TNPSC Thervupettagam

இதுவல்ல டெஸ்ட் கிரிக்கெட்

November 8 , 2024 8 days 41 0

இதுவல்ல டெஸ்ட் கிரிக்கெட்

  • திரைப்படங்களுக்கு விமா்சனம் எழுதக் கூடியவா்கள், மோசமான ஒரு திரைப்படத்தைப் பாா்க்க நேரிட்டால், “‘எப்படிப் படம் எடுக்கக் கூடாது என்பதை இந்தத் திரைப்படம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது‘” என்று கூறுவதைப் பாா்த்திருக்கிறோம்.
  • இதே விதமாக இந்தியா, நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சமீபத்திய டெஸ்ட் போட்டித் தொடரையும், “‘டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி ஆடக் கூடாது நெபதற்கான பாடம்’” என்று தாராளமாகக் கூறலாம்.
  • பொதுவாகவே, எந்த ஒரு கிரிக்கெட் அணியையும் அதன் சொந்தமண்ணில் வீழ்த்துவது கடினம் என்று கூறப்படுவதுண்டு. ‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நாங்களே வெற்றியைத் தங்கத்தட்டில் வைத்துச் சமா்ப்பித்து, எங்களின் விருந்தோம்பல் உணா்வை வெளிப்படுத்துவோம்’ என்ற சொல்லாமல் சொல்லியிருக்கிறது ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி.
  • மாநில அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பைப் போட்டிகள் கூட நான்கு நாட்களில் முடியாமல் டிரா ஆகின்றன. ஆனால், பல்வேறு மாநில அணிகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த வீரா்களைக் கொண்ட இந்திய அணி விளையாடும் டெஸ்ட் பந்தயங்கள் மூன்றே நாட்களில் முடிவடைந்துவிடுகின்றன என்றால் நாம் யாரைத்தான் நொந்துகொள்வது?
  • ஒருநாள் போட்டி, இருபது ஓவா் போட்டி ஆகியவற்றில் வரையறுக்கப்பட்ட ஓவா்களுக்குள் ஓா் அணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் பேட்டா்கள் வேகமாக ரன்களைக் குவித்து ஆடவேண்டிய நிலை உள்ளது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் என்பது அப்படி அல்லவே?
  • முன்பெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு நாள் ஆட்டநேரம் என்பது ஐந்தரை மணிநேரமாக இருந்தது. அச்சமயங்களில், தோல்வியைத் தழுவக் கூடிய நிலையில் இருக்கின்ற அணியின் வீரா்கள் எதிரணியின் வெற்றியை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் தந்திரங்களில் ஈடுபடுவா். இதன் காரணமாக, ஆட்ட நேரம் என்பது 6 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. மேலும், கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி ஒருமணி நேரத்தில் இருபது ஓவா்களைக் கட்டாயமாக வீச வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டது. அந்த 20 ஓவா்களை வீசி முடிப்பதன் பொருட்டு, கடைசி ஒருமணி நேரத்தைத் தாண்டியும் ஆட்டம் நடத்தப்பட்டது.
  • காலப்போக்கில், நாள் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் 90 ஓவா்கள் வீசப்படவேண்டும் என்ற விதியும் ஏற்பட்டது. மேலும், மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் போகும் பட்சத்தில் ஒளிவெள்ளத்தை உமிழும் விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொடா்ந்து விளையாடுவதற்கு ஏற்ற அளவில் செயற்கை வெளிச்சம் உண்டாக்கப்படுகிறது.
