TNPSC Thervupettagam

இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?

July 14 , 2024 182 days 187 0
  • இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகிய மூன்றுக்கும் பதிலாக, இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதங்களுக்குப் பிறகு (எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கு கொள்ளாமல் புறக்கணித்தன) மூன்று புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன; புதிய மசோதாக்கள் இந்தியில் (அல்லது சம்ஸ்கிருதம்) பெயர் தாங்கிவந்தன, அதன் ஆங்கில வடிவில்கூட அதே பெயர்கள்தான் இருக்கின்றன.
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார் குடியரசுத் தலைவர். ‘2024 ஜூலை 1 முதல் இவை அமலுக்கு வரும்’ என்று ஒன்றிய அரசும் அறிவிக்கை வெளியிட்டுவிட்டது.
  • புதிய சட்டங்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எதிர்ப்புக்கான காரணங்கள் ‘பொருத்தமற்றவை’, ‘உள்நோக்கம் கொண்டவை’ என்று அரசு நிராகரித்துவிட்டது. புதிய சட்டங்களை நிறைவேற்றியே தீருவது என்று அரசு விடாப்பிடியாக இருந்தாலும், தொடர்ந்து எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகளும் தயங்காது.
  • ‘ஒன்றிய அரசின்’ இந்தச் சட்டங்களுக்கு, தங்களுடைய மாநிலத்தில் திருத்தங்களைச் செய்த பிறகே அமல் செய்வோம் என்று இரண்டு மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்தச் சட்டங்களுக்கு உரிய திருத்தங்களை ஒரு மாதத்துக்குள் பரிந்துரை செய்யுமாறு ஒரு நபர் ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது.
  • கர்நாடகமும் வேறு சில மாநிலங்களும் இதே வழியைப் பின்பற்றக்கூடும். எனவே, இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளையும், எதிர்ப்பு ஏன் என்ற விளக்கத்தையும் மக்கள் முன்வைத்து, அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும் என்ற நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

