- இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860, இந்திய சாட்சியச் சட்டம் - 1872, குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973 ஆகிய மூன்றும் இந்திய குற்றவியல் சட்டத்தின் மும்முனை அமைப்பாகச் செயல்படுகின்றன. இந்திய தண்டனைச் சட்டத்தின் தந்தை தாமஸ் பாபிங்டன் மெக்காலே, முதலாவது சட்ட ஆணையத்தின் தலைவர். சாட்சியச் சட்டத்தை வகுத்தவர் சர் ஜேம்ஸ் ஃபிட்ஜேம்ஸ் ஸ்டீபன். 1973வது ஆண்டுச் சட்டம் நிறைவேற்றவுடன் 1898லிருந்து நடைமுறையில் இருந்த முதலாவது குற்ற விசாரணைமுறைச் சட்டம் ரத்தாகிவிட்டது.
- இந்த மூன்று சட்டங்களும் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடைபெறும் நாள்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கான நீதியரசர்களும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் (அவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றவியல் வழக்குகளில் வாதாடுகிறவர்கள்) அன்றாடம் இந்தச் சட்டப் புத்தகங்களை வழக்குகளுக்காகப் புரட்டிக்கொண்டே இருக்கின்றனர்.
- ஐபிசி 302 என்றாலே கொலைக் குற்றத்துக்கான தண்டனை என்பது ஒவ்வொரு நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் அத்துப்படி. சாட்சியச் சட்டத்தின் 25வது கூறின்படி காவல் துறை அதிகாரிக்கு முன்னிலையில் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர் அதைச் செய்துவிட்டார் என்று நிரூபித்துவிட முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். எதிர்பார்ப்பு பிணை, பிணை ஆகியவற்றுக்கான சட்டக் கூறுகள் குற்ற விசாரணைமுறைச் சட்டத்தின் 437, 438, 439 என்றும் எல்லோருக்கும் தெரியும். இந்த மூன்று வகைச் சட்டங்களின் பல கூறுகள் எல்லா நீதியரசர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மனப்பாடம்.
நழுவியது சீர்திருத்த வாய்ப்பு
- சட்டங்களைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பது நல்ல யோசனைதான்; ஆனால், சீர்திருத்தம் என்பது ஏற்கெனவே உள்ளவற்றை இடம் மாற்றி எழுதுவதோ, இப்போதுள்ள சட்டக்கூறுகளுக்குப் புதிய எண்களைத் தருவதோ அல்ல. இப்போதைய சூழல்களுக்கும் காலத்துக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் எவற்றைச் சேர்க்க வேண்டும், எவற்றை நீக்க வேண்டும் என்ற சித்தாந்தத் தெளிவு இருக்க வேண்டும்.
- மக்களின் – சமூகத்தின் மாறிவிட்ட விழுமியங்கள், சமூக நடத்தை – விதிமுறைகள், தார்மிகப் பண்புகள், ஆசைகள் ஆகியவற்றுக்கேற்ப சட்டம் இருக்க வேண்டும். நவீனகால குற்றவியல் அணுகுமுறை, குற்ற வழக்குகளின் சட்டவியல், தண்டனை – சிறை நிர்வாகவியல் ஆகியவற்றை எதிரொலிக்கும் வகையில் புதிய சட்டங்களை இயற்றியிருக்க வேண்டும்.
சட்டக்கூறுகள் இடமாற்றம்
- ஆனால், பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்களில் நாம் காண்பது என்ன? இந்த மூன்று மசோதாக்களையும் ஏராளமான சட்ட அறிஞர்கள் தீர ஆராய்ந்துவிட்டார்கள். இந்திய தண்டனைச் சட்டத்தில் ஏற்கெனவே இருந்த சட்டங்கள்தான் 90% முதல் 95% வரை இதில் வெட்டியும் – ஒட்டியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின் 26 அத்தியாயங்களில் 18 அப்படியே புதிய மசோதாவிலும் படி எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. (மூன்று அத்தியாயங்களில் தலா ஒரு சட்டக்கூறு மட்டுமே உள்ளது).
