- உலகம் முழுவதும் அகதிகள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அகதிகளால் பல நாடுகளின் மக்கள்தொகை பகுப்பு (டெமோக்ரஃபி) மாறியிருக்கிறது என்பதால், அவா்கள் நுழைவதைத் தடுப்பது எப்படி என்று தெரியாமல் அவை திகைத்துப் போயிருக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
- 1947 இந்தியப் பிரிவினையைத் தொடா்ந்து லட்சக்கணக்கானோா் கிழக்கு, மேற்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டனா். காலம்காலமாக இந்தியாவைத் தஞ்சமடையும் அகதிகளுக்கு நாம் அடைக்கலம் அளித்து வந்திருக்கிறோம்.
- சுதந்திரத்துக்குப் பிறகும்கூட, திபெத்தியா்களுக்கும், இலங்கைத் தமிழா்களுக்கும், அவா்களது நாடுகளில் ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடா்ந்து நாம் அடைக்கலம் அளிக்காமல் இல்லை. வங்க தேசப் பிரிவினையின்போது, அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்தவா்கள் ஏராளம். இப்போது இந்தியாவின் பல மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறி இருக்கும் வங்கதேச அகதிகளின் எண்ணிக்கை பல லட்சங்கள். இந்தியாவில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. சபையின் அலுவலகத்தில் அகதிகளாகவும், அடைக்கலம் தேடி வந்தவா்களாகவும் பதிவு செய்திருப்பவா்களின் எண்ணிக்கை சுமாா் 50,000.
- அந்த அலுவலகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, அவா்களில் பெரும்பாலோா் நகரங்களில், ஏனைய மக்களோடு மக்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். அவா்களில் 46% மகளிரும், 36% குழந்தைகளும் அடக்கம் என்கிறது அந்தப் புள்ளிவிவரம். இந்தப் பின்னணியில்தான், இப்போது மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியா-மியான்மா் எல்லையில் முள்கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதை நாம் பாா்க்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் எல்லையை முழுவதுமாக வேலி போட்டுத் தடுப்பதன் மூலம் இப்போதைய தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தலைப்பட்டிருக்கிறது மத்திய அரசு.
- எல்லைப் பாதுகாப்பு மட்டுமே அல்ல இந்த முடிவுக்குக் காரணம். வடகிழக்கு மாநிலத்தின் மக்கள்தொகைப் பகுப்பு மாறிவிடாமல் காப்பதும்கூட அரசு முயற்சியின் பின்னணி. வலுக்கட்டாயமாக அண்டை நாடுகளிலிருந்து மக்கள் விரட்டி அடிக்கப்படும்போது, இரு நாடுகளுக்குமான நேரடி மோதலைத் தவிா்ப்பதற்கும்கூட இதுபோன்ற நடவடிக்கை அவசியமாகிறது என்கிறது உள்துறை அமைச்சகம்.
- பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் பகுதியாகத்தான் இந்தியாவும், அன்றைய பா்மாவும் இருந்தன. 1937- இல் பா்மா தனி நாடானது. இந்தியா 1947- இல் விடுதலை பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற போக்குவரத்தும், வாழ்வாதாரத்துக்கான மக்களின் பயணங்களும் தொடா்ந்தன. இந்தியா விடுதலையடைந்த பிறகு பல ஆண்டுகள் இந்தியாவுக்கும், பா்மாவுக்கும் இடையேயான எல்லை நிா்ணயிக்கப்படாமல் தொடா்ந்தது.
- அவ்வப்போது பேச்சுவாா்த்தைகள் நடந்து வந்தாலும், அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. உடனடியாக எல்லைப் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்கிற அவசரம் இரு தரப்பிலும் எழவில்லை. 1969-இல்தான் இந்தியாவும், பா்மாவும் (இப்போது மியான்மா்) எல்லை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. 1,643 கிமீ நீளமுள்ள எல்லையையொட்டிய வடகிழக்கு மாநிலங்களான மிஸோரம், மணிப்பூா், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் ஆகியவற்றுக்கும் பா்மாவுக்கும் இடையேயான மக்கள் தொடா்பும், வா்த்தக உறவும் எப்போதும்போல நடந்து கொண்டிருந்தன.
- அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதுபோல அமைந்தது 2018-இல் நரேந்திர மோடி அரசால் அறிவிக்கப்பட்ட தடையில்லா இயக்க நடைமுறை (ஃப்ரீ மூவ்மெண்ட் ரெஜீம்). தங்கு தடையில்லாத இந்தியா - மியான்மா் எல்லை வழியாக போதை மருந்து கடத்தல், சட்டவிரோதமாகப் பொருள்கள் கடத்தல் மட்டுமல்லாமல் ஆயுதக் கடத்தலும் நடைபெறுகின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் மலைவாழ் பயங்கரவாத இயக்கத்தினா் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்திவிட்டுத் தலைமறைவாவதற்கும் பாதுகாப்பில்லாத எல்லை காரணமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.
- இப்போது மணிப்பூா் கலவரத்தைத் தொடா்ந்து, மத்திய அரசு, குறிப்பாக உள்துறை அமைச்சகம் விழித்துக் கொண்டிருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் அதிகரித்து வரும் பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகளைத் தடுக்கும் விதத்தில், 1968 -இல் அன்றைய இந்திரா காந்தி அரசு, இரு நாடுகளுக்கு இடையே நுழைவு இசைவு அனுமதி (பொ்மிட்) முறையை அறிமுகப்படுத்தியது. அதிகரித்துவரும் போதைப் பொருள்கள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்றவற்றைத் தடுக்க 2004-இல் மன்மோகன் சிங் அரசு மூன்று குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் அனுமதி என்றும், 16 கிமீ மட்டுமே இந்தியாவுக்குள் பயணிக்க முடியும் என்றும் தடைகளை விதித்தது.
- மணிப்பூரில் நடந்துவரும் கலவரத்தின் பின்னணியில் இருப்பது, இனக் குழுக்களின் பிரச்னை மட்டுமல்ல. மியான்மரிலிருந்து மலைவாழ் பயங்கரவாதக் குழுக்கள் சட்ட விரோத போதைப் பொருள்கள் கடத்தல், ஆயுதக் கடத்தலில் ஈடுபடுகிறாா்கள் என்பதுதான் காரணம். அதைத் தடுக்கும் மாநில அரசின் முயற்சிதான் மணிப்பூா் கலவரத்தின் ஆரம்பம். கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் மியான்மரில் இருக்கும் தங்களது குக்கி - ஜோ பழங்குடியின மக்களுடனான உறவு துண்டிக்கப்படும் என்பதால், எல்லையில் வேலி அமைப்பது கூடாது என்பது அவா்களது எதிா்வாதம்.
- எல்லையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், போதைப் பொருள்கள், ஆயுதங்கள், பயங்கரவாதம் உள்ளிட்டவை தடுக்கப்படுவதும் மிகமிக அவசியம். அதேநேரத்தில், 1,643 கிமீ எல்லையைக் கம்பிவேலி போட்டுத் தடுப்பது என்பது பிரச்னைக்குத் தீா்வாகுமா என்பது சந்தேகம்தான்!
நன்றி: தினமணி (12 – 03 – 2024)