பொதுப் பட்டியல் விவகாரம்

  • குற்றவியல் சட்டம் என்பது அரசமைப்புச் சட்டப்படி, ஒன்றிய அரசு – மாநில அரசுகள் ஆகியவற்றுக்கான பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றமும் மாநில சட்டமன்றங்களும் சட்டம் இயற்றிக்கொள்ளலாம். நாடாளுமன்றம் இயற்றும் சட்டமும் மாநில அரசுகள் இயற்றும் சட்டமும் எதிரெதிர் நிலையை வகிக்குமென்றால், அரசமைப்புச் சட்டத்தின் 254வது பிரிவின் கீழ் இறுதி முடிவெடுக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.
  • மாநில அரசுகளும் சட்டம் இயற்றி, அந்தச் சட்டங்கள் ஒன்றிய சட்டத்துக்கு எதிராக இருந்து, அதற்கு ஒப்புதல் தர குடியரசுத் தலைவர் மறுக்கும்போதுதான் அரசமைப்புச் சட்டத்தின் 254வது பிரிவுக்கு வேலை வரும்.
  • புதிய சட்டங்களை எதிர்ப்போர் எழுப்பும் கேள்விகளுக்குச் செவிமடுத்து, அதற்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக ஒன்றிய அரசு இந்தக் கேள்விகளுக்கான பதிலை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அளிக்க மறுக்கிறது. கேள்விகள் இதோ:
  • 1. புதிய மூன்று சட்டங்களின் பெரும்பகுதி, நீக்கப்பட்ட பழைய சட்டங்களிலிருந்து அப்படியே எடுக்கப்பட்டு ‘வெட்டியும் ஒட்டியும்தான்’ உருவாக்கப்பட்டுள்ளன என்பது சரிதானா? புதிய சட்டங்களில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றிலிருந்து 90 முதல் 95% வரையிலும், சாட்சியச் சட்டத்திலிருந்து 95 முதல் 99% வரையிலும் அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கிறது - ஆனால் பிரிவுகளின் எண்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது என்பது சரிதானா? ஏற்கெனவே உள்ள சட்டங்களில் சிறிய அளவில் சேர்க்கை அல்லது நீக்கம் தேவைப்பட்டால் அதைச் சட்டத் திருத்தங்கள் மூலமே செய்திருக்கலாம் அல்லவா? ‘காலனி ஆதிக்க பாரம்பரியத்தைத் தூக்கி எறிந்துவிட்டோம்’ என்று அரசு கூறிக்கொள்வது வெற்றுப் பெருமை அல்லவா?
  • 2. குற்றவியல் சட்டங்களை முழுமையாக மறுபரிசீலனைக்கு உள்படுத்தி அதை முற்றாக மாற்றியமைப்பது அரசின் நோக்கம் என்றால், காலங்காலமாக அந்தப் பொறுப்பை நிறைவேற்றிவரும் சட்ட ஆணையத்திடம் அளித்து, சீர்திருத்தும் நடைமுறையை ஏன் பின்பற்றியிருக்கக் கூடாது? இந்தச் சட்டங்களுடன் தொடர்புள்ள அனைத்து தரப்புடனும் ஆலோசனை கலந்து, அவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் ஆராய்ந்து, உரிய பரிந்துரைகளைத் தொகுத்து வரைவு சட்ட மசோதாக்களையும் தயாரித்து அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் சட்ட ஆணையம் வழங்கி இருக்கும் அல்லவா? சட்ட ஆணையத்தின் உதவி ஏன் நாடப்படவில்லை? சட்டம் இயற்றல் தொடர்பாக, சிறு குழுவிடம் (பகுதி நேர உறுப்பினர்கள்) ஏன் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது? அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள், பல்கலைக்கழகங்களில் முழுநேரப் பேராசிரியர்களாகப் பணிபுரிகிறவர்களாயிற்றே?
  • 3. புதிய சட்டங்கள், குற்றவியல் நீதி வழங்கல் தொடர்பான நவீனக் கொள்கைகளுடன் இயைந்து செயல்படும் தன்மையுள்ளவையா? கடந்த பத்தாண்டுகளில் முக்கியமான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த, குறிப்பிடத்தக்க தீர்ப்புகளின் அம்சங்களைக் கொண்ட முற்போக்குக் கொள்கைகளைப் புதிய சட்டம் அங்கீகரித்து, தனக்குள்ளே பொதிந்துவைத்திருக்கிறதா? உச்ச நீதிமன்றமே வழங்கிய சில தீர்ப்புகளுக்கு முரணான அம்சங்களுடன் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளனவா?