- இந்த மசோதாவில் இந்திய தண்டனைச் சட்டத்தின் மொத்தமுள்ள 511 கூறுகளில் 24 கூறுகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன, 22 கூறுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன, எஞ்சிய சட்டக்கூறுகள் அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளன, ஆனால் எண்கள் மாற்றப்பட்டு, இடம் மாற்றி சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை அப்படியே இந்திய தண்டனைச் சட்டத்துக்குப் புதிய திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம் செய்திருக்க முடியும்.
- சாட்சியச் சட்டம், குற்ற விசாரணைமுறைச் சட்டம் ஆகியவற்றின் சீர்திருத்தங்களும் இப்படியேதான் செய்யப்பட்டுள்ளன. சாட்சியச் சட்டத்தின் 170 கூறுகளும் அப்படியே வெட்டி பிறகு ஒட்டப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 95% கூறுகளை இப்படி வெட்டி பிறகு ஒட்டியுள்ளனர். இப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள முழு ஏற்பாடுகளுமே காலத்தையும் உழைப்பையும் வீணடித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகும். இந்த மசோதாக்கள் இப்படியே நிறைவேற்றப்பட்டால் வேண்டத்தகாத விளைவுகள் பல ஏற்படும். ஆயிரக்கணக்கான நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள், சட்ட ஆசிரியர்கள், சட்ட மாணவர்கள், ஏன் பொதுமக்களேகூட மிகப் பெரிய இன்னல்களுக்கு ஆளாவார்கள். அவர்கள் அனைவருமே சட்டத்தைப் புதிதாகப் படிக்க வேண்டியிருக்கும்.
- இந்த மசோதாக்களில் மிகச் சில, வரவேற்கத்தக்க அம்சங்களும் இருக்கின்றன. அரசு அவற்றை நாடாளுமன்றத்தில் நிச்சயம் பெரிதுபடுத்திப் பேசும். அதனால் கேள்விக்குரிய பிற அம்சங்களை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவற்றில் மிகவும் முக்கியமானவை:
பிற்போக்குத்தனமான ஏற்பாடுகள்
- மரண தண்டனையே கூடாது என்று உலகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையிலும் மரண தண்டனைச் சட்டம் அப்படியே தக்கவைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் ஏழு வழக்குகளில் மட்டும்தான் மரண தண்டனையைச் சரியென்று ஏற்று ஒப்புதல் வழங்கியிருக்கிறது. தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு அவருடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதும் பரோலில்கூட வெளியில் வர முடியாதபடிக்குச் சிறைவாசம் என்பது மிகவும் கடுமையான தண்டனையாகும், அவர் திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பைத் தருவதுமாகும்.
- புதிய சட்ட சீர்திருத்தப்படி, திருமணத்துக்குப் பிந்தைய கூடா நட்பை - கள்ள உறவாகக் கருதும் குற்றச் சட்டம் மீண்டும் இடம்பெறுகிறது. திருமண உறவை மீறிய உடலுறவு என்பது கணவன் – மனைவிக்கு இடையிலான பிரச்சினை. திருமண பந்தத்தை முறியும் வகையிலான கள்ள உறவென்றால் பாதிக்கப்படும் வாழ்க்கைத் துணை, மணவிலக்கு கோரியோ, நஷ்ட ஈடு கேட்டோ வழக்கு தொடுக்கலாம். இதில் அரசு தலையிடுவதற்கு உரிமையே இல்லை. உச்ச நீதிமன்றம் தேவையில்லை என்று தீர்ப்பில் ரத்துசெய்த இந்திய தண்டனைச் சட்டத்தின் கூறு 497 மீண்டும் புதிய மசோதாவில் இடம்பெற்றிருக்கிறது. இது ஆண் – பெண் இருவருக்கும் பொருந்தும்படி கொண்டுவரப்படுகிறது என்பது மட்டுமே புதிது.
