- சிதிலமடைந்த பள்ளிக்கூட வகுப்பறைச் சுவர்மீது வானம் பார்த்த பூமிபோல வீற்றிருக்கிறது அந்தக் கரும்பலகை.
- ஏற்காடு வனப்பகுதியில் உள்ள குண்டூர் பழங்குடியினர் தொடக்கப்பள்ளியின் அந்தக் கரும்பலகை தமிழகப் பழங்குடி மாணவர்களின் கதியைச் சொல்லும்.
- புரியாதவர்கள், 16 ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டிய இடத்தில் 4 ஆசிரியர்கள் மட்டுமே ஆறாம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை உள்ள 260 மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்த பரிதாபத்தை பர்கூர் மலைக் கிராமத்துக்கு கரோனா காலத்துக்கு முன்னால் சென்றிருந்தால் கண்டிருக்கலாம்.
- தனாலென்ன என்பவர்கள் துர்நாற்றம் வீசியபடி நோய்த்தொற்றுப் பரவலுக்கான கிடங்காக இருக்கும் 5 குளியலறைகள், 6 கழிப்பறைகள் கொண்ட நீலகிரி மாவட்டப் பழங்குடி உண்டு, உறைவிட விடுதிக்கு இப்போதும் செல்லலாம்.
- இந்த விடுதியில் தங்கியிருந்த மாணவிகள்கூட இரவு நேரத்திலும் திறந்தவெளியில்தான் சிறுநீர், மலம் கழித்தனர்.
கரோனா காலத்தில் சத்துணவு மறுப்பு!
- கல்வி, சுகாதாரத்தில் தமிழகம் இந்திய அளவில் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்வதாக தமிழகத்தை ஆட்சிசெய்த, செய்யும் திராவிடக் கட்சிகள் பெருமிதம் கொள்கின்றன.
- இந்த முன்னேற்றம் தமிழகத்தின் மக்கள்தொகையில் 1.1 சதவீதத்தினரான பழங்குடியினரில் எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கிறது?
- கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் அரிசி, பருப்பு, முட்டை என எதுவுமே தமிழகத்தின் 18 மாவட்டங்களில் உள்ள 315 பழங்குடி நல உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 27,941 மாணவர்களில் ஒருவருக்குக்கூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
- அதற்கென அப்பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஒதுக்கப்படும் ரூ.900-த்திலும் ஒரு ரூபாய்கூட அவர்களைச் சென்றடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
- ஆசிரியர், வார்டன், விடுதிப் பணியாளர் இடங்களில் 50% நிரப்பப்படாமல் இப்பள்ளிகளும் விடுதிகளும் நிர்க்கதியாக நிற்கின்றன.
- உதாரணத்துக்கு, குழந்தைத் தொழிலாளர் முறையும் குழந்தைத் திருமணமும் தலைவிரித்தாடும் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் சீர்திருத்தம் கொண்டுவர அப்பகுதியைச் சேர்ந்த ‘சுடர்’ அமைப்பு செயல்பட்டுவருகிறது.
- இதன் ஒரு அங்கமான பழங்குடி நல இடைநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தும் தீர்வை 2017-ல் கண்டடைந்தது.
- அன்றைய தேதியில் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை தமிழகம் முழுவதும் 155 அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தியது. அதில் பர்கூர் மலைப் பள்ளி உட்பட 5 பழங்குடிப் பள்ளிகளும் அடக்கம்.
- தரம் உயர்த்தப்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோதும் பழங்குடிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறவில்லை, புதிய ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை, தனிப் பள்ளிக் கட்டிடமும் தரப்படவில்லை, கூடுதல் விடுதி அறைகளும் உருவாக்கப்படவில்லை.
- ஓராண்டு கழித்து மாணவர் சேர்க்கை மட்டுமே நடைபெற்றதே தவிர, வேறெந்த மாற்றமும் நிகழவில்லை.
தேசியக் கல்விக் கொள்கையிலும் இடமில்லை
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் செய்ய ஒன்றிய அரசிடம் நிதி உதவி பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.
- தேசியக் கல்விக் கொள்கையோ இக்குழந்தைகளுக்குத் தொழிற்கல்விப் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய முன்மொழிவைத் தவிர, வேறெதையும் புதிதாக முன்வைக்கவில்லை.
- திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, நிதி ஆயோக் நிறுவப்பட்ட பிறகு ஒன்றிய அரசும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையைக் கைகழுவிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுகிறது.
- தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் கலைப் பாடப் பிரிவு என்பதே கிடையாது.
- கொங்காடை உள்ளிட்ட பகுதிகளில் விடுதிகளே இல்லாத நிலையில், ‘உறைவிட’ என்ற சொல்லையே நீக்கிவிட்டு, உண்டு செல்லும் பள்ளி என்றுகூட மாற்றிவிடலாம் என்கின்றனர் செயல்பாட்டாளர்கள்.
- செயல்பட்டுவரும் விடுதிகளிலும் பல முறைகேடுகள் மண்டிக்கிடக்கின்றன என்று கூறப்படுகிறது.