  • 4. ஜனநாயகம் பின்பற்றப்படும் பல நாடுகளில் வழக்கொழிந்துவிட்ட ‘மரண தண்டனை’ ஏன் புதிய சட்டத்திலும் தக்கவைக்கப்பட்டிருக்கிறது? மிகவும் கொடூரமானதும் - மனிதாபிமானம் அற்றதுமான ‘தனிமைச் சிறை’ என்ற தண்டனை ஏன் அறிமுகப்படுத்தப்படுகிறது? ‘பிறர் மனை நயத்தல்’ (கூடா ஒழுக்கம்) (Adultery) என்பது ஏன் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றமாக மீண்டும் கொண்டுவரப்படுகிறது? அவதூறாகப் பேசுவதை ‘குற்றவியல் சட்டப்படி’ தண்டனைக்குரிய குற்றமாக தக்கவைப்பது அவசியமா? அவதூறு வழக்கில் புகார்செய்வதற்குக் கால வரம்பு நிர்ணயித்திருக்க வேண்டாமா? இன்னொருவரின் ஒப்புதலின்றி, ‘தன்பாலினத்தவர்’ உறவுகொள்வது குற்றமில்லை என்று ஏன் மாற்றப்பட்டுள்ளது? ‘சமுதாய சேவை’ (Community Service) ஒரு தண்டனை என்று குறிப்பிட்டுள்ளபோது, அது எப்படிப்பட்டது என்ற விளக்கம் அல்லது உதாரணம் தந்திருக்க வேண்டாமா?
  • 5. அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுதல் (Sedition) என்ற பிரிவு ஏன் விரிவுபடுத்தப்பட்டு, தக்கவைக்கப்பட்டுள்ளது? ‘பயங்கரவாதம்’ என்ற குற்றம் ஏன், பொதுவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் கொண்டுவரப்படுகிறது – ‘சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்’ என்ற தனிப்பிரிவு அதற்கென்று இருக்கிறதே? தேர்தல் தொடர்பான குற்றங்கள் ஏன் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன? மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 என்று சிறப்புச் சட்டங்கள் அதற்கென்று இருக்கின்றனவே?
  • 6. ஒருவரைக் கைதுசெய்யவும் போலீஸ் காவலில் வைத்துக்கொள்ளவும் புதிய சட்டங்கள் அதிக உரிமையைத் தருகின்றன அல்லவா? ‘ஒருவரைக் கைதுசெய்யலாம் என்று சட்டம் தரும் அதிகாரம், எல்லா சந்தர்ப்பங்களிலும் கைதுசெய்தே தீர வேண்டும் என்பதற்கில்லை’ என்று உச்ச நீதிமன்றம் சமீபத்திய வழக்குகளில் தெரிவித்துவரும் கருத்தை, புதிய சட்டங்கள் அலட்சியப்படுத்துகின்றனவா? ‘கைது என்பது விதிவிலக்காகவும் – பிணை என்பது நடைமுறையாகவும் இருக்க வேண்டும்’ என்பதைச் சட்டத்தில் வெளிப்படையாக சேர்ப்பது அவசியமில்லையா? குற்றஞ்சாட்டப்படுகிறவரைக் கைதுசெய்வது ‘சட்டப்படியும்’, ‘வழக்கின் தன்மைப்படியும்’ அவசியமா என்பதை மாஜிஸ்திரேட் முடிவுசெய்யட்டும் என்று சட்டம் அனுமதிக்கலாம்தானே? கைதுக்குப் பிறகு 40 முதல் 60 நாள்கள் ஆன நிலையிலும், பிணை விடுதலை தர மாஜிஸ்திரேட் மறுப்பு சொல்லலாம் என்ற பிரிவு அவசியமா?
  • 7. குற்றம் எங்கு நடந்திருந்தாலும் இந்தியாவின் எந்தக் காவல் நிலையத்திலும் ‘முதல் தகவல் அறிக்கை’ பதிவுசெய்யலாம் என்ற பிரிவு, அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதா? ‘காவல் துறை’ என்பது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருக்கும்போது, குற்றஞ்சாட்டப்பட்டவரை வேறு மாநிலக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்துவது சட்டப்படிச் செல்லாது என்றாகிவிடாதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமே ‘கூட்டாட்சி’ (கூட்டரசு) என்று இருக்கும்போது, இந்தப் பிரிவு அந்தக் கொள்கைக்கு முரணாக இருக்காதா?
  • இவ்வாறாக புதிய சட்டங்கள் குறித்து ஏராளமான கேள்விகள். இந்தக் கேள்விகளைக் கேட்கவும், பதில்களைப் பெறவும் உரிய இடம் எது? இந்தக் கேள்விகளுக்கு அரசிலிருந்து எவருமே பதில் சொல்லவில்லை, அதனால் இந்தக் கேள்விகள் மறைந்துவிடாது. இருப்பினும் தண்டனைச் சட்டப்படி நீதி வழங்கலுக்கு மிகவும் அவசியமான இந்தச் சட்டங்கள் ‘நடைமுறைக்கு வந்துவிட்டன’. ‘சிலருக்காக’ – ‘சிலரால்’ நடத்தப்படும் அரசு என்பதற்கு இது நல்லதோர் உதாரணம்!

நன்றி: அருஞ்சொல் (14 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்