TNPSC Thervupettagam

இந்த ஆண்டின் சொல் எது?

November 25 , 2020 1341 days 686 0
  • ஆக்ஸ்ஃபோர்டு அகராதிக் குழுவினர் கடந்த 2004-லிருந்து ஆண்டுதோறும் ‘இந்த ஆண்டின் சொல்’ என்று ஒரு தெரிவைச் செய்து வருகிறார்கள்.
  • முதன்முறையாக இந்த ஆண்டில் ஒரே ஒரு சொல்லை மட்டும் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் கரோனா பெருந் தொற்றுதான்.
  • இங்கிலாந்து ஆங்கிலத்துக்கென்று ஒரு சொல்லையும், அமெரிக்க ஆங்கிலத்துக்கென்று ஒரு சொல்லையும் இந்த அகராதிக் குழு தேர்ந்தெடுக்கும். பல நேரங்களில் இரண்டு வகைகளுக்கும் பொதுவாக ஒரே சொல்லையும் தேர்ந்தெடுப்பதுண்டு.
  • ‘Chav’, ‘sudoku’ போன்றவற்றில் ஆரம்பித்து ‘selfie’, ‘post-truth‘ போன்றவை கடந்த ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிலவாகும். 2015-ல் ‘கண்ணீருடன் சிரிக்கும் முகம்’ என்ற இமோஜியை முதன்முதலாகச் சொல்லாக மட்டுமல்லாமல், அந்த ஆண்டின் சொல்லாகவும் ஆக்ஸ்ஃபோர்டு அங்கீகரித்தது.
  • பருவநிலை மாற்றம் கடும் விளைவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் கடந்த ஆண்டு ‘climate emergency’ (பருவகால நெருக்கடிநிலை) என்ற சொல் ‘2019-ன் சொல்’லாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • ஆனால், இந்த ஆண்டு மற்ற எல்லா சொற்களையும் விட கரோனா தொடர்பான சொற்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் உலக மொழிகள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றன.
  •  ‘கரோனாவைரஸ்’ (Coronavirus) என்ற சொல் 1968-ல் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டில்தான் அதன் பயன்பாடு நம்பவே முடியாத வகையில் அதிகரித்திருக்கிறது.
  • ‘Pandemic’ (பெருந்தொற்று) என்ற சொல்லின் பயன்பாடு 57,000% அதிகரித்திருக்கிறது. ‘Social distancing’ (தனிமனித இடைவெளி), ‘flatten the curve’ (வீச்சைக் குறைத்தல்), ‘quarantine’ (தனிமைப்படுத்துதல்) போன்ற சொற்களெல்லாம் அனைவரும் பயன்படுத்தும் சொற்களாக ஆகிவிட்டன.
  • இப்படியாக, ஆக்ஸ்ஃபோர்டு குழுவினரால் ஒற்றைச் சொல்லை மட்டும் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
  • தமிழில்கூட கரோனா, கொள்ளைநோய், பெருந்தொற்று, சமூக இடைவெளி (அல்லது) தனிமனித இடைவெளி, தனிமைப்படுத்திக்கொள்ளுதல், முகக்கவசம் போன்ற சொற்களின் பயன்பாடு பன்மடங்கு பெருகிவிட்டது.
  • ‘Social distancing’ என்ற சொல்லுக்கு சமூக இடைவெளி என்ற சொல் ஆரம்பத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. நம் சமூகத்தில் ஏற்கெனவே தீண்டாமை என்ற பெயரில் ஒரு சமூக இடைவெளி இருப்பதால் அதற்கு மாறாக ‘தனிமனித இடைவெளி’ என்ற சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்து அதுவும் பரலான புழக்கத்தில் இருக்கிறது.
  • எந்தச் சொல்லும் சமூகத்தின் போக்கிலிருந்தும் அதன் பாதிப்புகள், விளைவுகள் போன்றவற்றிலிருந்தும்தான் பிறக்கிறது. கரோனா தொடர்பான சொற்களும் அப்படித்தான் உருவாகியிருக்கின்றன.
  • கரோனா சமூகத்தை மட்டுமல்ல மொழியியலாளர்கள், அகராதியியலாளர்கள் போன்றோரையும் திணற வைத்திருப்பதன் அடையாளம்தான் ‘இந்த ஆண்டின் சொல்’ என்று ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தனியாகத் தேர்ந்தெடுக்காதது.
  • அடுத்த ஆண்டில் கரோனாவிலிருந்து இவ்வுலகை மீட்கும் மருந்தொன்றின் பெயரை ‘2021-ன் சொல்’லாக ஆக்ஸ்ஃபோர்டு தேர்ந்தெடுக்கும் என்று நம்புவோம்.

நன்றி : இந்து தமிழ் திசை (25-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்