- பிறப்பும், இறப்பும் உலகின் அன்றாட நிகழ்வுகள்தான். அந்தந்த நபரின் குடும்பங்கள் சார்ந்த இயற்கை நிகழ்வு. ஆனால், அதுவே ஒரு பிரபலம் சார்ந்ததாக இருந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தையும் பெற்றுவிடுகிறது. அதுவும் குறிப்பாக பிரபலங்கள் அல்லது அவர்களைச் சார்ந்தோரின் மரணங்கள் நிகழும்போது அதன்மீது ஒட்டுமொத்த ஊடக வெளிச்சமும் பாய்ந்துவிடுகிறது. சில நேரங்களில் யார் முதலில் செய்தியை பிரேக் செய்வது என்பதில் ஏற்படும் போட்டா போட்டியில் உயிரோடு இருப்பவர் இறந்தவராக்கப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட நபர், தானே சமூக வலைதளத்தில் தான் நலமுடன் இருப்பதாக தன்னிலை விளக்கம் கொடுக்கும் சோகங்களும் அரங்கேறுகின்றன.
- அண்மையில் நடிகை ரம்யா பற்றிய போலிச் செய்தி இந்த விவகாரத்தில் புதிய ஒளியை பாய்ச்சியுள்ளது. ஊடக அறம் சார்ந்த வாத விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. இங்கேதான் மரணச் செய்தி விற்பனைக்கா என்ற கேள்வி எழுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். செய்தியை எப்போதும் உறுதி செய்த பின்னரே வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பது ஊடக தர்மம். அந்த அடிப்படை தர்மம் கேள்விக்குறியாகும் வகையில் அண்மைக்கால செய்திகள் இருப்பதாக அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
- மரணம் ஒரு குடும்பத்தின் வேதனை. அந்தக் குடும்பம் வேதனையில் இருக்கும்போது ஊடகங்கள் அவர்களைத் துரத்தி துரத்தி செய்தியாக்குவதும், அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் காட்சியாக்குவதும் அபத்தம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
- பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மறைவு பற்றி ஒரு தொலைக்காட்சியில் பேசிய இன்னொரு பிரபலம், சமீபத்தில் வந்த நடிகை ரம்யா செய்திபோல் இதுவும் போலியானதாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று கூறினார். அவர் சொல்வதைப் போலத் தான் பிரபலங்கள் / அவர்களைச் சார்ந்தோரின் மரணச் செய்திகள் இன்றைய காலகட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சென்சிடிவ் vs சென்சேஷனல்
- மரணச் செய்திகள் சார்ந்த பிரேக்கிங் நியூஸை கையாள்வதில் போதிய விழிப்புணர்வு பற்றாக்குறை இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்புகின்றனர். "சில செய்திகள் குறிப்பாக மரணச் செய்திகள், வன்முறைச் செய்திகள், தற்கொலைச் செய்திகள் எல்லாம் மிகமிக பக்குவமாக நிதானமாகக் கையாளப்பட வேண்டும். அத்தகைய செய்திகளைப் பரபரப்புச் செய்திகளாக்குவது கூடாது" என்பதே மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் வலியுறுத்தலாக உள்ளது.
- அதுபோல் குழந்தைகளின் தற்கொலைகள், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பிற வன்முறைகள் நிகழும்போது தற்கொலையால் இறந்த குழந்தையின் புகைப்படமோ அல்லது வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தையோ வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.
- இதுகுறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அண்மையில் தற்கொலையால் உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தை ஊடகங்கள் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் அதன் ஆழமான அக்கறையை வெளிப்படுத்துகிறது.
- செய்தி ஊடகங்கள் அன்றாடம் சமூகத்தில் நிகழும் முக்கியமான நிகழ்வுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பொறுப்பைக் கொண்டுள்ளன என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் இதுபோன்ற தருணங்களில் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படங்களைப் பகிரும்முன்னர் சில சட்ட நுணுக்கங்களையும், தர்மங்களையும் கருத்தில் கொள்ளும்படி நாங்கள் வேண்டுகிறோம்.
