TNPSC Thervupettagam

இதுதான் சரியான தருணம்!

July 21 , 2020 1641 days 750 0
  • அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானியர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்துக்கு, 12 விமானங்களை இயக்குவதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

  • அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பியக் கூட்டமைப்பும் பாகிஸ்தான் சர்வதேச விமான இயக்கத்தைத் தடை செய்திருக்கிறது.

  • ஏனைய பல விமான நிறுவனங்கள், பாகிஸ்தானிய விமானிகளும், பொறியியல் வல்லுநர்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

  • அவர்களுடைய உரிமம் குறித்த விசாரணைக்குப் பிறகுதான் அவர்களைப் பணியில் தொடர அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து சர்வதேச விமான நிறுவனங்கள் பலவும் முடிவெடுக்க இருக்கின்றன.

உரிமங்கள் பரிசீலிக்கப்படுகின்றன

  • கடந்த மே மாதம், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நடந்த விமான விபத்தில் 97 பேர் உயிரிழந்தனர்.

  • விமானம் விபத்தில் சிக்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை, அதன் விமானிகள் கொவைட்-19 நோய்த் தொற்று குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததாகவும், விமானம் தரையைத் தொடும் நேரத்தில், ஏதோ ஞாபகத்தில் "கியரை' தவறாகப் பிரயோகப்படுத்திவிட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.

  • அந்த விமானிகளின் ஓட்டுநர் உரிமம் போலியானது என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கு விமானிகள்தான் காரணம் என்று விசாரணை நடத்தியவர்கள் தெரிவித்திருப்பது பிரச்னையை மேலும் கடுமையாக்கியிருக்கிறது.

  • பாகிஸ்தான் அரசு, ஏற்கெனவே பதிவேட்டிலுள்ள விமானிகளில் மூன்றில் ஒரு பகுதியினரை, அதாவது 262 பேரை போலி உரிமம் காரணமாக, தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. அவர்களது உரிமங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

போலி ஓட்டுநர் உரிமங்கள்

  • பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மூன்று மிகப்பெரிய விமான விபத்துகள் குறித்த விசாரணைகள், விமானிகள்தான் விபத்துக்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

  • அந்த விமானிகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, கவனக்குறைவாக இருக்கிறார்கள் என்பதும் பலமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

  • அரசு அவசரப்பட்டு முடிவெடுத்து சர்வதேச அளவில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

  • கராச்சி விமான விபத்து குறித்த விசாரணையை அவசரப்பட்டு வெளியிட்டிருக்க வேண்டியதில்லை என்றும், 850-க்கும் அதிகமான பாகிஸ்தான் விமானிகளில் ஒரேயடியாக 262 பேரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டாமென்றும் கூறுகின்றன.

  • ஆனால், சர்வதேச அழுத்தத்தை பாகிஸ்தான் தவிர்த்துவிட முடியாது என்று அரசு தெரிவிக்கிறது.

  • கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம், கடுமையான இழப்பை மட்டுமே எதிர்கொண்டிருக்கிறது.

  • கடந்த ஆண்டு மட்டும் அதன் மொத்த இழப்பு 3.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 28,411 கோடி). வெறும் 30 விமானங்களை மட்டுமே இயக்கும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் 14,000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது.

  • இவையெல்லாம் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கியிருக்கின்றன.

  • பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன விமானிகளின் உரிமம் கேள்விக்குள்ளாகியிருப்பது பாகிஸ்தானுக்கு வெளியேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

  • ஆசியாவில் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் ஏனைய பல நாடுகளிலும்கூட விமானிகளின் போலி ஓட்டுநர் உரிமம் பிரச்னைக்குள்ளாகி இருக்கிறது.

  • புதிய குறைந்த கட்டண விமான சேவைகள் அதிகரித்த நிலையில், எல்லா நாடுகளிலுமே விமானிகளுக்கான தேவை கடுமையாக உயர்ந்தது.

  • ஆங்காங்கே பல தனியார் விமான ஓட்டுநர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதன் விளைவாக, போலி ஓட்டுநர் உரிமங்கள் வெளிவரத் தொடங்கின.

விமானிகளுக்கான தகுதி தேர்வு

  • இந்தோனேஷியா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் நடத்தப்படும் விமான ஓட்டுநர் பயிற்சிக் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து மிக அதிகக் கட்டணங்களை வசூலிக்கின்றன.

  • ஆனால், விமானம் ஓட்டும் பயிற்சி மிகக் குறைந்த மணி நேரங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. உரிமம் வழங்கும்போது நிறைய நேரம் விமானம் ஓட்டிய பயிற்சி இருப்பதாகப் போலிச் சான்றிதழ் வழங்கப்படுவதால், ஆசியாவிலிருந்து வரும் விமானிகள் என்றாலே சர்வதேச அளவில் மிகவும் கவனமாகத்தான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

  • இந்தியாவிலும்கூட பல குற்றச்சாட்டுகள் எழாமல் இல்லை.

  • 2011-இல் முறையாக விமானம் ஓட்டிய அனுபவம் இல்லாத பல நூறு விமானிகள் தனியார் விமானங்களில் பணிக்குச் சேர்ந்திருப்பது தெரியவந்தது.

  • எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் அவர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருந்தனர். உடனடியாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தியது.

  • தீவிரமான தேர்வுகளுக்குப் பிறகு, மருத்துவப் பரிசோதனை, மன அழுத்தம் இல்லாமை ஆகியவை உறுதி செய்யப்பட்டன.

  • குறைந்தது 200 மணி நேரமாவது ஓட்டுநர் பயிற்சி மேற்கொண்டவர்கள் மட்டுமே சிவில் விமான போக்குவரத்து ஆணையத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

  • தேர்வில் 70% க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

  • கொவைட்-19 காரணமாக விமான சேவை முடங்கியிருக்கும் இந்த நிலையில், இந்திய விமானிகள் அனைவருக்கும் தகுதிகாண் தேர்வு நடத்தப்பட்டு, அவர்களுடைய தகுதி மறு உறுதி செய்யப்பட வேண்டும்.

  • அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாமும் பாகிஸ்தானைப்போல உலக நாடுகளின் ஏளனத்துக்கு ஆளாகிவிடக் கூடாது!

நன்றி: தினமணி (21-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்