குறைந்துவரும் எழுத்தறிவு
- விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப்பை, சீருடை, காலணிகள், பேருந்துப் பயண அட்டை, மிதிவண்டி, இடைநிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி உள்ளிட்டவை அரசால் பழங்குடியினப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
- ஆனாலும், அண்மைக் காலத்தில் தமிழகத்தின் பழங்குடியினரின் எழுத்தறிவு குறைந்துள்ளது. 1981-ல் முதன்முதலில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் காட்டி வேண்டுமானால் அன்று 20.6%ஆக இருந்த தமிழகப் பழங்குடியினரின் எழுத்தறிவு 2011-ல் 46.32%ஆக உயர்ந்துவிட்டது என்று கூறலாம்.
- ஆனால், உண்மை என்னவென்றால், 1991-2001வரை 5.59%ஆக இருந்த பழங்குடியினரின் எழுத்தறிவு வளர்ச்சி விகிதம், 2001-2011-ல் 4.65% ஆகக் குறைந்துவிட்டது.
குழந்தைத் தொழிலாளரும் திருமணமும்
- மலையில் பிழைக்க வழியின்றிச் சமவெளிக்கு வரும் பழங்குடி மக்கள், செங்கல்சூளையிலும் கரும்புத்தோட்டத்திலும் கூலித் தொழிலாளர்களாக அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
- அவர்களுடனே அடுத்த சந்ததியினரும் ஆண் குழந்தையெனில் குழந்தைத் தொழிலாளியாகவும் பெண் குழந்தையெனில் குழந்தைத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டும் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள்.
- இச்சமூகத்தைச் சேர்ந்த பள்ளி வயதுக் குழந்தைகளில் 32.3% பள்ளிக்கூடங்களுக்கு வெளியே இன்றும் இருக்கிறார்கள்.
- தமிழகத்தில் உள்ள 6-17 வயதுக்கு உட்பட்ட பழங்குடியினப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அனைத்திந்திய அளவுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது (தமிழகம்-32.3%, இந்தியா–29%). இதில் ஈவிரக்கமற்ற கரோனா காலமானது மேலும் பல பழங்குடியினக் குழந்தைகளைத் தொழிலாளிகளாக்கி, குழந்தைத் திருமணத்துக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது.
- தேசிய அளவில் பழங்குடியின மாணவர்களுக்கான கல்விச் செலவினத்தைத் தமிழகத்துடன் ஒப்பிடுகையில் மேலும் பல உண்மைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வருகின்றன. 5-29 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக்கான ஆண்டுச் செலவினம் குறித்து 2007-08-ல் நடத்தப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின்படி தேசிய அளவில் தலா ஒரு பழங்குடியின மாணவருக்கு ரூ.1,203 செலவிடப்பட்டது. தமிழகத்திலோ ரூ.750 மட்டுமே செலவிடப்பட்டது.
அழிவிலிருந்து மீட்க
- நிதி ஒதுக்கீடு, நிர்வாகம் சார்ந்த சிக்கல்கள் ஒருபுறம் இருக்க இத்துறையின் நிர்வாக அமைப்புக்கும் இதில் முக்கியமான பங்கு உண்டு என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
- பெரும்பாலும் அமைச்சர் முதல் பள்ளி விடுதிக் காப்பாளர் வரை அடித்தட்டுச் சமூகங்களிலிருந்து வந்தவர்களின் பொறுப்பிலேயே இத்துறையின் நிர்வாகம் ஒப்படைக்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது.
- ஆனாலும், இத்துறை முறைகேடுகளிலேயே சிக்கியிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
- மூன்று வேளை உணவு அளிக்கப்பட வேண்டிய உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு மதியம் ஒரு வேளை மட்டுமே உணவு தரப்படும் அவலம் நிகழும் என்றால், வெளியே பேசப்படும் சமூகநீதிக்கும் அமைப்பில் இடம்பெறும் பிரதிநிதிகள் உருவாக்கும் பணிக் கலாச்சாரத்துக்கும் இடையே உள்ள முரண்பாட்டை நாம் எப்படி விளங்கிக்கொள்வது?
- இத்துறையின் நிர்வாக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை இது உருவாக்குகிறது.
- விழிப்புணர்வற்ற பெற்றோர், கரிசனமற்ற ஆசிரியர்கள், ஊழலில் திளைப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஊழியர்கள் என்று சீரழிந்துகொண்டிருக்கும் பழங்குடி உண்டு உறைவிடப் பள்ளிகளையும் மாணவர்களையும் மீட்டெடுக்கப் பல்வேறு அடுக்குகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியது அரசின் கடமை.
- குறைந்தபட்சம் மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் திடீர் சோதனைகள் நடத்தினாலே ஊழலையும் முறைகேடுகளையும் தடுத்து நிறுத்த முடியும்.
- விடுதியை மட்டும் நலத் துறை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பள்ளி தொடர்பான அத்தனை செயல்பாடுகளையும் தமிழகக் கல்வித் துறை ஏற்பதே தீர்வை நோக்கிய முதல் அடி!
நன்றி : இந்து தமிழ் திசை (06-11-2020)