- மரண தண்டனையையோ ஆயுள் சிறைத் தண்டனையையோ, தகுந்த காரணங்களைப் பதிவுசெய்யாமலேயே ‘அரசு நிர்வாகம்’ (ஆட்சியில் உள்ளவர்கள்) குறைக்கலாம் என்ற புதிய அம்சம், அரசமைப்புச் சட்டத்தின் 14வது கூறை மீறுவதாகும். தனிமைச் சிறை என்பது மிகவும் கொடூரமான, அபூர்வமான தண்டனையாகும். சில வகை வழக்கு விசாரணைகளின்போது ஊடகங்கள் அவற்றை உடனிருந்து செய்தி சேகரிக்கவும் வெளியிடவும் தடை விதித்திருப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
- பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான சட்டங்கள், சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்திலேயே போதுமான அளவுக்கு இடம்பெற்றுவிட்ட பிறகு புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அவற்றைக் கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை.
- குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்யும் நீதிமன்றங்களில் ‘கூடுதல்’ குற்றவியல் நீதியரசர் பதவிகளை ரத்துசெய்திருப்பது மிகவும் தவறானது, இது குற்றவியல் நீதிபதிகள் தோளில் பணிச் சுமைகளை அதிகமாக்கிவிடும். இது ஏற்கப்பட்டால், இத்தகைய வழக்குகளில் முதல் மேல்முறையீட்டு மனு, நேரடியாக உயர் நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இது உயர் நீதிமன்றங்களுக்குள்ள பணிச் சுமையையும் மேலும் அதிகப்படுத்திவிடும். கைதுசெய்யப்படுகிறவர் வன்செயல்களில் ஈடுபடும் சுபாவம் உள்ளவர் என்றாலோ, காவலர்களின் காவலிலிருந்து தப்பிச் செல்லக்கூடியவர் என்றாலோ மட்டும் கைதுக்குப் பிறகு கைவிலங்கு மாட்ட வேண்டும்.
- ஒருவரைக் கைதுசெய்து காவலில் வைக்க அனுமதி கோரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தும்போது, அவரைக் காவலில் வைப்பது அவசியமா, சட்டம் அனுமதிக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும். புதிய குற்ற விசாரணைமுறைச் சட்டத்தின் 187(2) பிரிவு, கைதானவரை நீதிமன்றக் காவலிலோ, காவல் துறைக் காவலிலோ மட்டுமே வைக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் காவல் துறையினரிடமும் நீதிபதிகளிடமும் ஏற்படுத்துவதைப் போல இருக்கிறது. யாருடைய காவலுமே தேவையில்லை என்ற மூன்றாவது முடிவை பெரும்பாலான மாஜிஸ்திரேட்டுகள் புறக்கணிப்பதை, மறைந்த நீதியரசர் கிருஷ்ண அய்யர் ஒரு வழக்கில் கடிந்துகொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
- விசாரணை அதிகாரி, காணொலி மூலம் தனது தரப்பை எடுத்துக் கூறலாம் என்று புதிய சட்டத் திருத்தத்தின் 254வது கூறு அனுமதிப்பது, ‘அனைவர் முன்னிலையிலும் வழக்கு விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்’ என்ற முதன்மையான கொள்கையையே மீறுகிறது. புதிய மசோதாவானது, ‘பிணை விடுதலைதான் விதி, பிணையல்ல - சிறைவாசம் என்பது விதிவிலக்கு’ என்று வெளிப்படையாக மாற்றத் தவறிவிட்டது. சட்டக்கூறு 482 மிகவும் பிற்போக்கத்தனமானது.
- மெக்காலே, ஜேம்ஸ் ஸ்டீபன் கொண்டுள்ள புகழை அடியோடு வேரறுத்துவிட வேண்டும் என்ற நோக்கில்தான் சட்ட சீர்திருத்தங்களை அரசு கொண்டுவருகிறது. ஆனால், இப்படிப் பெரும்பாலான சட்டங்களை, வாசகங்களைக்கூட மாற்ற முடியாமல் அப்படியே தக்கவைத்துக்கொண்டு எண்களை மாற்றியும் இடங்களை மாற்றியும் சீர்திருத்தம் என்ற பெயரில் செய்திருக்கும் முயற்சியானது, அவர்களுக்குப் பெரும் புகழைச் சேர்ப்பதாகத்தான் முடிந்திருக்கிறது!
நன்றி: அருஞ்சொல் (27 – 11 – 2023)