலாவதி ஆகிறது’ என்று அரசமைப்புச் சட்டத்தின் 104வது திருத்தத்தையும் திரிவேதி நினைவுபடுத்தியுள்ளார்.
  • நாடு சுதந்திரம் அடைந்தபோது சாதிகளுக்கு இடையில் இருந்த இடைவெளி, இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் சாதியற்ற சமூகமாக நாம் மாற வேண்டும் என்றும் நீதிபதி பர்திவாலா குறிப்பிட்டிருக்கிறார். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்காக கண்டனத் தீர்மானம் மூலம் பதவியிழக்க வேண்டிய பர்திவாலா நூலிழையில் தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இடஒதுக்கீடு என்பது ஆதிக்கவாதிகளின் நலனுக்காக என்று மாறிவிடாமலிருக்க காலவரம்பு நிர்ணயித்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் நகைப்பூட்டுகிற யோசனையைத் தெரிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டு விவகாரத்தில் முற்பட்ட சாதியினரின் இரட்டைப் போக்கை இந்தக் கருத்துகள் அப்பட்டமாகத் தோலுரிக்கின்றன.

சமூக நீதி முறையே சீர்குலையும்

  • பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழைகளுக்கு இடங்களை ஒதுக்க, உலகளாவிய பொருளாதார அளவுகோல்களைக் கைவிடுவதன் மூலம், சமூகங்களுக்கு இடையிலான கல்வி – சமூக அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளைப் போக்க கொண்டுவரப்பட்ட சமூக நீதி முறையே சீர்குலைந்துவிடும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலக் கட்சிகளும் வெகுஜனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகக் குழுக்களும் இந்தத் தீர்ப்புகளுக்குத் தெரிவித்துள்ள கண்டனங்களும் எதிர்ப்புகளும், இந்தத் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யக் கோரும் வழக்குகளும் அதிருப்திகளும் மேலும் அதிகரிக்கும் என்பதையே உணர்த்துகின்றன.
  • சாதி அடிப்படையில் மக்கள்தொகையைக் கணக்கிட வேண்டும், இடஒதுக்கீட்டு உச்ச வரம்பு 50% என்பதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இனி வலுக்கும். இந்திரா சஹானி வழக்கில் கருத்தொற்றுமை அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்பெல்லாம் காலாவதியாகிவிட்டது. நேர்மையான, புத்திசாலித்தனமான முடிவை அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனான நீதித் துறை எடுக்கும் வரையில் இனி கருத்து மோதல்களும் வழக்காடல்களும் அதிகரிக்கும்.

9 நீதிபதிகளின் ராஜதந்திரம்

  • இடஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்தபோது முன்னேறிய சமூகத்தினர் நடத்திய எதிர்ப்புப் போராட்ட காலத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அரசமைப்புச் சட்ட விவகாரத்தில் காட்டிய ராஜதந்திரம் நினைவுக்கு வருகிறது. சமூக நீதியை வழங்கும் நீதித் துறை நடவடிக்கைகளின்போது, சில நீதிபதிகள் எதிர்த்து தீர்ப்பு வழங்கும் மரபும் தொடர்கிறது; டி.தேவதாசன் வழக்கில் நீதிபதி சுப்பா ராவ் (1964), என்.எம்.தாமஸ் வழக்கில் பெரும்பான்மையினர் (1976), சமீபத்தில் பி.கே.பவித்ரா (2019), சௌரவ் யாதவ் (2020), நீல் ஆரிலியோ நூன்ஸ் (2022) என்று பல வழக்குகளிலும் இதே கதைதான்.
  • முற்பட்ட சாதி நீதிபதிகளின் உள்ளுணர்வு இடஒதுக்கீட்டுக்கு எதிரானவைதான்; இருந்தாலும் சாதி அடிப்படையிலான நடைமுறைகளால் அசமத்துவமும் ஒடுக்குமுறைகளும் நடந்துவருவதை - உள்ளுக்குள் குமுறிக்கொண்டே – காலம் கடந்தாவது ஏற்றாக வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. முற்பட்ட சாதியினர் இப்போது அரசியல்ரீதியாக ஒன்றுபட்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டதால் அவர்களுடைய மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதையே இத்தீர்ப்பு காட்டுகிறது. எனவே ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்ட சமூக சமத்துவப் பாதுகாப்புகளையும் பறித்துவிடத் துடிக்கின்றனர். இடஒதுக்கீட்டால் தாங்கள் வெகுவாக ஒடுக்கப்பட்டுவிட்டதாகவும் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் பல ஆண்டுகளாகவே முற்பட்ட சாதி இந்துக்கள் பேசிவருகின்றனர்.
  • சலுகைகளையும் வாய்ப்புகளையும் காலம்காலமாக அனுபவித்து வந்தவர்களின் சமூக கண்ணோட்டத்தையே இப்போதைய தீர்ப்பு, சட்டப்பூர்வ தேவ பிரசன்னமாக வழங்கியிருக்கிறது. சலுகைகளை அனுபவித்தவர்களின் இந்த எதிர்ப்புரட்சி, பாரதூரமான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும். இது நீதித் துறையின் வடிவத்தையே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும். ‘கொலீஜியம்’ முறைக்கு பலமான எதிர்ப்புகள் கிளம்பும், நீதித் துறையும் சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அனைத்து சமூகங்களுக்கும் அங்கே பிரதிநிதித்துவம் தேவை என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கும்.
  • இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் சாதி பின்னொட்டுகளையும், சித்தாந்த ஈடுபாடுகளையும் பொதுவெளியில் விவாதிக்கத் தொடங்கினால், அல்லது நீதிபதிகளின் பின்புலத்துக்காக அவர்களை விமர்சிக்க நேர்ந்தால் - அதற்கான பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும். வலுவான சமூக ஒற்றுமையையும், அமைதியையும் உருவாக்குவதற்கான நீதித் துறை உறுதிப்பாட்டை, புதிதாக பதவியேற்றிருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்கொள்வார் என்று நம்புவோம்.

நன்றி: அருஞ்சொல் (16 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்