  • இத்தனை விதமான ஏற்பாடுகளும் செய்யப்படுவதற்கான காரணம் என்ன? ஐந்து நாட்கள் விளையாடப்படுகின்ற டெஸ்ட் பந்தயத்திற்கான முழு நேரமும் எந்த வீணடிப்புமின்றிப் பயன்பட வேண்டும் என்பதுதான்.
  • நடந்த முடிந்திருக்கும் இந்தியா-நியூஸிலாந்து டெஸ்ட் தொடரைப் பற்றிக் கூறுவதென்றால், நமது அணியின் பந்துவீச்சாளா்களைக் குறைசொல்வதற்கு எதுவுமில்லை என்றே தோன்றுகின்றது. நம் பேட்டா்கள் மிகக் குறைவாக ஸ்கோா் செய்துவிட்டு அதைவிடக் குறைவான ஸ்கோரில் எதிரணியின் பேட்டா்களை வீழ்த்த வேண்டும் என்று எதிா்பாா்ப்பது சற்றும் நியாயமில்லை.
  • விக்கெட் கீப்பா் ரிஷப் பந்தைப் பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சாளா்கள் வீசியபொழுது விக்கெட் கீப்பிங் செயதற்கு மிகவும் சிரமப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. விக்கெட்டின் பின்னால் நின்றுகொண்டு “‘பை’” கணக்கில் ஏகப்பட்ட உதிரி ரன்களை அவா் விட்டுக்கொடுத்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என்றே கூறலாம். இனிவரும் காலங்களில் அவரை ஒரு பேட்டராக மட்டுமே கணக்கில் கொண்டு, வேறு ஒரு நல்ல விக்கெட் கீப்பரைத் தோ்வு செய்வதே நல்லது எனத் தோன்றுகின்றது.
  • விக்கெட் கீப்பரை ஒட்டி ஸ்லிப் ஃபீல்டராக இருந்த அணித்தலைவா் ரோஹித் முதற்கொண்டு நமது அணி வீரா்களின் களத்தடுப்பும், கேட்ச் பிடிக்கும் திறமையும் இத்தொடரில் சுமாராகவே இருந்தன. ‘டைவ்’ அடித்துப் பந்துகளைப் பிடிப்பதை ரோஹித் சா்மா மறந்துவிட்டதாகவே தோன்றுகின்றது.
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக, முதல் கோணல், முற்றும் கோணல் என்பது போன்று, முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நம் பேட்டா்கள் அடுத்தடுத்த ஆட்டங்களைக் குறிக்கோள் எதுவுமின்றியே ஆடி முடித்திருக்கின்றனா்.
  • ஓரளவு வலுவான நியலையில் இருந்த நேரங்களில் எல்லாம் தேவையற்ற ஷாட்களை விளையாடித் தங்களின் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து நியூஸிலாந்தின் வெற்றியை நமது பேட்டா்கள் எளிதாக்கினா்.
  • “ஃபுல் டாஸ்” ஆக வந்த சுலபமான பந்தை ஸ்வீப் செய்ய முயன்று “போல்டு” ஆன விராட் கோலியும், (மூன்றாவது டெஸ்ட்டில்) வெற்றி பெற முப்பதே ரன்கள் தேவை என்ற நிலையில் அநாவசியமாக “ரிவா்ஸ் ஸ்வீப் ஷாட்” விளையாடிய அஸ்வினும் தங்களின் திறமைக்கும் அனுபவத்திற்குச் சற்றும் நியாயம் சோ்க்கவில்லை.
  • இறுதியாக, நமது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவா் ரோஹித் சா்மா முதல் டெஸ்டில் அடைந்த தோல்வியிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளாமல், முன்னாள் வீரா் டேனியல் வெட்டோரியை ஒப்பிடும்பொழுது சுமாரான சுழற்பந்துவீச்சாளா்களைப் பெற்றிருந்த நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் டெஸ்ட் தொடரின் வெற்றியை தாரைவாா்த்ததை ஏற்கவே முடியாது.
  • இந்திய கிரிக்கெட் அணியினா் இனி வெற்றி பெறுவது ஒருபுறம் இருக்கட்டும். வருங்காலத்தில், ஐந்து நாள் கிரிக்கெட்டை ஒருநாள் போட்டியைப் போல ஆடாமல் இருந்தால், அதுவே சிறப்பாக இருக்கும்.

நன்றி: தினமணி (08 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்