நினைவில் கொள்ள வேண்டும்
- தொலைநோக்குப் பார்வையும், சர்வதேசக் கண்ணோட்டமும் கொண்ட பல தலைவர்கள் கடந்த நூற்றாண்டில் இருந்தனர். இந்தியாவில் மகாத்மா காந்தியில் தொடங்கி, உலகின் பல நாடுகளிலும் தேச நலனைக் கடந்து உலக நலனையும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மையப்படுத்திய சிந்தனை அவர்களுக்கு இருந்தது.
- இரண்டு உலக யுத்தங்களையும், அணு ஆயுதப் பரவலையும் சந்தித்தது என்றாலும், இன்னொரு உலக யுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கும், அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகளை அந்தத் தலைவர்கள் முன்னெடுத்தார்கள்.
- அதனால்தான், கடந்த நூற்றாண்டு மனிதகுல வரலாற்றில் அதுவரை இல்லாத வளர்ச்சியைக் காண முடிந்தது.
- அமெரிக்காவின் பொது நலத்தில் சுயநலம் சார்ந்திருந்தது என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அந்த சுயநலத்தில் பல சமரசங்களையும் அது செய்து கொண்டது.
- சீனாவுடனான நட்புறவை அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் ஏற்படுத்திக் கொண்டதும், சோவியத் யூனியனின் அதிபர் கோர்பசேவுடன் அதிபர் ரொனால்ட் ரீகன் கைகோத்ததும் சர்வதேச உறவுகளில் பல மாற்றங்களுக்கு வழிகோலின என்பதை நாம் மறந்துவிட முடியாது.
இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்
- இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துவரும் முடிவுகள் மனித இனத்துக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் வருங்காலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
- அடுத்த தலைமுறை குறித்துச் சிந்திக்க வேண்டிய அமெரிக்க அதிபர், அடுத்து நடைபெறஇருக்கும் அதிபர் தேர்தல் குறித்து மட்டுமே சிந்திக்கும் வினோதம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
- அவரின் முடிவுகள் அமெரிக்காவை மட்டுமே பாதிக்கும் என்றால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், மனித இனத்தின் வருங்காலம் பாதிக்கப்பட இருக்கிறது எனும்போது வாளாவிருக்க முடியவில்லை.
- கொவைட் 19 தீநுண்மித் தொற்றுப் பரவல் குறித்து உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரித்துத் தடுக்கவில்லை என்பது உண்மை.
- சீனாவைக் காப்பாற்ற அதன் தலைவர் எடுத்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. அது குறித்த விசாரணைக்கு சீனாவே உடன்பட்டுவிட்ட நிலையில், அமெரிக்காவில் பரவிவரும் நோய்த்தொற்று குறித்தும், இனக் கலவரம் குறித்தும் கவலைப்பட வேண்டிய அமெரிக்க அதிபர், உலக சுகாதார அமைப்பிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்திருப்பது மனித இனத்துக்கு இழைத்திருக்கும் அநீதி.
- அமெரிக்காவின் பங்களிப்பு இல்லாமல் போனால், உலக சுகாதார அமைப்பு முடங்கிவிடும். இல்லையென்றால், சீனாவின் வழிகாட்டுதலில் அதற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுக்காக நடத்தப்படும் அமைப்பாகச் சுருங்கி விடும்.
- வளர்ச்சி அடையும் நாடுகளில் அந்த அமைப்பின் உதவியுடன் நடைபெறும் எல்லா சுகாதாரப் பணிகளும் தொய்வடைந்து செயல்படாமலேகூட நின்று போகக்கூடும். அது குறித்து அதிபர் டிரம்ப்புக்கு என்ன கவலை?
சீனாவின் அத்துமீறல்
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் அப்படி என்றால், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் செயல்பாடு, அதைவிடக் கண்டனத்துக்குரியது. சீனப் பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது.
- இன்னும்கூட கொவைட் 19 தீநுண்மித் தொற்றிலிருந்து சீனாவின் வூஹான் நகரம் முற்றிலுமாக விடுபடவில்லை. இரண்டாம் சுற்றுப் பரவல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
- இந்தச் சூழலில், ஹாங்காங்கின் தனியதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதைத் தன்னுடன் முழுமையாக இணைக்க முற்பட்டிருக்கிறது சீனா. ஹாங்காங்குக்குத் தனியான அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஜனநாயகம் வழங்குவதாக உறுதி அளித்துத்தான் பிரிட்டனிடமிருந்து அந்தப் பகுதியை சீனா இணைத்துக் கொண்டது.
- ஒருபுறம் ஹாங்காங்கில் அடக்குமுறையை அமல்படுத்தும் சட்டம் என்றால், இந்திய எல்லையான லடாக்கில் ராணுவ அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறது சீனா.
- கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய, தனது பொறுப்பின்மையால் ஒட்டுமொத்த உலகத்தையும் பீதியில் ஆழ்த்தியதற்குப் பரிகாரமாக மருந்து கண்டுபிடிக்க வேண்டிய சீனா, சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது. ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது.
இந்திய-நேபாள உறவில் விரிசல்
- இந்தியாவின் செயல்பாடும் பாராட்டும்படியாக இல்லை. எல்லையோரப் பகுதிகளில் சீனா தனது சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதுபோல இந்தியாவும் மேம்படுத்த முற்பட்டதில் தவறில்லை.
- தார்ச்சுலாவிலிருந்து லிப்போலெக் கணவாய் வரையிலுள்ள சாலையை அமைத்ததுடன் நின்றிருக்கலாம். அந்தச் சாலையை, இப்போதைய சூழலில் பாதுகாப்பு அமைச்சர் ஊடக வெளிச்சத்துடன் திறந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? யாருடைய கவனத்தையும் கவர்ந்திருக்காத ஒரு நிகழ்வு, இப்போது இந்திய-நேபாள உறவில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருப்பதற்கு வாக்குவங்கி அரசியல்தான் காரணம்.
- இந்தியாவைப்போலவே நேபாளமும் பிரச்னையை அரசியலாக்கி, இந்திய எதிர்ப்பில் குளிர்காய நினைக்கிறது.
- ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான மனநிலையைக் கொண்ட சீன ஆதரவாளரான நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஓலி, புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றி அதன்மூலம் இந்தியப் பகுதிகளையும் சொந்தம் கொண்டாடிப் புதிய நேபாள வரைபடத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
- மக்களின் தேசிய உணர்வைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கிறார் நேபாளப் பிரதமர்.
- அடுத்த தலைமுறை குறித்துக் கவலைப்படாமல் அடுத்த தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல் தலைவர்கள்தான் உலக நாடுகள் அனைத்திலும் ஆட்சியில் இருக்கிறார்கள். கொள்ளை நோய்த்தொற்று பரவாமல் என்ன செய்ய செய்யும்?
நன்றி: தினமணி (02-06-2020)