- இன்றைய நிகழ்வில், அந்தப் பிரபல இசையமைப்பாளரின் மகள், மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்தார். அதனால் அவர் தற்கொலையால் இறந்துள்ளார். இந்த நிகழ்வு மனநலம் சார்ந்து மிகப்பெரிய அளவில் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையே உணர்த்துகிறது. அதேவேளையில் அந்தச் சிறுமி வெறும் செய்திக்கான கரு மட்டுமே இல்லை என்பதை உணர வேண்டும். அவர் ஒரு மனித உயிராக இருந்தவர். அவர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார். அப்படியிருக்க பாதிக்கப்பட்ட அந்த நபரின் அடையாளத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது என்பது சக மனிதர் மீதான அனுதாபமற்ற செயல் என்பதையும் கடந்து ஜுவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட்- 2015-ன் படி குற்றமாகும்.
- இந்தச் சட்டம், எந்தவித துன்புறுத்தல், குற்றம், தற்கொலை உட்பட எதில் ஒரு குழந்தை பாதிக்கப் பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை வெளியிடுவதை தடை செய்கிறது. எனவே, அத்தகைய பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்வதன் மூலம் நீங்கள் அந்தக் குழந்தையின் குடும்பத்துக்கு உணர்வுபூர்வமான அழுத்தத்தை தருகிறீர்கள். இது சட்டவிரோதமானதும் கூட.
- எனவே, ஊடகங்கள் சிறுமியின் புகைப்படத்தை வெளியிடுவதைத் தவிர்த்து. குழந்தையின் குடும்பத்தினரின் மாண்பையும், தனி உரிமையையும் மதித்து பொறுப்புடன் செயல்படுமாறு வேண்டுகிறோம். அதேவேளையில் இந்தச் சம்பவத்தை ஒட்டி மனநலம் சார்ந்த விழிப்புணர்வை முன்னெடுக்கவும் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் மாண்பைக் குலைக்கும் சமூக வலைதளங்கள்
- குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகையில், "செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் இதுபோன்ற செய்திகளைக் கையாள்வதில் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். இன்றைய சமூக வலைதளங்கள், குறிப்பாக யூடியூப் தளங்கள் குழந்தைகளின் மாண்பைக் குலைப்பதில் பெருமளவில் செய்கின்றன என்பதை மிகுந்த வேதனையுடன் பகிர்கிறேன்.
- இன்றைய நிகழ்வையே எடுத்துக் கொள்வோம். காலையில் கண் விழித்ததும் நான் பார்த்தது அந்தக் குழந்தையின் புகைப்படம்தான். அந்தக் குழந்தை தூக்கிட்டு ஒருமுறை தற்கொலை செய்து கொண்டது. ஆனால் ஊடகங்கள் அக்குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு ஒவ்வொரு முறையும் கொலை செய்து கொண்டிருக்கிறது. இறந்துபோன, பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டால்தான் உங்கள் பத்திரிகை விற்குமா அல்லது தொலைக்காட்சி வியாபாரமாகுமா என்பதுதான் எனது கேள்வி. அதேபோல் ஒருவேளை இறந்துபோன குழந்தை தங்கள் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்திருந்தாலும் ஊடகங்கள் இப்படித்தான் அணுகுமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.
- குழந்தைகள் தொடர்பான செய்திகளில் ஏன் புகைப்படம், பெயர் அடையாளத்தை வெளியிடக் கூடாது எனச் சொல்கிறோம் என்றால், அது அந்தக் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், குழந்தையின் பள்ளி, அந்தக் குழந்தையின் தெருவில் உள்ளவர்கள், அந்தக் குழந்தையின் வயது ஒத்த குழந்தைகள் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் உணர வேண்டும். காஷ்மீர் சிறுமி சம்பவத்தில் அந்தச் சிறுமியின் பெயரைக் குறிப்பிட்ட தடை விதிக்கப்பட்ட பின்னர் ஓர் ஊடகம் அந்தச் சிறுமியின் ஊரைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது. அதற்காக உச்ச நீதிமன்றம் அந்த ஊடகத்துக்கு அபராதம் விதித்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
- குழந்தைகள் பற்றிய செய்தியைச் சொல்லும்போது முதலில் குழந்தைகளை குழந்தைகளாகப் பாருங்கள். பின்னர் குழந்தையின் சிறந்த நலன் சார்ந்து அதை அணுகுங்கள். இறுதியாக போக்சோ, சிறார் நீதி உள்ளிட்ட சட்டங்கள் என்ன சொல்கிறது என்பதை அறிந்து ரிப்போர்ட் செய்யுங்கள். இப்படியாக நாம் பொறுப்புணர்ந்து சொல்வது சமூக மாற்றத்துக்கான முயற்சி. நாகரிக சமூகத்தில் வாழும் நாம் இந்த முயற்சியை எடுத்துக் கொண்டே இருப்போமாக" என்றார்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2023)